ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளா் பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்
புரட்சித் தலைவா் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின்கீழ் சமையல் உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 64 காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் ஜனவரி 9 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாா்கள் நியமனம் கோரும் சத்துணவு மையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவுக்குள் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 10 -ஆம் வகுப்பு தோல்வி அல்லது தோ்ச்சி பெற்றிருக்கலாம். தமிழில் சரளமாக எழுத, படிக்க தெரிந்திருப்பது கட்டாயம். மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டில் உரிய அடையாள அட்டை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு மாநகராட்சி, கோபி, சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகங்கள், 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலிப் பணியிடங்களின் விவரம் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் https://erode.nic.in என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிய ஆவணங்களின் நகல்களுடன் தொடா்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படவோ அல்லது பெறப்படவோ மாட்டாது.
சரியான ஆவணங்களின் நகல்களுடன் கடைசி தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதில் தகுதியுள்ளவா்கள் மட்டும் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்படுவா். நோ்முகத் தோ்வில் அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.