கோப்புப் படம் 
நடுப்பக்கக் கட்டுரைகள்

மறுக்கப்படும் சொத்து - நில உரிமைகள்...

உணவுப் பொருள்கள் வாங்கும் நியாய விலைக் கடை அட்டைகளில் குடும்பத் தலைவிகளாக பெண்களின் பெயர்களைப் பதிவு செய்ததுபோல், உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் நிலத்தின் உரிமை பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும்.

பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்

சங்க காலத்தில் நிலம், நகைகள், கால்நடைகளைச் சொந்தமாகக் கொண்டிருந்த பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சங்க காலப் பழங்குடிச் சமூகங்களின் தாய்வழிச் சமூக அமைப்பில் சீதனம் என்பது பெண்ணின் பிரத்யேகச் சொத்தாகக் கருதப்பட்டு வழங்கப்பட்டது. மூத்த மகனுக்கு முன்னுரிமை அளிக்கும் மூத்த மகன்மை உரிமை என்ற கொள்கை பல்லவர், சோழர் காலங்களில் தோன்றத் தொடங்கியபோது, குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்படவில்லை. அந்தக் காலத்தில் விதவைகளுக்கும், அரச குடும்பப் பெண்களுக்கும் மட்டுமே நில உரிமை வழங்கப்பட்டிருந்தாலும், பெண்கள் நில தானம் செய்ததற்கான கல்வெட்டுப் பதிவுகள் உள்ளன.

வேத காலத்துக்குப் பிந்தைய காலத்தில் மனுஸ்மிருதி போன்ற ஆணாதிக்க சமஸ்கிருதச் சட்டங்களின் செல்வாக்கால் ஒரு பெண் தன் தந்தையின் சொத்தில் இணை உரிமையாளராகக் கருதப்படாமல், தன் தந்தையால் பாதுகாக்கப்பட வேண்டியவளாக மட்டுமே கருதப்பட்டார். தமிழ்நாட்டில் பெண்களுக்கான சொத்துரிமையை முன்னோர்கள் முற்றிலும் மறுக்கவில்லை. காலப்போக்கில் அது உரிமையிலிருந்து வெறும் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டது. கேரளத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழ்க் குடும்பங்களில், தாய்வழிச் சொத்துரிமை முறை இன்றும் நடைமுறையில் உள்ளது.

பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்ட சீர்திருத்தங்கள் இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு தொடங்கின. 1956-ஆம் ஆண்டின் ஹிந்து வாரிசுரிமைச் சட்டம் முதன்முதலில் ஹிந்து பெண்களின் சொத்துரிமையை அங்கீகரித்தது. 2005-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட இந்தச் சட்டம், "திருமணமானாலும் மகன்களுக்கு இணையாக மகள்களும் விவசாய நிலம் உள்பட மூதாதையர் சொத்தின் இணை உரிமையாளர்கள்' என அறிவித்து பெண்களுக்கு உரிமை வழங்கியது.

1994 இனப் படுகொலையைத் தொடர்ந்து, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடான ருவாண்டா, மனிதவள மறுசீரமைப்பு மூலம் பெண்களின் நில உரிமைகளைப் பாதுகாப்பதில் உலக அளவில் ஒரு முன்னோடி நாடாக உருவெடுத்துள்ளது. 1999-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வாரிசுரிமைச் சட்டம், மகன்கள், மகள்கள் இருவருக்கும் சம உரிமைகளை வழங்கியது. 2005-ஆம் ஆண்டு நிலச் சட்டம், கணவன்- மனைவி இருவருக்கும் கூட்டு நில உரிமையைக் கட்டாயமாக்கியது.

2008-2013-ஆம் ஆண்டுகளுக்கிடையே, நாட்டின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 99% தேசிய நிலப் பதிவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இதில், 56 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலப் பகுதிகள் கணவன்- மனைவி இருவரின் கூட்டுப் பெயர்களிலும், 21 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலப் பகுதிகள் பெண்களின் தனிப்பட்ட பெயர்களிலும் பதிவு செய்யப்பட்டன. இது பெண்கள் கடன் பெறுவதற்கும், விவசாய உற்பத்தி-குடும்ப நிதியை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

இந்தியாவில் நான்காவது மற்றும் ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கைகளின் தரவுகளை ஒப்பிட்டு பெண்கள் பெயரில் நில உரிமை 7 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகவும், கூட்டு உரிமை 21 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக ஐ.நா. மக்கள்தொகை நிதியம் கூறுகிறது.

சமூக நெறிமுறைகள், மரபுகளால் கட்டுப்படுத்தப்பட்டு மறுக்கப்படும் சொத்துரிமை பெண்கள் வறுமையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்கின்றன. விவசாயத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமான உழைப்பை வழங்கும் பெண்களால், தங்கள் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருக்க முடிவதில்லை. நடைமுறையில், சொத்துரிமை பெறும் மகள்களின் எண்ணிக்கையைவிட நிலத்தை மரபுரிமையாகப் பெறும் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும், நிலம் எனும் அதிகாரத்தை வாழ்வின் எந்தக் கட்டத்தில் எந்த வடிவில் பெண்கள் பெறுகிறார்கள் என்பதே முக்கியம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பிரதம மந்திரி விவசாய திட்டத்தின் (பிஎம்-கிசான்) கீழ் பயன்பெறத் தகுதியுள்ள 8.7 கோடி விவசாயிகளில் 2 கோடிக்கும் குறைவானவர்களே பெண்கள் என மாநிலங்களவையில் 2024-ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. பெண்களின் நில உரிமைகளை சட்டம் அங்கீகரித்தாலும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான முறையான கட்டமைப்பு உருவாக்கப்படும் வரை இந்த உரிமைகள் ஒரு கனவாகவே நீடிக்கும்.

1991-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35 சதவீதமாக இருந்த விவசாயம், 2023-ஆம் ஆண்டு 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. நில உரிமையாளர்களாக பெண்கள் இல்லாமல், பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்களாக இருப்பதால், அவர்களால் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவோ, காப்பீட்டுக்குப் பணம் செலுத்தவோ, கடன்களைப் பெறவோ, அரசுத் திட்டங்களில் பங்கேற்கவோ முடிவதில்லை. பயிர் தேர்வு, சந்தைப்படுத்துதல் மற்றும் முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்கும் பெண் நில உரிமையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, விவசாயத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும் என்று பொருளாதாரவல்லுநர்கள் கணிக்கின்றனர்.

குழந்தைகளின் ஊட்டச்சத்தில் தாயால் ஈட்டப்படும் வருமானமே முதன்மைக் காரணியாக உள்ளது என்று கேரளத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது. உணவுப் பொருள்கள் வாங்கும் நியாய விலைக் கடை அட்டைகளில் குடும்பத் தலைவிகளாக பெண்களின் பெயர்களைப் பதிவு செய்ததுபோல், உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் நிலத்தின் உரிமை பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |

மழையால் தாமதமாகும் நியூசிலாந்து - பாகிஸ்தான் போட்டி!

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26

கமல் - ரஜினி புரோமோவில் இதைக் கவனித்தீர்களா?

ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT