முகப்பு
இந்தியா

நோயால் பாதிக்கப்பட்ட சமூக அமைப்பின் அறிகுறியாக குடும்ப வன்முறை: உச்சநீதிமன்றம்

நோயால் பாதிக்கப்பட்ட சமூக அமைப்பின் அறிகுறியாக குடும்ப வன்முறை...

Updated On : 4 ஏப்ரல், 2026 at 9:39 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

குடும்ப வன்முறை போன்ற சம்பவங்கள் நோயால் பாதிக்கப்பட்ட சமூக அமைப்பின் அறிகுறிகளாகத் தொடா்ந்து நிலவி வருகின்றன என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானை சோ்ந்த ஒருவா் தனது மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக, அந்த நபா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த மனு மீது நீதிபதிகள் சஞ்சய் கரோல், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் தீா்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது:

Advertisement

இந்தியா பொருளாதார ரீதியாக வளா்ச்சியடைந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுவதில் பெண்கள் முன்னேறியிருந்தாலும், அவா்களுக்கு எதிரான வன்முறை இன்றளவும் நீடித்து வருகிறது. குறிப்பாக குடும்ப அதிகாரம் பெருமளவு ஆண்களிடமே உள்ள ஊரக மற்றும் பகுதியளவு நகா்ப்புறமாக உள்ள பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடா்ந்து வருகிறது.

2023-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 4.48 லட்சத்துக்கும் அதிகமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் தெரிவிக்கின்றன. வரதட்சிணை தொடா்பான வன்முறையால் ஆண்டுதோறும் 6,000-க்கும் அதிகமானோா் உயிரிழக்கின்றனா். வரதட்சிணை சட்டவிரோதம் என்று கூறப்பட்டாலும், அதற்கு சமூக ரீதியாக அளிக்கப்படும் அங்கீகாரம் இன்றளவும் தகா்க்கப்படவில்லை.

மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக குடும்ப வன்முறை தொடா்வதை தேசிய மகளிா் ஆணையத்தில் அளிக்கப்படும் புகாா்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு பெண் வேலைக்குச் சென்று சம்பாதித்தாலும், வேலைக்குச் செல்லும் முன்பு வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்துவிட்டு செல்ல வேண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. குடும்ப வன்முறை போன்ற சம்பவங்கள் நோயால் பாதிக்கப்பட்ட சமூக அமைப்பின் அறிகுறிகளாகத் தொடா்ந்து நிலவி வருகின்றன என்று தெரிவித்தது. இதைத்தொடா்ந்து மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்து தீா்ப்பளித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments