பாரிஸ், ஜன. 25 - பார்லிமெண்டில் ஸ்தானங்களைக் கைப்பற்றுவதைவிட பொருளாதாரத்தை பலப்படுத்துவதே மிகவும் முக்கியம் என்று இன்று பாரிஸில் வெளியிடப்பட்ட ஒரு பேட்டியில் பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி கூறியிருக்கிறார்.
இந்தியாவில் பொதுத் தேர்தல் ஏன் ஒத்திப் போடப்பட்டது எனக் கேட்டபோது, திட்டமிட்டபடி அடுத்த மாதமே தேர்தலை நடத்தியிருந்தால் தனது கட்சியே நிச்சயம் வெற்றிபெற்றிருக்கும் என்று திருமதி இந்திரா காந்தி கூறினார்.
“ஆனால் பார்லிமெண்டில் ஸ்தானங்களில் வெற்றிபெறுவதைவிட நமது பொருளாதாரத்தை சீரமைப்பதே இன்னும் முக்கியம் என்பது எனது கருத்து. ஒரு வருஷத்தில் அல்லது அதற்கு முன்பேகூட தேர்தல் நடக்கும்” என்றார்.
“லே பிகாரோ” என்ற தினசரிக்கு பிரதமர் பேட்டியளித்தார். “இந்தியாவின் ஆட்சிமுறையை மாற்றியமைக்கும் உத்தேசம் எனக்குக் கிடையாது. நிச்சயம் நமது பார்லிமெண்டரி ஆட்சிமுறை அபிவிருத்தி செய்யப்படும். ஆனால் அதற்கு அதிகமாக ஒன்றுமிராது” என்று இந்திரா கூறினார்.
மகாத்மா காந்தியின் மிதவாத மனோபாவத்துடன் தங்களுடைய உள்நாட்டுக் கொள்கையை எப்படி ஒப்பிடுகிறீர்கள் என்று கேட்டபோது. “முன்பு எதிர்க்கட்சி ஒன்று இருக்கவே அனுமதிக்கப்படவில்லை; இன்று மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்” என்று திருமதி இந்திரா காந்தி கூறினார்.
சம்பல்பூர், ஜன. 26 - மத்திய எக்ஸைஸ் அதிகாரிகள் நாள் முழுவதும் ஒரு கடையை சோதனையிட்டு ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 13.5 கிலோ தங்கமும், ரூ. 35,000 ரொக்கத்தையும் கைப்பற்றினார்.
இன்னொரு கடையிலிருந்து ரூ. 20,000 மதிப்புள்ள 470 கிராம் தங்கமும், ரூ. 25,000 ரொக்கமும் பிடிபட்டது.
இவர்களிடம் பணம் லேவாதேவி செய்வதற்கான லைசென்ஸ் இல்லை. இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் சோதனையிடப்பட்டதென்று உதவிக் கலெக்டர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.