வயது 21 தான். ஆனால் அதற்குள் உலகப் புகழ். 2016 ஆகஸ்ட் மாதம் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற சாதனை பி.வி.சிந்துவுக்கு. இந்த வெற்றி, திடீர் அதிர்ஷ்டத்தில் கிடைத்தது இல்லை. பல தடைகளைக் கடந்து நின்று வென்று தன்னை முழுமையாக நிரூபித்துள்ளார் இந்த இளம் பெண். கடந்த சில வருடங்களாக உலக அரங்கில் பேட்மின்டனில் புதிய வெளிச்சங்களை இந்திய அணி பெறத் தொடங்கியுள்ளது. சர்வதேச அரங்கத்தில், இந்தியாவுக்கு புகழாரம் தேடித் தந்துள்ளார் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகி ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று, ஆணித்தரமாக தடம் பதித்த பி.வி. சிந்து. தன்னுடைய ஃபிட்னெஸ் ரகசியங்களை ஒரு பேட்டியில் கூறியது :
செம ஹைட்...செம ஃபிட். சிந்து நீங்க இவ்வளவு பக்கா ஃபிட்னெஸ்க்கு என்ன பண்றீங்க?
(சிரிக்கிறார்) என்னோட விளையாட்டுக்கு முதல் தகுதி ஃபிட்டா இருக்கறது தான். என்னோட ஹைட் 5.10’’ அம்மா அப்பா கொடுத்த வரம் இது. உடம்புல தெம்பு இருந்தா தான் நினைச்சதை சாதிக்க முடியும்னு என் பேரன்ட்ஸ் சொல்வாங்க. ஏன்னா அவங்க ரெண்டு பேருமே அதை சொல்றது மட்டுமில்லாம ஃபாலோ பண்ணியவங்க. என்னோட பெற்றோர், தேசிய அளவில் கைப்பந்து வீரர்களாக ஆடியவர்கள். அப்பா பி.வி.ரமணா அர்ஜூனா அவார்ட் வாங்கியவர். எனக்கு பேட்மின்டனில் ஆர்வம் தொடங்கிய சமயத்துல, தகுந்த பயிற்சியாளர்களிடம் அனுப்பி உற்சாகப் படுத்தினாங்க. முகமத் அலி தான் என்னோட முதல் கோச். அதுக்கப்பறம் கோபிசந்த் அகாதமில சேர்ந்துவிட்டாங்க. அதனால சின்ன வயசிலேர்ந்து என்னோட கான்சன்ட்ரேஷன் ஒரே பாதையிலே இருந்துச்சு. அதுக்கான அடிப்படை உடல் தகுதியை நான் படிப்படியா வளர்த்துக்கிட்டேன்.
தினமும் காலைல நாலு மணிக்கு எழுந்து நான் பயிற்சி எடுத்துக்கற கோபிசந்த் அகாதெமிக்கு கிளம்பிடுவேன். அது என்னோட வீடு இருக்கற செகந்த்ராபாத்லேர்ந்து கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தொலைவில இருக்கு. என் ப்ரென்ட்ஸ் சில பேர் ஆரம்பத்துல கேட்டாங்க ஏன் இவ்ளோ தூரம் ட்ராவல் தேவையான்னு நான் சிரிச்சிட்டுப் பேசாம இருந்துடுவேன். ஆனா அந்த தூரம் தான் வெற்றிக்கும் எனக்கும் நெருக்கம் வர காரணமாவே இருந்துச்சுன்னு இப்ப புரிஞ்சுக்கிட்டாங்க. ஆறு வருஷம் இப்படி பயிற்சி. அப்பா என்னோட தீவிரமான பயிற்சியையும் பயணத்தையும் பார்த்து ஒரு முடிவெடுத்து மூன்று வருஷத்துக்கு முன்னாடி அகாடமி பக்கத்திலேயே ஒரு வீடு வாங்கிட்டார். இப்ப எனக்காக அப்பா 40 கிலோ மீட்டர் பயணம் செஞ்சு அவரோட ஆபிசுக்கு போக வேண்டி இருக்கு. என் பேரன்ட்ஸ் எனக்காக எவ்வளவோ தியாகங்கள் செஞ்சி தான் என்னோட வெற்றிக்கு உறுதுணையா இருக்காங்க. அவங்க சப்போர்ட் இல்லைன்னா என்னால ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைச்சிருக்க முடியாது. அடுத்து என்னோட குரு கோபிநாத். அவரோட வழிகாட்டல், கூடவே இருந்து நுணுக்கங்கள் சொல்லிக் கொடுத்ததுதான் எனக்கு பேஸ். அகாதெமில தினமும் 7.30 லேர்ந்து 9.30 வரைக்கும் பயிற்சி. அதுக்கப்பறம் காலை உணவு சாப்பிட்டுட்டு அங்கேயே கொஞ்ச நேரம் ரெஸ்ட். மறுபடியும் 11 மணிக்கு ஆரம்பிக்கற பயிற்சி ஒரு மணி வரைக்கும் நீடிக்கும். லன்ச் ப்ரேக் முடிச்சிட்டு ஈவ்னிங் 4.30 லேர்ந்து 6.30 மணி வரைக்கும் இடைவிடாத பயிற்சி. தினமும் காலை 4 மணிக்கு அகாடமிக்குள் நுழைகிற கோபிசந்த், வீடு திரும்ப இரவு ஏழு மணி ஆகிவிடும். இந்த அர்ப்பணிப்புதான் இன்னிக்கு இந்த வெற்றியை தேடித் தந்திருக்குன்னு சொல்லலாம்.
எங்க அகாதெமில ஃபிட்னெஸ் பயிற்சிகள் எல்லாமே கடுமையா இருக்கும். ரன்னிங், ஸ்ட்ரென்த் ட்ரெயினிங், கோர் மசில்ஸ், இடுப்பு, கால் தசைகளுக்கான பயிற்சி, தோள்களுக்கான பயிற்சி, தவிர மொத்த உடலுக்கான பயிற்சி க்ரிஸ் மாஸ்டர் தருவாங்க. தவிர வெயிட் தூக்கற பயிற்சிகளும் இருக்கும். நீச்சல் பயிற்சி தினமும் செய்வேன். பேன்ட்மின்டன் டெக்னிக்ஸ் பயிற்சி நடக்கும். கட்டாயம் யோகா செய்வேன். அது மனசை ஒருமுகப்படுத்த ரொம்ப உதவியா இருக்கு. ஒவ்வொரு ஸ்ட்ரோக்கை எதிர்கொள்ளும் போது நமக்கு எதிராளியை கூர்மையா கவனிக்கணும், ஆப்போனன்ட் அடுத்து என்ன மாதிரி விளையாடுவாங்கன்னு அவங்களோட மூவ்மென்ட்டை அவதானிக்கணும், அதுக்கு மைன்ட் கால்குலேஷன் ரொம்ப முக்கியம், யோகாவால இது எனக்கு இயல்பா செய்ய முடியுது. மனசையும் டென்ஷன் வர விடாம, ரிலாக்ஸா இருக்க வைக்குது. உடற்பயிற்சி மட்டும் ஒரு விளையாட்டு வீரருக்கு முக்கியம்னு சொல்வாங்க, ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் மன உறுதியும் உற்சாகமும் தெளிவும் ரொம்பவே தேவை. அதுக்கு அடிப்படை யோகா மட்டும் தான்.
ஏன் பேட்மின்டன்? வேற எவ்வளவோ துறை இருக்குதே?
முன்னாடி சொன்ன மாதிரி என் அப்பா அம்மா ரெண்டு பேரும் விளையாட்டுத் துறைல இருந்தவங்க. என்னோட சின்ன வயசிலே, அப்பா க்ரவுன்ட்ல வாலிபால் ப்ராக்டிஸ் பண்ணறப்ப, நானும் அவர் கூட போவேன். க்ரவுன்ட்ல போய் விளையாடணும்னா அவ்வளவு இஷ்டம். அந்த பெரிய பரந்த இடத்துல ஓடி விளையாடுவேன். அப்ப சும்மா விளையாட்டுக்கு பேட்மின்டன் விளையாட ஆரம்பிச்சேன். அந்த கேம் என்னை ரொம்ப கவர்ந்துடுச்சு. என் அப்பாவுக்கு என்னோட ஆர்வம் புரிந்து அதுக்கேத்த மாதிரி என்னை ட்யூன் பண்ணி பயிற்சிக்கு அனுப்பினாங்க. என்னோட முதல் குரு ஹர்வீந்தர் சிங் அதுக்கப்பறம் கோபி சார். என்னோட ஒவ்வொரு வெற்றிக்கும் அடித்தளம் போட்டவர் அவர் தான்.
விளையாட்டுத் தவிர வேற என்ன ஆர்வம் சிந்துவுக்கு?
படங்கள் பாக்கறது ரொம்ப பிடிக்கும். இந்த மாதிரி படம்னு குறிப்பிட்டு இல்லாமே எல்லா ஜாலியான படங்களும் ஆர்வமா பார்ப்பேன். வீட்ல இருக்கறப்ப என்னைச் சுத்தி எப்பவும் ம்யூசிக் இருக்கும். தங்கையோட அரட்டை அடிக்கறது ரொம்ப பிடிக்கும். ம்ம்ம்ம்...அப்பறம் நல்லா ட்ரெஸ் பண்ணிக்க பிடிக்கும். ட்ரெஸிங் எலிகென்ட்டா இருக்கணும். ஆனா இந்த ஆர்வம் எல்லாம் என்னோட விளையாட்டுக்கு அடுத்தபடி தான். ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிக்கணும்... உலகத் தர வரிசையில நம்பர் ஒன் பட்டத்தை வாங்கறதுதான் என்னோட ஒரே கனவு ஒரே லட்சியமா இருக்கும்.
மேட்ச் விளையாட எப்படி தயார் ஆகறீங்க?
நல்லா விளையாடணும்ங்கற எண்ணம் மட்டும் தான் மனசு முழுக்க இருக்கும். என்னோட முழுத் திறனையும் காட்டணும்னு தீவிரமா இருப்பேன். முழு கவனமும் விளையாடப் போற கணங்களை எதிர்நோக்கித் தான் இருக்கும். அதுக்கறம் களம் இறங்கிட்டேனே அது மட்டும் தான் என்னோட மூச்சு.
வெற்றி தோல்வியை எப்படி எடுத்துக்கறீங்க?
சந்தோஷமா இருக்கும். இன்னும் சிறப்பா விளையாடுனும்ங்கற தீவிரத்தையும் பொறுப்பையும் ஒவ்வொரு வெற்றியும் விதைக்குது. தோல்வி வரும் தான். ஆனா அதுல வீழ்ந்திட மாட்டேன். துவண்டு போகவும் மாட்டேன். என்ன தப்பு பண்ணேன் ஏன் முடியாம போச்சுன்னு ஆழமா யோசிப்பேன். மறுபடி மறுபடி மனசுக்குள்ள அந்த தோல்விக்கான காரணத்தை உறுபோட்டு வைச்சிட்டு அடுத்த தடவை அதைத் தவிர்த்து வெற்றி வளையத்துக்குள்ள வந்துடுவேன். வெற்றி சந்தோஷத்தை தருதுன்னா தோல்வி நிறைய கத்துக்க வைக்குது. இன்னும் ஆழமான பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்துது. விளையாடணும், ஜெயிக்கணும், இதுதான் என்னோட பவர்புல் மந்த்ரா..
என்ன உணவு உங்களை உறுதியா வைச்சிருக்கு? எது பிடிச்ச ஃபுட்?
பிடிச்ச ஃபுட் அப்படின்னு எதுவும் தனியா பிரிச்சு பாக்கமாட்டேன். என்னோட டயட் ஹெல்தி டயட். உணவுல நிறைய புரதம் இருக்கற மாதிரி சாப்பிடுவேன். பால் பழங்கள், முட்டி தினசரி உணவுல கட்டாயம் இருக்கும். அம்மா பண்ணித் தர ஹெல்தி ரெசிபி என்னை ஆரோக்கியமா வைச்சிருக்கு.
மறக்க முடியாத சம்பவம் எதாவது இருக்கா?
20வது உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற முதல் இந்திய வீராங்கனைங்கற பேர் கிடைச்சது மறக்க முடியாது. இது எனக்கு அடுத்து செல்ல வேண்டிய தூரத்தை நினைவு படுத்திட்டே இருக்கு...
இந்த இளம் வயதில் இத்தனை தெளிவாக இருப்பது ஆச்சரியம்...வாழ்த்துக்கள் சிந்து....கனவு மெய்ப்படும்!
இளம் வீரர்களுக்கு சிந்து தரும் ஹெல்த் டிப்ஸ்
அதிகாலை எழுவது ரொம்ப முக்கியம். அது புத்துணர்சி தருவதோடு மனசுல வைராக்கியத்தை தக்க வைச்சிக்க அந்த சுத்தமான காத்தும், ஒரு புது நாளோட ஆரம்பமும் நம்மளை உற்சாகப்படுத்தும்.
உங்க திறமை எதுவா இருந்தாலும் அதை நோக்கி சிங்கிள் மைன்டடா ட்ராவல் பண்ணனும். இடையில் என்ன பிரச்னை வந்தாலும் அதை கைவிட்டுடக் கூடாது.
சாப்பாடு விஷயத்துல அக்கறை எடுத்துக்கணும். தினமும் நாம சாப்பிடற உணவு தான் நமக்கு எனர்ஜி. அதனால அதை ரொம்ப கவனமா சாப்பிடறது நல்லது. ஜூஸ், சாலட், பழங்கள் நிறைய சாப்பிட்டா அதுல ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கும். இளநீர் குடிச்சா உடனடி சக்தி கிடைக்கும். அதிக அளவுல ஆர்கானிக் புட்ஸ் எடுத்துப்பேன். எந்த நாட்டுக்குப் போனாலும் அங்க கிடைக்கற சீசனல் ப்ரூட்ஸ் சாப்பிடுவேன். அது தான் உடம்பை மட்டும் இல்லை மூளையையும் சுறுசுறுப்பா இயங்க வைக்குது.
விளையாடறப்ப நாம தெளிவான மனநிலைல இருக்கணும். பதட்டம் கூடவே கூடாது. ஜெயிப்போமா தோற்போமாங்கற தாட்ஸ் எல்லாம் வரக் கூடாது. நல்லபடியா ஷார்ப்பா விளையாடணும், அந்த விளையாட்டோட தன்மை நம்மளை வெற்றியோட படிநிலைக்கு உயர்த்தும். இது வாழ்க்கைக்கும் பொருந்தும்.
ஜாலியா மனசை ரிலாக்ஸ்டா வைச்சிக்கப் பழகிக்கணும். இன்னிக்கும், இந்த நிமிஷமும் மறுபடியும் வரப் போறது இல்லை. அதை ஸ்பெஷலா சந்தோஷமா வைச்சிக்கறதுதான் நம்ம கையில் இருக்குன்னு என்னோட பேரன்ட்ஸ் அடிக்கடி சொல்வாங்க. அது நூறு சதவிகதம் உண்மைன்னு புரிஞ்சுக்கிட்டேன். லிவ் தி மொமன்ட் அது சொல்லா இல்லாம செயல்படுத்திப் பார்த்தோம்னா ஒவ்வொரு நிமிஷமும் உயிர்ப்போட இருக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.