புதுடில்லி, ஜன. 28 - நகர்ப்புற நில உச்சவரம்பு மசோதாவை சர்க்கார் இன்று லோக்சபையில் தாக்கல் செய்தது. தமிழ்நாடு, கேரளம் முதலிய சில ராஜ்யங்கள் நீங்கலாக, 11 ராஜ்யங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இந்த மசோதா உடனடியாக அமலுக்கு வருகிரது.
இந்த மசோதாவின்படி நகர்ப்புற பகுதிகள் ஏ, பி, ஸி, டி என்ற 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, காலி நிலஉடைமை மற்றும் சுயாதீனத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“ஏ” பிரிவு பகுதியில் 500 சதுர மீட்டர், “பி” பிரிவு பகுதியில் 1000 சதுர மீட்டர், “சி” பிரிவு பகுதியில் 1500 சதுர மீட்டர், “டி” பிரிவு பகுதியில் 2000 சதுர மீட்டர் என்ற பல்வேறு அளவில், காலி நிலத்திற்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டிருக்கிறது. மசோதாவில் 46 ஷரத்துகளும் 2 ஷெட்யூல்களும் இருக்கின்றன. ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஹரியானா, இமாசலப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஒரிஸ்ஸா, பஞ்சாப், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 11 ராஜ்யங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த மசோதாவின் விதிகள் உடனடியாக (அதாவது மசோதா பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்ட இன்றைய தேதியிலிருந்து) அமலுக்கு வருகின்றன. மற்ற ராஜ்யங்களின் சட்டசபைகள், இம்மசோதாவை அங்கீகரித்த பின், அங்கீகரிக்கும் தேதியிலிருந்து அந்த ராஜ்யங்களில் அமலுக்கு வரும். ...
திருவனந்தபுரம், ஜன. 28 - இடிக்கி திட்டத்திலிருந்து கிடைக்கும் எல்லா உபரி மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கு வழங்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. இதன் விலை யூனிட்டுக்கு 12.5 பைசாவாக இருக்கும். (தற்போது யூனிட்டுக்கு 9.5 பைசா என்ற விலையில் கேரளா தமிழ்நாட்டுக்கு மின்சாரம் அளித்து வருகிறது.) அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த புதிய ஒப்பந்தம் அமல் செய்யப்படும்.
இதற்கான உடன்பாடு தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கிடையே ஏற்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் அச்சுதமேனன் இன்று மந்திரிசபைக் கூட்டத்துக்குப் பின்னர் கூறினார்.
இடிக்கியில் முதலாவது 130 மெகாவாட் ஜெனரேட்டர் அடுத்த மாதம் முதல் இயக்கத் தொடங்கும். இதன்மூலம் தமிழ்நாட்டுக்கு உடனடியாக சுமார் 40 கோடி யூனிட் மின்சாரம் அளிக்க முடியும் என்றும் அச்சுதமேனன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மின்சார அமைச்சர் சாதிக்பாட்சா ஞாயிறன்று இது குறித்து கேரள மின்துறை மந்திரி எம்.என். கோவிந்தன் நாயருடன் இங்கு பேச்சு நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.