முகப்பு
ஃபிட்னஸ்

நீங்கள் உடற்பயிற்சி செய்பவரா? இதைக் கடைபிடியுங்கள்!

சிலர் உடல் எடையைக் குறைக்க பயிற்சி செய்வார்கள். சிலர் உடல் எடையைக் கூட்ட செய்வார்கள். வேறு சிலர் சக்திக்காகவும்,

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:25 PM
பகிர்:

சிலர் உடல் எடையைக் குறைக்க பயிற்சி செய்வார்கள். சிலர் உடல் எடையைக் கூட்ட செய்வார்கள். வேறு சிலர் சக்திக்காகவும், உடலை நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற சுய விருப்பம் காரணமாகவும் பயிற்சியில் ஈடுபடுவார்கள். நோக்கம் எதுவாக இருந்தாலும் அதைச் சரியாக செய்வது மிகவும் முக்கியம். எந்த அளவுக்கு நாம் பயிற்சிக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவு பயிற்சி செய்யும் முன்னர், செய்கையில் மற்றும் பயிற்சியை முடித்த பின் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பற்றிய தெளிவும் நமக்குத் தேவை.

வொர்க் அவுட்ஸ், வாக்கிங், ஸ்விமிங் அல்லது எந்தவிதமான உடற் சார்ந்த பயிற்சியாகட்டும் சரியான அளவு உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். 

பயிற்சிக்கு முன் (ப்ரீ வொர்க் அவுட்)

பயிற்சியைத் தொடங்கும் போது வெறும் வயிற்றில் தொடங்கக் கூடாது. பயிற்சியை செய்வதற்கு முதலில் உடலில் தெம்பு வேண்டும். பயிற்சி செய்கையில் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகிறது. அதற்கு மிகவும் சக்தி தேவை. சக்தி தேவை எனும் போது உணவும் தேவை. வெறும் வயிற்றில் செய்தால் தலை சுத்தலாம், அல்லது உடல் மிகவும் சோர்வடைந்துவிடலாம். அதனால் ப்ரீ வொர்க் அவுட் சத்துணவு எடுத்துக் கொள்வது முக்கியம். ஆனால் அதற்றாக எந்த மாதிரியான உணவையும் சாப்பிட முடியாது. நாம் சாப்பிடும் உணவு மெதுவாக செரிமானம் ஆகவேண்டும். இத்தகைய உணவை காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் என்போம். இந்த உணவின் சிறப்பு அது நம் ரத்தத்தின் சர்க்கரை அளவை அப்படியே நிலைத்திருக்க வைக்கும். பயிற்சிக்கு முன் முழுச் சாப்பாடு சாப்பிட்டால் அது செரிமானம் ஆகிவிடும். அந்த உணவில் மாவுச் சத்து அதிகம் இருப்பதே காரணம். 

பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டியவை பழங்கள், நட்ஸ் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து இருக்கிறது. காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் இருப்பதால் மெதுவாக செரிமானம் ஆகும். பயிற்சி செய்யும் போது முழுக்க முழுக்க தெம்பாக இருக்கலாம். சோர்வு ஏற்படாது. 

பயிற்சியின் போது (வொர்க் அவுட் செய்கையில்)

உடற்பயிற்சி செய்கையில் உடலில் சக்தியை முடிந்த அளவு எரிக்கிறோம். கையிருப்பில் உள்ளவற்றை செலவு செய்துவிட்டால், அதன் பின் கஜானா காலியாகிவிடுமே...இதற்குத் தேவை சத்து. இப்போது எந்த மாதிரியான உணவு தேவை என்றால் உடலில் உடனே போய் சேர்ந்துவிடக் கூடிய சத்தான உணவுப் பொருள். நீரின்றி அமையாது உலகு என்பது போல நீரின்றி அமையாது உடலும் கூட. சிலர் தண்ணீர் குடித்தால் பயிற்சி செய்ய முடியாது என்பார்கள். அது சரியில்லை. பயிற்சியின் போது ஒரேடியாக தண்ணீர் குடிக்கக் கூடாதே தவிர, ஒரு மணி நேரத்தில் அரை லிட்டர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துவிடவேண்டும். தண்ணீரைத் தவிர எதைக் குடிக்கலாம் என்றால் இயற்கைத் தந்த பெரும் கொடையான இளநீர் தான். பயிற்சியின் போது இடையிடையே இதைக் குடித்தால் மிகவும் நல்லது. இதில் பொட்டாஷியம் இருப்பதால் தசைகள் சோர்வடையாமல் இருக்க உதவும். ஒரு மணிப் பயிற்சியை உற்சாகமாக செய்து முடிக்கலாம். தசைகள் வலிக்காது. கையைத் தூக்க முடியவில்லை என்று சொல்லாமல் நன்றாக இலகுவாக செய்ய முடியும். 

கடுமையான பயிற்சி செய்பவர்கள் எனர்ஜி ட்ரிங் அல்லது எனர்ஜி பார் சாப்பிடலாம். இதில் எலக்ட்ரோலைட், சோடியம் பொட்டாஷியம் இருப்பதால் சக்தியை தக்க வைக்க உதவும். தசைகள் எளிதாக பழைய நிலைக்குத் திரும்பும். புது வேகத்தையும் உற்சாகத்தையும் உடலுக்குத் தரும். ஆனால் பழச்சாறு குடிக்கக் கூடாது. அது உடனே உடலில் சேர்ந்து, ரத்தத்தில் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். 

பயிற்சிக்குப் பின் (போஸ்ட் வொர்க் அவுட்)

அவரவர் உடல் சக்திக்கு ஏற்ப ஒரு மணி நேரம் பயிற்சி செய்தபின் நிறைய கலோரிகள் எரிக்கப்பட்டிருக்கும். எனவே வொர்க் அவுட் செய்த பின் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் கட்டாயம் சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தை கோல்டன் ஹவர் என்பார்கள். நம் உடலில் உள்ள தசைகள் பயிற்சியின் காரணமாக ப்ரேக் டவுன் ஆகி இயல்புத் தன்மை மாறி இறுகிப் போய் இருக்கும். அந்த இறுக்கத்தை நேராக்கி பழையபடி தசைகள் இலகுவாக, இயல்பு நிலைக்குத் திரும்ப புரதச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். இந்த நேரத்தில் சரியான சத்தான உணவு சாப்பிட்டால் அது நம் உடலில் உள்ள தசைகள் பாதிப்படையாமல் இருக்கச் செய்யும்.

இயற்கை உணவில் புரதச் சத்து நிறைய உள்ளது. மோர், முட்டையின் வெள்ளைக் கரு சாப்பிடலாம். அல்லது ஸ்மூதி எனப்படும் பழக் கூழை சாப்பிடலாம் (வாழைப் பழம், பப்பாளி அல்லது ஆப்பிள் இதில் எதாவது ஒரு பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தயிரைச் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின் மிக்சியில் போட்டு அரைக்கவும். இந்தக் கலவையை வடி கட்டக் கூடாது. மில்க் ஷேக் பதத்தில் ப்ளென்ட் பண்ண வேண்டும். இது மிகவும் நல்லது. கடுமையான பயிற்சிகளை செய்பவர்கள் வே ப்ரோட்டின் எடுத்துக் கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.