25.2.1976: வறட்சி பகுதிகளில் கிஸ்தி, கடன் ஒத்திவைப்பு - கவர்னர் ஷா அறிவிப்பு
வறட்சி பகுதிகளில் கிஸ்தி, கடன் ஒத்திவைக்கப்பட்டது பற்றி...
கோயமுத்தூர், பிப். 24 - தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்லா கடன் தவணைகளும், கடன் பாக்கிகளும், கிஸ்தியும் வசூலிப்பது ஒத்திவைக்கப்படும் என்று மாநில கவர்னர் கே.கே ஷா இன்று அறிவித்தார். கிணறு வெட்ட வழங்கப்பட்ட கடன்கள், ஜலம் கிடைக்காவிடில் வஜா செய்யப்படும என்றும் அவர் அறிவித்தார்.
இரு நாட்கள் விஜயம் செய்யும் பொருட்டு இங்கு வந்த கவர்னர், கோயமுத்தூர் அருகில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட சில கிராமங்களைச் சுற்றிப் பார்த்தார். பல்வேறு இடங்களில் கிராம வாசிகள் இடையே பேசுகையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வறட்சி நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தார்,
குடிநீர் வசதி
Advertisement
அடுத்த 4 மாதங்களுக்குள் வறட்சியால் பாதிக்கப்பட்ட எல்லா பகுதிகளிலும் அரசு நிரந்தர குடிநீர் வசதி செய்து தரும் என்று ஷா கூறினார். பண விரயத்தை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீடித்த வேலையளிக்க நிரந்தர பணிகளை அரசு மேற்கொள்ளும் என்றார்.
அரசு வறட்சி நிவாரண வேலைகளில் விவசாயத் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
கடன் தவணை ஒத்திவைப்பு வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கே பொருந்தும் என்று அவர் தெளிவாக்கினார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகள் கவர்னரிடம் நூற்றுக்கணக்கான மனுக்களைக் கொடுத்தனர். குடிநீர், பாசன வசதி, ரஸ்தா அமைப்பு, கடன் வஜா, விவசாயம் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, குளம் அமைப்பு முதலிய கோரிக்கைககள் அவற்றில் இருந்தன.
சாத்யமான இடங்களில் எல்லா காலத்துக்கும் ஏற்ற ரஸ்தாக்களை அமைக்க சுவர்னர் உறுதி கூறினார்.
பாண்டியாறு திட்டம்
கோயமுத்தூர், பல்லடம், அவினாசி தாலூகாக்களுக்கு நிரந்தர பாசன வசதி அளிப்பதற்காக பாண்டியாறு - புன்னம்புழா திட்ட சாத்யக்கூறுகளை மாநில அரசு பரிசீலிக்கும் என கவர்னர் அறிவித்தார்.
ஜல கஷ்டத்தால் அவதிப்படும் இந்த மூன்று தாலூகா மக்களுக்கு நிவாரணமளிக்க தன்னால் இயன்றதைச் செய்வதாக அவர் கூறினர்.
கம்ப்யூட்டர் முறை அச்சுக் கோப்பு பெங்களூரில் ஆரம்பம்
பெங்களூர், பிப். 24 - கம்ப்யூட்டர் முறையில் அச்சுக் கோர்க்கும் திட்டம் ஒன்றை பிரிட்டனின் மாஜி பிரதமர் ஹாரோல்டு மாக்மில்லன் இன்று இங்கு ஆரம்பித்து வைத்தார்.
இது ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்டது. ரூ. 40 லட்சம் முதலீட்டில் இது நிறைவேற்றப்படுகிறது.
மாக்மில்லன் ஒரு பிரிட்டிஷ் பிரசுர நிறுவனத்தின் தலைவருமாவார். அவர் சென்னையிலிருந்து இன்று இங்கு இதற்காக வந்தார். மேற்கண்ட பிரசுர நிறுவனத்தின் இந்தியக்கிளை (முற்றிலும் இந்தியர்களால் நிருவகிக்கப்படுவது) இத்திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது.
மோனோ யந்திரங்களில் கம்போஸ் செய்யப்பட்டவைகளின் பிலிம் நெகட்டிவ்கள் முதலில் பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள பிரசுராலயங்களுக்கு சப்ளை செய்யப்படும். பின்பு ஒரு கட்டத்தில் அமெரிக்காவுக்கும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் சப்ளை செய்யப்படும். 1978லிருந்து ஆண்டுதோறும் இந்நிறுவனத்துக்கு ரூபாய் ஒரு கோடி லாபம் கிடைக்கும் என கம்பெனி எதிர்பார்க்கிறது.
வரும் ஏப்ரலிலிருந்து ஆரம்பமாகும் காலாண்டில் ஏற்றுமதிக்கான தயாரிப்பு ஆரம்பமாகும். இதனால் இந்தியாவுக்கு வெளி நாட்டுச் செலாவணி கிடைக்கும். இரண்டு ஆண்டுகளில் இந்தத் திட்டத்துக்கு ஆகும் செலவு ரூ. 80 லட்சம் ஆக உயரும். இந்தக் கம்பெனியானது உயர்ந்த, தரமான நூல்களை வெளியிட ஒவ்வொரு முயற்சியையும் மனப்பூர்வமாகச் செய்து வருகிறது என்று மாக்மில்லன் கூறினார்.