தொழில்நுட்பம் மட்டும் போதாது!
பத்திரப் பதிவில் குளறுபடிகள் ஏதும் நிகழாத வகையில் முறையாக பதிவுகள் நடைபெற அனைத்து சார்பதிவகங்களுக்கும் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
- இல. பிரபு
காலத்துக்கேற்ப உன்னைப் புதுப்பித்துக்கொள்; இல்லையெனில், நீ புறக்கணிக்கப்படுவாய் என்ற பொன்மொழி அனைவருக்கும் பொருந்தும். ஆனால், அசையா சொத்தின் உரிமை மாற்றத்தை பொருத்தவரை, தமிழக அரசு சில நடைமுறைகளை புதுப்பித்துக்கொள்ளும் போது, வருங்கால தலைமுறைகளுக்கு எந்தவிதமான சட்டச் சிக்கல்களும் ஏற்படாத வகையில் புதிய நடைமுறைகளை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
அந்த வகையில், தமிழ்நாடு பத்திரப் பதிவு துறையில், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள வருகையில்லா பத்திரப் பதிவு நடைமுறை குறித்தும், முந்தைய பத்திரப் பதிவு நடைமுறை குறித்தும் நாம் கூராய்வு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
முன்பு ஒரு காலகட்டத்தில், பதிவு செய்யப்பட்ட சுத்த விற்கிரைய ஆவணங்களைப் படித்துப் பார்க்கும் போது, ஒரு குறிப்பிட்ட அசையா சொத்தை ஒருவர் மற்றொருவரிடம் ஒரு குறிப்பிட்ட தேதியில் எழுதி வாங்கி, ஒரு குறிப்பிட்ட தேதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். அதாவது, ஓர் அசையா சொத்தின் உரிமையாளரிடம் எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும், வெற்றுப் பத்திரத்தில் கையொப்பம் பெறப்பட்டு, அந்தப் பத்திரத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதி நிறைவுசெய்து பத்திரப் பதிவு செய்யலாம் என்ற சூழ்நிலை நிலவிய காலம் அது.
ஓர் அசையா சொத்தின் உரிமையாளரால் உண்மையாகவே முழு சம்மதத்துடன்தான் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஊர்ஜிதம் செய்ய இயலாத சூழ்நிலைகள் பிற்காலங்களில் ஏற்பட்டதால், எழுதிக்கொடுப்பவர் புகைப்படம் பதிவுப் பத்திரத்தில் ஒட்டப்பட்டு நேரடியாக சார்பதிவகம் வந்து கையொப்பமிட வேண்டும் எனவும், பின்பு எழுதிக்கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் இருவரின் புகைப்படங்களும் பதிவுப் பத்திரத்தில் ஒட்டப்பட்டு, இருவரும் சார்பதிவகத்துக்கு நேரடியாக வந்து கையொப்பமிட வேண்டும் எனவும் நடைமுறை அமலுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து ஆள்மாறாட்ட மோசடிகள் நடைபெற வாய்ப்பு இருப்பதால், சாட்சிகள் உள்பட பத்திரப்பதிவு சம்பந்தமான அனைவரும் சார்பதிவகத்தில் நேரடியாக வந்து இணையவழியில் புகைப்படம் எடுக்கப்பட்டு விரல்ரேகை மற்றும் கையொப்பம் பெறப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், ஆள்மாறாட்ட முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு பத்திரப்பதிவு நிகழ்வுகள் விடியோ பதிவு செய்யப்பட்டு, பதிவு பத்திரத்துடன் குறுந்தகடு (சிடி) வழங்கப்பட்டு வந்தது.
தற்போது தமிழகத்தில் மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் விற்பனை பதிவு அதாவது, சார்பதிவகத்தில் இதுவரை பதிவு செய்யப்படாமல் முதல்முறையாக பத்திரப்பதிவு செய்யப்படும் அசையா சொத்துகளை இணையவழி வாயிலாக எழுதிக்கொடுப்பவர், எழுதிவாங்குபவர் மற்றும் சாட்சிகள் என அனைவரும் சார்பதிவகத்துக்கு நேரடி வருகையில்லா பத்திரப் பதிவு நடைமுறை குறித்து, கடந்த ஆண்டு ஜூலை 7}ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, அதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 17}ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இப்புதிய நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட அசையா சொத்து, சொத்துகளை ஒருவர் மற்றொருவருக்கு உரிமை மாற்றம், கிரையம் செய்து கொடுக்க முற்படும்போது, பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டலில், சொத்துகளைப் பதிவு செய்வதற்கு தேவையான மூல ஆதரவு ஆவணங்கள் மற்றும் பதிவுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்து எழுதிக்கொடுப்பவர், எழுதிவாங்குபவர் மற்றும் சாட்சிகள் என அனைவரது மின்னணு கையொப்பத்தை உள்ளீடு செய்து சம்பந்தப்பட்ட சார்பதிவாளருக்கு இணையவழியில் சமர்ப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சார்பதிவாளர் சரிபார்த்து அவற்றை சார்பதிவகத்திலிருந்து பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்ட மின்னணு பதிவு ஆவணத்தை மின்னஞ்சல் வாயிலாக சம்மந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைப்பார். அதைப் பதிவிறக்கம் செய்து, அசையா சொத்தின் உரிமை மாற்றப்பட்ட சொத்தின் உரிமையாளர் பதிவு செய்யப்பட்ட கிரைய ஆவணமாக உரிமை மாற்றப்பட்ட ஆவணமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பத்திரப்பதிவு சார்ந்த மின்னனு வாயிலாக பெறப்பட்ட அனைத்துத் தகவல்களின் உண்மைத் தன்மையை, சார்பதிவ கோப்புகள், சார்பதிவக மின்னனு கோப்புகளுடன் ஒத்திசைவு செய்து சார்பதிவாளர் சரிபார்க்க இயலுமே தவிர, சொத்தின் உரிமையாளர் சுயநினைவுடன் அல்லது ஏதாவது கட்டாயத்தின் பேரில் உள்ளீடு செய்தாரா என்பதை ஊர்ஜிதம் செய்ய இயலாது.
சுயநினைவுடன் அல்லது எந்தவிதமான கட்டாயத்தின் பேரிலும் உள்ளீடு செய்யவில்லை என்றாலும், எப்போதாவது ஒரே ஒரு முறை அசையா சொத்து வாங்கும்போது அல்லது விற்பனை செய்யும் போது இணையவழி சார்ந்த உள்ளீட்டு சாதனங்கள் அனைத்தையும் சாமானிய மக்களால் அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்த இயலாது.
மேலும், தனியார் மூலமாக பத்திரப் பதிவு சேவை மையங்களை அரசு ஏற்படுத்திக் கொடுத்தாலும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரிக்கத்தான் செய்யும்.
ஓர் சாதாரண சார்பதிவகத்தில், சார்பதிவாளர் முதல் கடைநிலைப் பணியாளர் வரை 5 அல்லது 7 அரசு நிரந்தரப் பணியாளர்கள் பணிபுரிந்த முந்தைய நிலைமாறி தற்போது, ஒன்று அல்லது இரண்டு அரசு நிரந்தர பணியாளர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
பத்திரப் பதிவில் குளறுபடிகள் ஏதும் நிகழாத வகையில் முறையாக பதிவுகள் நடைபெற அனைத்து சார்பதிவகங்களுக்கும் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். முன்பு நிகழ்ந்த மோசடிகள் இணையவழியிலும் ஏற்படாமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.