திருவனந்தபுரம், ஜன. 2 - தனியார் விமான கம்பெனிகள், பிரயாண சர்வீஸ்களை நடத்துவதற்காக 9 மார்க்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், இது சம்பந்தமாக அந்த கம்பெனிகளின் திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் மத்திய சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து மந்திரி திரு. ராஜ்பகதூர் இன்று இங்கு நிருபர்களிடம் தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவற்றில் பம்பாய் - கோலாப்பூர், கோழிக்கோடு - கொச்சி மார்க்கங்களும் அடங்கும்.
இந்த ஆண்டு மத்திக்குள் இது விஷயமாக இறுதி முடிவு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
திருவனந்தபுரம் விமான நிலையம்
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் போயிங் - 707 போன்ற பெரிய விமானங்கள் வந்திறங்கும் வகையில், அந்த விமான நிலைய ஓடுபாதையை விரிவுபடுத்த ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று திரு. ராஜ்பகதூர் தெரிவித்தார்.
மேற்படி விமான நிலையத்தில் டெர்மினல் கட்டிட விஸ்தரிப்பு பகுதியை திறந்து வைத்து அவர் பேசுகையில், அந்த வேலைக்கு ஏற்கனவே காண்ட்ராக்ட் அளிக்கப்பட்டிருக்கிறதென்றும், 1977-ம் ஆண்டிற்குள் வேலை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறதென்றும் கூறினார்.
பிப்ரவரி 2 (ஆம் தேதி) முதல் திருவனந்தபுரம் - மாலத்தீவு இடையே விமான சர்வீஸ் துவங்கப்படும் என்றும், இது வாரம் 3 தடவை நடைபெறும் சர்வீஸாக இருக்குமென்றும் சொன்னார்.
சென்னை, ஜன. 1 - சைகோனிலிருந்து (வியத்நாமிலுள்ள ஹோ சி மின் சிட்டியின் பழைய பெயர்) 145 அகதிகள் அநேகமாக தென் இந்தியர்கள் செஞ்சிலுவை விமானமொன்றில் இன்று மாலை இங்கு வந்து சேர்ந்தனர். இவர்களுடன் கூட செஞ்சிலுவை சங்க சர்வதேச கமிட்டி பிரதிநிதிகள் இருவரும் வந்துள்ளனர்.
இவர்களை விமான நிலையத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்க உப தலைவர் கர்னல் ஆர். டி. அய்யர் மற்றும் இதர அதிகாரிகள் வரவேற்றனர்.
இவர்கள் இங்கு தங்கி, சொந்த ஊர் செல்ல ஆகும் செலவை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஏற்றுக் கொள்ளும்.
111 பாகிஸ்தானிய அகதிகளும் இந்த விமானத்தில் வந்தனர். இவர்கள் கராச்சி செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.