13.1.1976  
அரை நூற்றாண்டுக்கு முன்

13.1.1976: பீகாரில் வரதட்சிணை வாங்காதவருக்கே அரசு வேலை - விதிகளை திருத்த பீகார் அரசு முடிவு: முதல்வர் தகவல்

பீகாரில் வரதட்சிணை வாங்காதவருக்கே அரசு வேலை என்ற விதிகள் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பாட்னா, ஜன. 11 - சர்க்கார் சர்வீஸ்கள், அரைகுறை சர்க்கார் ஸ்தாபனங்கள், மாநில சர்க்கார் உதவிபெறும் அல்லது நிதி உதவியளிக்கப்படும் கார்ப்பரேஷன்கள் இவைகளில் எந்த வேலைக்கும் மனுச் செய்யும் திருமணமானவர்கள், மாநிலத்தின் வரதட்சிணை ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு திருமணம் செய்து கொண்டிருக்கும்பட்சத்தில் தாங்கள் வரதட்சிணை எதுவும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ வாங்கவில்லை என உறுதிமொழி அறிக்கை ஒன்றை தங்கள் மனுக்களுடன் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.

இவ்வேலைகளுக்கு மனுச்செய்யும் திருமணமாகாதவர்கள் தாங்கள் திருமணம் செய்யும் போது வரதட்சிணை எதுவும் வாங்குவதில்லை என உறுதிமொழி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.

சமீபத்தில் சர்க்கார் செய்துள்ள இம்முடிவை அமல் நடத்துவதற்கு வேலைக்கு ஆள் சேர்க்கும் விதிகளில் தேவையான திருத்தங்கள் விரைவில் செய்யப்படும் என பீகார் முதன்மந்திரி டாக்டர் ஜகந்நாத்மிஸ்ரா இன்று நிருபர்களிடம் கூறினார்.

வரதட்சிணை ஒழிப்பு சட்டத்திற்கு “டிமிக்கி” கொடுக்கும் நோக்கத்துடன் மாநிலத்திற்கு வெளியே நடத்தப்படும் அல்லது நிச்சயிக்கப்படும் அல்லது பேரம் செய்யப்படும் எந்த திருமணமும் தற்போதுள்ள சட்டப்படி தண்டிக்கக்கூடிய குற்றமாகும் என்றார்.

மாநிலத்தில் வரதட்சிணை ஒழிப்பு சட்ட அமலுக்கு ஆதரவளிக்குமாறு மாணவர்கள், இளைஞர்கள், அறிஞர்கள், கிராமத்தலைவர்கள் ஆகியோரை முதன்மந்திரி கேட்டுக்கொண்டார்.

வறட்சிப் பகுதிகளில் நில வரி வஜா - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு - நிவாரணப் பணிகளுக்கு மேலும் ஒரு கோடி ரூபாய்

சென்னை, ஜன. 12 - பருவமழை தவறி வறட்சியால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, ராமநாதபுரம் ஜில்லாக்களின் பல பகுதிகளிலும் மதுரை, சேலம் ஜில்லாக்களின் சில சிறு பகுதிகளிலும் நிலத்தீர்வை தள்ளுபடி செய்யப்படும் என முதன்மந்திரி கருணாநிதி அறிவித்தார்.

மேற்குறித்த பகுதிகளில் இவ்வருஷ நிவாரண உதவிகளுக்காக ரூ. 1 கோடி விசேஷ மான்யம் ஒதுக்கிடப்பட்டிருக்கிறது என்றும் நிருபர்களிடம் இன்று கூறினார். இந்த ரூ. 1 கோடியில் ரூ. 50 லட்சம் கிராம கடன் உதவிகள் வழங்குவதற்கும், ரூ. 30 லட்சம் சாலைகளை அமைக்கும் பணிகளுக்கும், ரூ. 20 லட்சம் சிறிய பாசன அமைப்புகளை அபிவிருத்தி செய்யும் பணிகளுக்கும் செலவிடப்படும்.

குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் - வடிகால் வாரியமும், நில நீர் துறையினரும், மேற்குறித்த ஜில்லாக்களின் வறட்சிப் பகுதிகளில், கூட்டாக 500 ஆழ்துளைக் கிணறுகளை தோண்டுவர் என்றார் முதல்வர்.

ரெவினியூ போர்டின் சிபாரிசுப்படி, இந்தப் பணிகளை அரசு அனுமதித்திருக்கிறது என்றார்.

ரூபாயில் 25 பைசாவுக்கும் குறைவான விளைச்சல் கண்ட இடங்களில் கிஸ்தி வஜா செய்யும்படி அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் ரூபாய்க்கு 12 பைசாவுக்கு மேற்போகாத விளைச்சல் கண்டால் தான் கிஸ்தி வஜா அளிப்பது வழக்கம் என்றார்.

1500க்கு குறைவான ஜனத்தொகையுள்ள கிராமங்களில் சாலையமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் கிராமவாசிகளில் பலர் வேலை பெறுவர். இந்த நிவாரணப் பணிகள் அனைத்தையும் விரைவுடன் நிறைவேற்றும்படி சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றார் முதல்வர்.

13.1.1976: In Bihar, only those who do not accept dowry will be given government jobs - Bihar government decides to amend the rules: Chief Minister's statement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: புகாா் தெரிவிக்க எண்கள் வெளியீடு

கரூா் சம்பவம்: தில்லியில் விஜய்யிடம் சிபிஜ 6 மணிநேரங்களுக்கு மேல் விசாரணை!

தில்லி யமுனை நதியில் பிப்ரவரி முதல் ஆடம்பர கப்பல் பயணம அமைச்சா் கபில் மிஸ்ரா தகவல்

பிப்.1-இல் மத்திய நிதிநிலை அறிக்கை: ஓம் பிா்லா தகவல்

தேசிய நாடகப் பள்ளி மூலம் கோமல் தியேட்டரின் ‘திரெளபதி’ நாடகம் தோ்வு

SCROLL FOR NEXT