முதன்மை பெற வேண்டும் பெண்கள் பாதுகாப்பு!
நம் நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் புகார்கள் வருகின்றன

நம் நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் புகார்கள் வருகின்றன என்றும், இதில் குடும்ப வன்முறை தொடர்பான புகார்களே அதிகம் உள்ளன என ஆணையத்தின் தலைவர் அண்மையில் தெரிவித்துள்ளார்.
பெண்கள் உடல் மீதான தாக்குதல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், வாய்மொழி மூலமாக துன்புறுத்தல், பொருளாதார ரீதியாக முடக்குதல் எனப் பல்வேறு வகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்படுகின்றன. இது தவிர, பொதுவாழ்வில் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்நோக்க திறனற்றோர் சிலர் அவர்களின் மீது தனிப்பட்ட முறையில் அவதூறுகள் கூறி மன உளைச்சலை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதுடன் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய மகளிர் ஆணையம் 1992-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அல்லது சிறுமி சார்பில் புகார் அளிக்கப்படவில்லை என்றாலும்கூட, தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் பெற்றது.
Advertisement
Advertisement
வரதட்சிணைக் கொடுமை தடுப்புச் சட்டம் 1961, குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம் 2005, பெண் குழந்தைகள் திருமண தடைச் சட்டம் 2006, போக்ஸோ சட்டம் 2012 எனப் பெண்கள், சிறார்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளபோதிலும் பெண்களுக்கான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவது வேதனைக்குரியது.
பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை கருதி, பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு ) சட்டப்படி 10 அல்லது அதற்கும் அதிகமாக பணிபுரியும் பணியாளர்கள் நிறுவனங்களில் பெண்கள் மீதான பாலியல் புகார் எழும்போது, அவற்றை விசாரிக்க உள் புகார் குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், இந்தக் குழு குறித்த விழிப்புணர்வை அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களிடையே ஏற்படுத்தினால் மட்டுமே பெண்களின் பாதுகாப்பை அந்த நிறுவனத்தில் உறுதிப்படுத்த முடியும்.
அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களில் பாலியல் துன்புறுத்துதலுக்குள்ளாகும் பெண்களில், சுமார் 3.54 சதவீதத்தினர் மட்டுமே முறையாக புகார் அளிக்க முன்வருவதாக தேசிய மகளிர் ஆணையத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
பெரு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களில் 70 சதவீதத்தினர் ஏதேனும் ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும், இதில் மூன்றில் ஒரு பகுதியினர் தாம் பழி வாங்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக தமக்கு இழைக்கப்படும் குற்றங்கள் குறித்து பொதுவெளியில் தெரிவிக்க முன்வருவதில்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் ஏற்படும் நெரிசலில் பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்படுவதாக வெளியாகும் செய்திகள் வருந்தத்தக்கது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வரதட்சிணை தொடர்பானவையே முக்கியப் பங்கு வகிக்கின்றன. வரதட்சிணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் 11 முதல் 17.4 சதவீதம் மட்டுமே விசாரணைக்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். வரதட்சிணை தொடர்பான சில வழக்குகளில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினரை பழிவாங்க பெண்களால் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி கல்லூரிகள் உள்ள பகுதிகள் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுப்பதற்கு சிங்கப்பெண் படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அதிரடி படை நடவடிக்கையால் கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 7,237 புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு குறுகிய காலத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக பெரும் எண்ணிக்கையிலான புகார்கள் எழுந்திருப்பது, பாலின சமத்துவம் அடைவதில் நம் சமூகம் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியதையே காட்டுகிறது.
சிறார்கள் மீதான குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட போக்úஸô சிறப்பு நீதிமன்றங்களில் அண்மைக்கால புள்ளிவிவரங்களின்படி சுமார் 18,675 வழக்குகள் நிலுவையில் உள்ளதென தெரியவந்துள்ளது.
பெண்களின் பாதுகாப்பு என்பது, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை, காவல் துறையினரும் நீதிமன்றமும் அதிவிரைவாக நடவடிக்கை எடுத்து தண்டனை அளித்தால் மட்டுமே சாத்தியமாகும்.
"கல்வி அறிவுடன், தற்காப்புணர்வு, பொருளாதார சுதந்திரம் எனப் பெண்களுக்கு பொதுவாழ்வில் சமமான பங்களிப்பு இருக்க வேண்டும்' என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். அத்தகைய பங்களிப்புக்கு பெண்களின் பாதுகாப்பு முதன்மையாகும்.
மேலும், காவல் துறை மற்றும் நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டு சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தமது சமூகக் கடமை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும். மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசு மற்றும் காவல் துறையினர் கடமை என்று கருதாது, அது அனைவருக்குமான சமூகக் கடமை என்பதை உணர வேண்டும்.