என் மூன்று வயதுப் பேரன் திட உணவு,சாதம், இட்லி போன்றவற்றைச் சாப்பிட மறுக்கிறான். வாயில் திணித்தாலும் துப்பி விடுகிறான். பழ வகைகளையும் விரும்பிச் சாப்பிடுவதில்லை. கடையில் விற்கும் சத்துமாவைப் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வருகிறான். கடும் மலச்சிக்கலால் கஷ்டப்படுகிறான். இந்த உபாதை மாற வழி என்ன?
அ.சாமிநாதன், கொரட்டூர், சென்னை.
வாயிலும் தொண்டையிலும் உள்ள நீர் தேக்கக் கோளங்கள் வறண்டு நீர்த்த உணவை எதிர்பார்த்திருக்கும் நிலையில் திட உணவை வாய் விரும்பி ஏற்பதில்லை. உணவு உள்ளே செலுத்தப்படவிருப்பதை முன் எதிர்பார்த்து அதனைப் பக்குவப்படுத்தத் தேவையான ஜீரணத் திரவங்கள் சுரந்து சூடேற்றி ஜீரண கோசம் ஆயத்தமாக இருப்பதை நாக்கில் தண்ணீர் ஊறுதல், வயிற்றில் காந்தல் உணர்வு, வயிறு குறைவது போன்றவை விட்டுவிட்டுத் தோன்றி பின் கிரமமாகத் தீவிரமடைவது முதலியவற்றால் உணரப்படும். இவை சரி வர ஏற்படாத நிலையில் வாயில் உணவைத் திணிப்பதால், எந்தப் பயனும் ஏற்படாது. அதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும் வகையில் பேரனுக்கு ஏற்பாடுகளைச் செய்து கொள்வது மிகவும் முக்கியம்.
அந்த வகையில், தயிர் தோய்ந்தநிலையில் தனித்துக் கீழே நிற்கும் தெளிவு, புளிப்பும், இனிப்பும், துவர்ப்பும் கலந்த சிறந்த பானம். ஓர் அழகான கண்ணாடி டம்ளரில் அரை கிளாஸ் ஊற்றி, எலுமிச்சம் பழச்சாறு சர்க்கரை கலந்து ஸ்பூன் போட்டு கையில் கொடுத்துச் சாப்பிடச் சொல்லவும். ருசி கோளங்களைத் திறந்துவிட்டு உமிழ்நீரின் வரவையும் அதிகப்படுத்தும். பசியைத் தூண்டும். மலமூத்திரக் கட்டைத் தளர்த்திவிடும்.
சத்து மாவைப் பசும்பாலில் கலந்து சாப்பிடும்போது அது நீர்த்து நெகிழ்ந்ததுமான உணவாக இருப்பதால், அதிக நேரம் வாயில் தங்காமல் உட்சென்று விடும். மென்று சாப்பிடுபவர்களுக்கு உமிழ்நீர் அதிகம் சுரக்கும். அதில் ஜீரணத் திரவாம்சம் இருப்பதால் உண்ட உணவை வாயிலேயே பக்குவமாக்கத் தொடங்குகிறது. அதனால் அதிக திரவ உணவைச் சாப்பிடுபவர்களும், பரக்கப் பரக்கச் சாப்பிடுபவர்களும் உமிழ்நீரால் பெறும் லாபத்தை இழந்துவிடுகின்றனர். உமிழ்நீரால் ஆக வேண்டிய ஜீரணமும், ஜீரணிக்கப்பட்ட உணவுச் சத்து உட்சேர்வதும் இதனால் குறைகிறதென்பது கவனத்துக்குரிய விஷயமாகும். உமிழ்நீரில் கரையும் சத்தே மனநிறைவைத் தருகிற நிறைவான பொருளாகும்.
பேரனுக்குச் சம வயதுள்ள சிறுவர் சிறுமியர் உள்ள உறவினர் வீட்டுக்கோ, நண்பர்கள் வீட்டுக்கோ பேரனை அழைத்துச் சென்று, அவர்களுடன் சேர்ந்து சாப்பிடும்படி பழக்கவும். அவர்கள் ஆவலுடன் உண்பதைக் கண்டால் உங்கள் பேரனும் உணவில் விருப்பத்துடன் உண்ண பழகிவிடுவான். உங்கள் பேரனைத் திட உணவு சாப்பிடும்படி இது தூண்டும்.
உமிழ்நீர் கோளங்களைச் சுறுசுறுப்பாக்கி திட உணவு சாப்பிடச் செய்வதில் இஞ்சிச் சாறு சிறந்தது. 200 மி.லி. இஞ்சிச் சாறு பிழிந்து, சிறிது நேரம் வைத்திருக்க சாறு தெளியும். அடியில் படிந்துள்ள சுண்ணாம்பு போன்றவற்றை அகற்றித் தெளிந்த சாறை 200 கிராம் சர்க்கரையுடன் கலந்து இளந்தீயில் காய்ச்சி பானகமாக்கி வடிகட்டி குங்குமப்பூ, ஏலம், ஜாதிக்காய், கிராம்பு வகைக்கு 1 கிராம், பச்சைக் கற்பூரம் 1/2 கிராம் கலந்து வைத்திருந்து உணவுக்கு முன் சாப்பிடக் கொடுக்கவும். உமிழ்நீர் சுரப்பி நன்றாக வேலை செய்யத் தொடங்கும். திட உணவை எளிதில் ஏற்கச் செய்யும். பசி, ஜீரண சக்தி அதிகமாகும். வயிற்றுக் கனம், உண்டவுடன் அசதி, தலை சுற்றுதல் போன்றவை நீங்கும்.
அரை ஸ்பூன் வில்வாதி லேஹியம் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, உமிழ்நீர் கோளங்களிலுள்ள அடைப்பை அகற்றி, உமிழ்நீரை அதிகப்படுத்தும். கபத்தினால் ஏற்படும் சில வாய் உபாதைகளான ருசியின்மை, நாக்கில் மாவு படிதல், வாய் துர்நாற்றம் போன்றவற்றையும் குணமாக்கி, பசியையும் தூண்டச் செய்யும். ஜீரகாரிஷ்டம் எனும் ஆயுர்வேத மருந்தை 5 மி.லி. அளவு காலை, மதியம், இரவு உணவுக்குப் பிறகு கொடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.