ஃபிட்னஸ்

உடற்பயிற்சியும் மன உறுதியும்

சுமதி

உடல் பருமனாக இருந்தால் ஒல்லியாக முயற்சி செய்வோம். மெலிந்து இருந்தாலோ சதை பிடிக்க  ஆசைப்படுவோம். உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருப்பது பெரும்பாலனோர்க்கு சவாலான ஒரு விஷயம் தான். எப்படிப்பட்ட உருவ அமைப்புடன் இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன் என்று நம்மில் பலர் புலம்புவது உண்மைதானே?

உடல் பருமன் தேவையில்லாத சில பிரச்னைகளுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே கவனத்துடன் உடல் நலத்தில் அக்கறை எடுக்க வேண்டும். தினமும் சிறிது நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்தால் நமக்கு நாமே ஒரு பரிசு கொடுத்துக் கொள்கிறோம் எனக் கொள்ளலாம். ஆம் மருத்துவமனையில் நோயில் வீழ்ந்து கிடக்கும் நிலைக்குச் செல்லாமல் எப்போதும் சக்தியும் புத்துணர்வுடன் இருக்க நம்மைப் பழக்கிக் கொள்வது எவ்வளவு அவசியம்?  முதலில் உங்களுக்கு உடற்பயிற்சி தேவையா இல்லையா என்பதை ஒரு சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

  1. ஒரு மைல் தூரம் நடக்கும்போதோ, இரண்டு மாடிகள் ஏறும்போதோ உங்களுக்குக் களைப்பு, மூச்சு வாங்குவது இருக்கிறதா?
  2. கால்களை அருகருகே வைத்து முழங்கால் முட்டிகளை மடக்காமல் குனிந்து உங்கள் இரு கைகளாலும் உங்கள் கால்களின் பெருவிரல்களைத் தொட முடிகிறதா?
  3. வேகமாக நடக்கும்போது உங்களால் தயக்கமின்றிப் பேசிக் கொண்டே வரமுடிகிறதா? அல்லது தடையின்றி பாடமுடிகிறதா?

இதெல்லாம் முடிந்தால் நீங்கள் ஆரோக்கியமான உடல் உள்ளவர்கள்தான். முடியவில்லை என்றால் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும். சிலர் புது வருட சபதம் எடுப்பார்கள். நாளையிலிருந்து நான் வாக்கிங் போவேன். இரண்டு மூன்று நாட்கள் அல்லது சில வாரங்கள் ஜோராக வாக் செய்வார்கள். ஆனால் அடுத்த நாள் மனம் தன் வேலையை தொடங்கிவிடும். இன்னிக்கு ஒரு நாள் லீவ் விட்டுக்கலாம் என்று ஆரம்பித்து படிப்படியாக ஆர்வம் குறைந்து, இப்ப வாக்கிங் போய் என்ன சாதித்துவிட்டோம், ஒண்ணும் குறைந்த மாதிரி தெரியலையே என்று ஒரேடியாக கைவிட்டுவிடுவார்கள். இத்தகைய சோம்பல் தான் அவர்கள் வாழ்க்கையில் மிகப் பேரிய நோய்க்கூறு. மனத்தை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பழகினால் உடல் சொன்னதைக் கேட்கும். ஒழுங்கமைதியில் இருக்கும். நல்ல ஆரோக்கியமான உடலை வில்லாக வளையச் செய்யலாம்,, வேகமாக ஓடலாம், ஆடலாம் உடலின் உச்சபட்ச சாத்தியங்களை செய்யலாம். ஆனால் இறைவன் கொடுத்த வரமான இந்த உடலை வெறும் உணவுக் கிடங்காக பலர் வைத்திருப்பதால் தான் ஆரோக்கிய கேடு நிகழ்கிறது. உணவு நன்றாக செரித்துவிட்டாலே பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். அதற்கு அடிப்படை சுறுசுறுப்பாக இருப்பதே. எனவே எதோ ஒரு பயிற்சியை தினமும் மேற்கொண்டால் நிச்சயம் அதற்கேற்ற பலன் கிடைக்கும்.

உடற்பயிற்சியை பல விதமாக செய்து கொள்ளலாம். வாய்ப்பும் வசதியும் இருப்பவர்கள் ஜிம்முக்கு சென்று தங்கள் உடலை பேணிக் கொள்ளலாம். கண்களை மூடிக் கொண்டு அவர்கள் சொல்வதை பின்பற்றினால் சில வாரங்களிலேயே மேஜிக் செயல்படத் தொடங்கிவிடும். 

ஜிம்முக்குப் போக நேரமில்லை என்று வருந்துபவர்கள் வீட்டிலேயே சில எளிய பயிற்சிகளை செய்யலாம். அதிகபட்சமாக அரை மணி நேரம் அல்லது குறைந்த பட்சமாக 15 நிமிடம் செலவழித்தால் போதும். ஆரோக்கிய வாழ்க்கை ஆரம்பநிலைக்கு வந்துவிடலாம்.

உடல் ஆரோக்கியத்துக்கு கடைபிடிக்க வேண்டிய அடிப்படை உடற்பயிற்சிகள் கற்றுக் கொள்ளுங்கள். முப்பதி நாட்கள் போதுமானது உங்களில் சின்னதாக ஒரு மாற்றம் தெரியும்.  ஜீரோ சைஸ் எல்லாம் வேண்டாம். உடல் நலம் ஒன்றே இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியும் என நம்புங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

SCROLL FOR NEXT