விரைவான தீர்வுகளே வெற்றியின் அடையாளம்!
தமிழ்நாட்டின் 2026-2027-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெண்களின் பாதுகாப்பு, தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் ஊழலற்ற நிர்வாகம் என்ற முயற்சியை புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு கடந்த சில மாதங்களாக பல்வேறு வகைகளில் முன்னெடுத்து வருகிறது. நிர்வாக முறையை ஒழுங்குபடுத்துவது என்பது எவ்வளவு முக்கியமோ, அதற்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்தது நிர்வாகத் திறனை முடுக்கி விடுவது ஆகும்.
புதிய அரசின் ஒவ்வொரு அறிவிப்பையும் உடனடியாக வெற்றி அல்லது தோல்வி எனத் தீர்மானிப்பது சரியான அணுகு முறையல்ல. அதேவேளையில், அறிவிப்புகளை மட்டும் சாதனைகளாகக் கருதுவதும் பொருத்தமானதல்ல. திட்டமிடல், நிதி ஒதுக்கீடு, செயல்படுத்துதல், பயனாளிகளைச் சென்றடைதல் மற்றும் முடிவுகளை மதிப்பிடுதல் ஆகிய அனைத்தும் இணைந்தால்தான், ஒரு திட்டம் மக்களுக்குப் பயனளிக்கும். இதைக் கருத்தில் கொண்டு மக்களை மையப்படுத்தி ஆட்சியை நகர்த்தி அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் ஆட்சியாளரே வரலாற்றை அலங்கரிக்கிறார்.
Advertisement
Advertisement
இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் புதிய தலைமுறை இளைஞர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஆட்சியாளர்கள் கூறும் வழக்கமான பதிலில் சலிப்புற்று எதிர்வினையாற்றும் நிகழ்வுகளை அன்றாடம் காண்கிறோம். அதிலும் பெண்கள் அமைதியான முறையில் அரசியல் மாற்றத்துக்கு வித்திடவும், சமூதாயப் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைத் தராத ஆட்சியாளர்களுக்கெதிராக எதிர்வினையாற்றும் முன்னத்தி ஏர்களாகவும் மாறுகிற போக்கைக் காணமுடிகிறது.
மக்களின் குறைகளை அரசு பொறுமையாகக் கேட்க வேண்டும். பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிய வேண்டும். காலக்கெடுவுடன் தீர்வுகளைச் செயல்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, பெண்களின் கல்வி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவை ஒரு மாநிலத்தின் சமூக வளர்ச்சிக்கான முக்கியக் குறியீடுகள் என இந்த அரசு உணர்ந்துள்ளது. அதனால், தமிழ்நாட்டின் 2026-2027-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெண்களின் பாதுகாப்பு, தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன. இதன் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால், பெண்களுக்கான திட்டங்களின் உண்மையான வெற்றியை மதிப்பிடுதல் வேண்டும்.
அதற்கு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான புகார்கள் கையாளப்படும் விதம், பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவும் வேலைக்குச் செல்லவும் தேவையான வசதிகள் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்துதல், பெண்கள் தொடங்கும் தொழில்கள் நீண்டகாலம் நிலைத்து அவர்களின் வளர்ச்சியை உறுதி செய்தல், பெண்களின் வேலைவாய்ப்பு பங்கேற்பும் வருமானமும் அதிகரிக்க, கிராமப்புறப் பெண்களுக்கு சந்தை, கடன் மற்றும் தொழில்நுட்ப உதவிக்கு உத்தரவாதம் போன்றவை தடையின்றி கிடைக்க வகைசெய்தல் ஆகியவற்றை சமரசமின்றி மேற்கொள்ள வேண்டும்.
ஏனென்றால், பெண்களுக்கு உதவித்தொகை வழங்குவது உடனடி பொருளாதார நிவாரணத்தை அளிக்கலாம். தீர்வு நோக்கில் இதைப் பார்க்கும்போது, கல்வி, திறன், தொழில்முனைவு மற்றும் நிலையான வருமானம் ஆகியவற்றை உருவாக்குவதே அவர்களின் நீண்டகால முன்னேற்றத்துக்கு உதவும்.
பொதுவாக, பிரச்னைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று நீண்டகாலப் பிரச்னைகள்; மற்றொன்று குறுகியகாலப் பிரச்னைகள். நீண்டகால பிரச்னைகளைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் மிக முக்கியமானது போதைப்பொருள்களின் புழக்கம் மற்றும் அதனால் நிகழும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்குக்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் நிகழ்வுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் விவசாயம் போன்ற முதன்மைத் துறைகளில் சராசரிக்கும் குறைவான வருமானமும் வறுமையும் ஆகும். குறுகியகாலப் பிரச்னைகளைப் பொருத்தமட்டில், மின் கட்டண வேறுபாடுகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு மற்றும் பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்துகளுக்கான கட்டண உயர்வுகள் ஆகும். ஆட்சி அதிகாரங்களைக் கையில் வைத்திருப்பவர்கள் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு
களை முன்னெடுக்கும் பொறுப்புடையவர்கள் ஆவர். பிரச்னைகளின் அடிப்படையில் அவற்றுக்கு முடிவுகளை ஏற்படுத்தும் பொருட்டு நீண்டகால மற்றும் குறுகியகால திட்டம் என உருவாக்கி தீர்வுகளுக்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
ஏனென்றால், மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் செயல்பாடும் ஒரே நேர்கோட்டில் இயங்க வேண்டும். பிரச்னைகளுக்குக் கடந்த காலத்துடனான ஒப்பீட்டுப் பதில்களும் தற்காலிகமாக மடைமாற்றம் செய்யும் பதில்களும் ஒருபோதும் தீர்வாகாது என்பதை உணர்தலும் வேண்டும். ஜனநாயகத்தில் தீர்வுகள் ஒத்திவைக்கப்படுகிற போதுதான் தீர்ப்புகள் மாறிவிடுகின்றன.
அதேபோல, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்போது, அதன் தாக்கம் ஏழை மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களில் அதிகமாக உணரப்படுகிறது. உணவு, வீட்டு வாடகை, போக்குவரத்து, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் குடும்பங்களின் மாதாந்திர வருமானத்தில் பெரும் பங்கைக் கொண்டுள்ளன. உண்மையில் ஓர் அரசை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுபவர்கள் சாமானிய மக்கள் ஆவர். அவர்கள் அரசியல் புரிதல் கொண்டவர்கள். அவர்கள் அரசியலில் பங்கெடுக்க விரும்பாதவர்கள் என்றும் கூறலாம். ஆனால், ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துபவர்களுக்கு இவர்கள் தக்க தருணத்தில் பாடம் புகட்டுகிற தெளிவு கொண்டவர்களாக விளங்குகிறார்கள்.
இன்றைய சமுதாயச் சூழலில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவது அரசியல் இயக்கங்களின் தேர்தல் வியூகங்களோ அல்லது பிரசார உத்திகளோ இல்லை. மாறாக, அரசை வழிநடத்துபவர்கள், தீர்வுகளை முன்வைப்பதற்கு மாற்றாக நிர்வாகத் தோல்வியை சாதுர்யமாக மறைக்கிற பதில்களை உருவாக்குகிறார்கள். அது அவர்களுக்கு மனநிறைவையும் தந்து விடுகிறது. ஆனால், அவர்களிடம் சிறந்த தீர்வுகளை எதிர்பார்த்த சாமானிய மக்களுக்கு அது மன வேதனையைத் தருகிறது என்பதை உணரத் தவறி விடுகிறார்கள்.
அரசியலில் நேரடியாகப் பங்கெடுக்காத சாமானிய மக்களுக்கும் அவர்கள் முன்னெடுக்கும் அரசியலுக்கும் ஒரு பொதுவான தொடர்பு உண்டு. உண்மையில் அவர்கள்தான் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் கணிக்க முடியாத கருவிகளாகச் செயல்படுகிறார்கள். அதனால், தீவிர அரசியலில் பங்கெடுக்கவில்லையெனினும் அரசியல் விழிப்புணர்வு பெற்றுள்ள மக்களையும், இன்றைய தலைமுறையையும் குறைவாக மதிப்பிடுகிற மனநிலையை அரசியல் இயக்கம் நடத்துபவர்கள் மாற்றிக்கொள்ளத் தவறுகிறார்கள் எனக் கருதத் தோன்றுகிறது.
மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க தாங்கள் எதிர்த்த, விமர்சித்த கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை மாற்றி அமைக்கும் முயற்சியில் இந்த அரசு வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் மாற்றத்துக்கான தூதுவர்களாகத் தங்களைக் கட்டமைத்த பிம்பம் மெய்ப்பிக்கப்படும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். மாயைக்கும் உண்மைக்குமான வேறுபாடு மக்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது என்பது பல்வேறு காலகட்டங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தைப் பெற்று அரசை வழிநடத்துபவர்கள் மாயையை உண்மையாக்க முயன்றால், அது தோல்வியில்தான் முடியும் என்ற கடந்தகால படிப்பினைகளை மனத்தில் கொண்டு செயலாற்றுவது அவசியம்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக்க இன்றைய அவசர உலகில் சித்தாந்த வேறுபாடுகளை சாமானிய மக்கள் பெரிதும் சீர்தூக்கிப் பார்ப்பதில்லை. அதேவேளையில், ஓர் அரசு மக்கள் பிரச்னைகளில் தனக்கான தார்மிகப் பொறுப்பை துறக்கிற போது ஏழை மக்களிடம் துளிர் விடுகிற ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கையற்ற போக்கு வலிமை பெற்றுக்கொண்டே வந்து ஆட்சியாளர்களுக்கு அதிகார வீழ்ச்சியைத் தந்து விடுகிறது.
எரியூட்டப்பட்ட மரத்தின்வேர் மீண்டும் நீரூற்றப்படுவதால் இயல்பு நிலைக்குத் திரும்புவதில்லை. அதுபோல மாற்றுத் திட்டங்கள் மூலமாகவோ மயக்கும் வார்த்தைகள் மூலமாகவோ ஓர் அரசியல் இயக்கம் தாம் எதிர்பார்க்கும் முடிவை மக்களிடமிருந்து பெற்றுவிட முடியாது.
இன்றைய சூழலில் ஆட்சியாளர்களுக்கு மிக நெருக்கமாக வலம் வருகிற அரசியல் பங்கெடுப்பாளர்கள், ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் கொள்கைகளையும் நம்பிக்கை
களையும் தீவிரமாக ஏற்றுக் கொண்டவர்கள் என்று கூறிவிட முடியாது. அவர்கள் சாதகமற்ற சூழலில் புதிய இயக்கங்களை நோக்கிப் பயணிக்கத் தயங்குவதில்லை. அதற்கு புதிய கற்பித்தங்களை முன்வைக்கவும் வெட்கப்படுவதில்லை.
ஆகவே, சிறந்த தலைவர் ஒருவர் அரசியல் பங்கெடுப்பாளர்களாக அருகில் இருப்பவர்களின் வார்த்தைகளைவிட, அரசியலில் பங்கெடுக்க விரும்பாத அதேவேளையில் பாடம் புகட்டும் சக்திகளாக விளங்குகிற சாமானிய மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளவே ஆர்வம் காட்ட வேண்டும்.
முக்கியமாக, பொதுமக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய பிரச்னைகளுக்கு விரைவாகத் தீர்வுகளை எட்டுவதே ஓர் அரசின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
முடிவாக, தீர்வுகள் இல்லாத பதில்கள் வெறும் அலங்கார வார்த்தைகள் மட்டுமே. அவை ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தன்னகத்தே கொண்டவை அல்ல. ஒரு நல்ல அரசுக்குத் தேவை பிரச்னைகளின்போது சாமர்த்தியமான பதில்கள் மூலம் மக்களை சமரசப்படுத்தும் முயற்சிஅல்ல. சிக்கல்களுக்கும் பிரச்னைகளுக்கும் உரிய தீர்வுகளைக்கொண்ட செயல்திட்டமே.
கட்டுரையாளர்:
கல்வியாளர்.