3.2.1976: வெளிநாடு செல்லும் இந்தியர் தாய்நாட்டை கேவலமாக பேசுவதா? பிரதமர் வருத்தம்
வெளிநாடு செல்லும் இந்தியர்கள் சிலர் தாய் நாட்டை குறை பேசுவதற்கு பிரதமர் வருத்தம்...
அரை நூற்றாண்டுக்கு முன்3.2.1976: வெளிநாடு செல்லும் இந்தியர் தாய்நாட்டை கேவலமாக பேசுவதா? பிரதமர் வருத்தம்
வெளிநாடு செல்லும் இந்தியர்கள் சிலர் தாய் நாட்டை குறை பேசுவதற்கு பிரதமர் வருத்தம்...
கரக்பூர், மார்ச். 2 -வெளிநாடுகளுக்கு விஜயம் செய்கிற இந்தியர்களில் சிலர் தங்களது தாய் நாட்டைப் பற்றியே குறை கூறிப் பேசுவதைப் பற்றிப் பிரதமர் இந்திரா வருத்தம் தெரிவித்தார்.
"இவ்விதம் வெளி நாடு செல்லும்போது தங்களது சொந்த நாட்டையே கேவலமாகப் பேசுகிறவர்கள் உலகில் எங்கேனும் உள்ளனரா என்பது சந்தேகமே" என்றார் பிரதமர்.
உயர் படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புகிறவர்களை அவ்விதம் அனுமதிப்பதில் நாம் தாராளமான கொள்கையைப் பின்பற்றி வந்திருக்கிறோம். இந் நாட்டில் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து தப்புவதற்கு படிப்பை ஒரு சாக்காக் காட்டாதபடி அவர்களை வற்புறுத்துவதற்கு வேளை வந்துவிட்டது என்றும் பிரதமர் இந்திரா கூறினார்.
மேற்கு வங்க மாநில கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பிரதமர் இந்திரா இன்று பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். இக் கழகம் இப்போது தனது வெள்ளி விழாவையும் கொண்டாடுகிறது.
நிபுணர் வெளியேற்றம்
பிரதமர் பேசுகையில் இந்தியாவிலிருந்து நிபுணர் வெளியேற்றம் பற்றிக் குறிப்பிட்டார். வெளி நாடுகளில் நிறைய பணம் சம்பாதிக்கும் ஆசையில் சிலர் இந்தியாவிலிருந்தே வெளியேறும் போக்கை அவர் குறைகூறினார்.
இவர்களில் சிலர் தங்கள் தாய் நாட்டைப் பற்றி விசித்திரமான போக்கைக் கைக்கொள்கின்றனர்.
இந்திய அரசு மீதும் இந்திய சமூகத்தின் மீதும் அவர்களுக்கு காழ்ப்பு உள்ளது அல்லது அப்படி காழ்ப்பு உள்ளதாக நடிக்கின்றனர். அவர்கள் நமது பாரம்பரியம் பூராவையும் நிராகரிக்கின்றனர். ஒருவேளை இதில் அவர்களுக்கு லாபம் இருப்பதால் அப்படிச் செய்து வரக்கூடும். வெளி நாட்டுக்கு விஜயம் செய்யும்போது அல்லது வெளி நாட்டுக்கே போய்விடும்போது தங்களது சொந்த நாட்டையே கேவலமாகப் பேசுவதில் விசித்திர இன்பம் காணும் மக்கள் உலகில் வேறு எங்கேனும் உள்ளனரா என்பது சந்தேகமே என்று பிரதமர் இந்திரா சொன்னார்.
ஆன்மீக ரீதியில் தங்களை அன்னியராக்கிக் கொள்ளாமல் முன் னேற்றம்காண்பதே இந்தியாவின் விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுநர்களின் முயற்சியாக இருக்கவேண்டும். இதனை அவர்கள் மனதில் கொள்ளவேண்டும் என்றார் பிரதமர். அவர்கள் தங்களது அறிவையும் அனுபவத்தையும் இந்நாட்டு மக்களின் நிலையை உயர்த்துவதற்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர, தங்களது பட்டங்களை வெளி நாடுகளில் வேலை பெறுவதற்கான பயண அனுமதிச் சீட்டுகளாகப் பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். ...
த. நா.வில் கிராமப்புற கடன் ஒழிப்புக்கு விரைவில் விரிவான அவசர சட்டம்?
சென்னை, மார்ச். 2 - கிராமப் புறக் கடன்கள் ஒழிப்புக்கு ஒரு விரிவான சட்டத்தைத் தமிழ்நாடு அரசாங்கம் தற்போது தயாரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
இது சம்பந்தமான அவசரச் சட்டம் ஒன்று இன்னும் சில நாட்களில் பிறப்பிக்கப்படக்கூடும்.
உத்தேசச் சட்டமானது கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். நகர ஏழை மக்களும் இந்தச் சட்டத்தின் அனுகூலத்தைப் பெறுவார்கள்.
தமிழ் நாட்டில் தற்போது "தமிழ்நாடு விவசாயிகள் தற்காலிக கடன் நிவாரணச் சட்டம் -1975"-ம் "தமிழ்நாடு கடனாளிகள் தற்காலிக நிவாரணச் சட்டம் - 1975''ம் அமலில் இருக்கின்றன. விவசாயிகள், விவசாயிகள் அல்லாதாரிடையே ஏழைகள் கடன்களையும் வட்டிகளையும் திருப்பிச் செலுத்துவது சம்பந்தமாக இவை நிவாரண மளிக்கின்றன. இந்தச் சட்டங்கள் ஏப்ரல் மாதம் காலாவதியாக இருக்கின்றன.
தற்போது மேற்கண்ட இரு சட்டங்களின் கீழும் கடன் நிவாரணச் சலுகை பெறுபவர்கள் விஷயத்தில் மேற்கண்ட விவரமான கடன் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என்று தோன்றுகிறது.
புதிய 15 ஆண்டு கல்விமுறை: 1978லேயே அமலுக்கு வரும் - ஒத்திவைப்பு இல்லை என அதிகாரி மறுப்பு
சென்னை, மார்ச். 2 - புதிய கல்வி முறையை அதாவது 10 ஆண்டு பள்ளிக்கூடப் படிப்பு, மூன்று ஆண்டு பூர்வாங்க பட்டப் படிப்பு, இரண்டு ஆண்டு பட்டப் படிப்பு - அரசாங்கம் 1980 ம் ஆண்டு வரை ஒத்திவைக்க இருப்பதாகக் கூறப்படுவதை கல்வி இலாகா சிறப்புச் செயலாளர் சி. ஜி. ரங்கபாஷ்யம் மறுத்துள்ளார். இவ்விஷயத்தில் அரசாங்கத்தின் நிலையில் மாறுதல் இல்லை என்றும், 1978ல் புதிய முறை அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
துவாரகதாஸ் கோவர்தனதாஸ் வைஷ்ணவக் கல்லூரியின் 12-வது தின விழாவுக்குத் தலைமை வகித்துப் பேசுகையிலேயே ரங்கபாஷ்யம் மேற்கண்டவாறு கூறினார். தனியார் கல்லூரி நிர்வாகங்களின் சிரமங்களை அரசு முழுமையாக உணர்ந்திருப்பதாகவும், விரைவிலேயே கணிசமான நிவாரணம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். சகல துறையிலும் கல்லூரியின் சாதனையை அவர் பாராட்டினார்.