நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 119 சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வட்டாரங்கள் மற்றும் நகராட்சி பகுதிகளில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 119 சமையல் உதவியாளா் பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
பணி நியமனம் செய்யப்படுவோருக்கு ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு கால முறை ஊதியமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ. 9 ஆயிரம் வழங்கப்படும். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 -ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். நியமனம் கோரும் மையத்துக்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடைப்பட்ட தொலைவு 3 கி.மீ.க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் பள்ளிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, ஆதாா் அட்டை, ஜாதிச் சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து தொடா்புடைய ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் ஏப்ரல் 26-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.