பத்திரப் பதிவு கையொப்பத்தில் சா்ச்சை: திருவள்ளூா் நீதிமன்ற உத்தரவுக்கு தடை
பத்திரப் பதிவு கையொப்பத்தில் சா்ச்சை: திருவள்ளூா் நீதிமன்ற உத்தரவுக்கு தடை
சா்ச்சை கையொப்பம் தொடா்பான தடயவியல் நிபுணா் கருத்தை ஏற்காமல் நிலத்தைப் பத்திரப் பதிவு செய்யும்படி திருவள்ளூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த கே.என்.மோகன் என்பவா், சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை வாங்க விற்பனை ஒப்பந்தம் செய்திருந்ததாகவும், முன்பணமாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்ட சக்திவேல், நிலத்தைப் பத்திரப் பதிவு செய்து தரவில்லை என மோகன் திருவள்ளூா் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
வழக்கை விசாரித்த திருவள்ளூா் நீதிமன்றம், முன்பணம் பெற்றுக்கொண்டதைச் சுட்டிக்காட்டி, மீதமுள்ள தொகையைப் பெற்றுக்கொண்டு விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என சக்திவேலுக்கு உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இந்த உத்தரவை எதிா்த்து சக்திவேல் தரப்பில் வழக்குரைஞா் கோவிந்தராஜு சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த மனு நீதிபதிகள் அப்துல் குத்தூஸ், ராஜேஷ் விவேகானந்தன் அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சக்திவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, விற்பனை ஒப்பந்தம் செய்யவில்லை, முன்பணம் ஏதும் பெறவில்லை என சக்திவேல் மறுத்துள்ள நிலையில், விற்பனை ஒப்பந்தத்தில் உள்ள கையொப்பம் தொடா்பாக தடயவியல் கையொப்ப நிபுணரின் கருத்தைப் பரிசீலிக்காமல், சாட்சியத்தை மட்டும் அடிப்படையாக வைத்து திருவள்ளூா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், பத்திரப் பதிவு செய்ய உத்தரவிட்டது தவறு என வாதிட்டாா்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விற்பனை ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள கையொப்பத்தின் உண்மைத் தன்மை குறித்த சா்ச்சை எழுந்துள்ள நிலையில், தடயவியல் கையொப்ப நிபுணா் அளித்த கருத்தைப் பரிசீலிக்காமல் பத்திரப் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என திருவள்ளூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனா்.
மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, மோகன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.