சென்னை, ஜன. 16 - தற்போதுள்ள தி.மு.க. சர்க்காரின் பதவிக் காலத்தை நீடிக்கும்படி மத்திய அரசைக்கோரும் தீர்மானம் ஒன்றை, தமிழ்நாடு அசெம்பிளியில் கொண்டுவந்து நிறைவேற்றும் உத்தேசம் எதுவும் இல்லை என்று முதன்மந்திரி திரு. கருணாநிதி இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஒரு கேள்விக்கு முதன்மந்திரி பதிலளிக்கையில், தேர்தல்களை நடத்தும்படி தி.மு.க. மாநில மகாநாடும், தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளும் குறிப்பான கோரிக்கை விடுத்துள்ளன என்றார். இது சம்பந்தமாக பிரதமருக்கு தந்திகளும் அனுப்பப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
“தற்போதுள்ள தி.மு.க. அரசின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டாம் என்று மட்டுமே தி.மு.க.வுக்கு எதிராக உள்ள கட்சிகள், பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், தேர்தல்களை நடத்தும்படி அவை வேண்டுகோள் விடுக்கவில்லை. அவ்வாறு அவை வேண்டுகோள் விடுத்திருந்தால், நான் அதிக மகிழ்ச்சியடைந்திருப்பேன்” என்று முதன்மந்திரி கூறினார்.
தமது அரசின் பதவிக்காலம் பூர்த்தியாவதற்கு முன், ராஜினாமா செய்து, அசெம்பிளியைக் கலைக்குமாறு கவர்னருக்குச் சிபாரிசு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.
புதிய கவர்னரை நியமிக்கும் போது, ராஜ்ய முதன்மந்திரியை மத்திய அரசு கலந்தாலோசிப்பது வழக்கமான நடைமுறை என்று ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் கூறினார். (தற்போதுள்ள கவர்னர் திரு. கே. ஷாவின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது).
இம்மாதம் 13 (ஆம் தேதி) கவர்னரைத் தாம் சந்தித்ததில் முக்கியத்துவம் எதுவும் கிடையாது என்று கூறிய திரு. கருணாநிதி, வாரத்தில் ஒரு முறை தாம் கவர்னரை சந்திப்பது வழக்கம் என்றும் 13 (ஆம் தேதி) சந்திப்பும் அத்தகையதே என்றும் குறிப்பிட்டார். ...
... நுங்கம்பாக்கத்தில் பிப்ரவரி 15, 16 (ஆம் தேதிகளில்) வள்ளுவர் கோட்டம் திறப்புவிழா நடைபெறவிருந்தது, பிப்ரவரி 22, 23 (ஆம் தேதிகளுக்கு) ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
கொழும்பு, ஜன. 16 - 1974ம் ஆண்டில் உலகத் தமிழ் மகாநாடு நடந்தபோது யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த 9 பேர் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை இரண்டாம் முறையாக சென்ற புதன்கிழமை யாரோ விஷமிகள் சேதப்படுத்தியுள்ளனர் என்று கொழும்புக்கு இன்று தகவல் கிடைத்துள்ளது.
ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் ஐக்கிய முன்னணி 1975 ஜனவரி 10 (ஆம் தேதி) இந்த நினைவுச் சின்னத்தை அமைத்தது. இனந்தெரியாத எவரோ மே மாதத்தில் இதை இடித்து நாசப்படுத்திவிட்டனர். பிறகு தமிழ் ஐக்கிய முன்னணி மீண்டும் இந்த நினைவுச் சின்னத்தைக் கட்டியது.
இப்பொழுது தமிழ் ஐக்கிய முன்னணி மீண்டும் இந்த நினைவுச் சின்னத்தைக் கட்ட முடிவு செய்துள்ளது.
1974 ஜனவரி 10 (ஆம் தேதி) உலகத் தமிழ் மகாநாட்டின் இறுதி நாள் கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளலில் இந்த 9 பேர் உயிரிழந்தனர்.
சர்க்கார் இது பற்றி விசாரணை நடத்தி மின்சாரம் தாக்குண்டதனாலேயே இவர்கள் இறந்ததாக முடிவு கட்டியது.
புதுடில்லி, ஜன. 16 - தமிழ்நாட்டின் 1976 - 77ம் ஆண்டிற்கான திட்ட முதலீடு ரூ. 177 கோடியாக இருக்கும்.
திட்டக் கமிஷனுடன் தமிழ்நாடு ரெவின்யூ மந்திரி திரு. எஸ். மாதவன் இன்று நடத்திய ஆலோசனையின் போது, இது முடிவாகியது.
5-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் ஆண்டான 1974-75ம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட திட்ட முதலீடு ரூ. 112 கோடியாகும்.
இரண்டாம் ஆண்டான 1975-76ம் ஆண்டிற்கு திட்ட முதலீடு ரூ. 142.59 கோடி. பின்னர், தூத்துக்குடி அனல் மின்சார திட்டத்திற்கென விசேஷ முன் பண உதவியாக ரூ. 1 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
5-வது திட நகலில் தமிழ்நாட்டிற்கு 5 ஆண்டுகளுக்குமான மொத்த திட்ட முதலீடு ரூ. 1,110 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.