செய்திகள்

உடலுறுப்பு மறுசீரமைப்பு சிகிச்சைக்கான தேவையை உலகப் போர்கள் உணர்த்தின

DIN

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள்தான் உடலுறுப்புகள் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கான தேவையை உலகுக்கு உணர்த்தின என்று பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆர்.வெங்கடசாமி கூறினார்.
சென்னை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவ மையத்தின் சார்பில் 'காஸ்மோகிளிட்ஸ்' விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உடல் எடையைக் குறைக்க, தேவையில்லாத கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் அறுவை சிகிச்சை தொடர்பாக சுனிதா ராஜ் எழுதிய 'லைபோசக்ஷன்-தி பிக் ஃபேட் ஸ்டோரி' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்தப் புத்தகத்தை வெளியிட்டு டாக்டர் ஆர்.வெங்கடசாமி பேசியது:
நான் மாணவனாக இருந்த காலத்தில் உடலுறுப்புகள் மறுசீரமைப்பு தொடர்பாக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்தன. ஆனால் அதற்கானத் தேவை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் பல போர் வீரர்களின் உறுப்புகள் சிதைந்து போயின. குறிப்பாக விமானப்படை வீரர்களின் முகங்கள் பாதிக்கு மேல் சிதைந்து போயின. அந்த நிகழ்வுகள்தான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கவனத்தை உறுப்புகளின் மறுசீரமைப்பின் பக்கம் திருப்பியது.
முந்தைய காலங்களில் இந்தியர்கள், கடவுள் கொடுத்த உடலை மாற்றக்கூடாது என்று நினைப்பார்கள். ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. அழகியல் அறுவை சிகிச்சைகளை பலர் மேற்கொள்கின்றனர்.
ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும், வளர்ச்சியடையாத நாடுகளிலும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்களுக்கான தேவை அதிகம் உள்ளது. பிறவிக் குறைபாடு, விபத்தில் சிக்கியோர், தீக்காயம் அடைந்தோர் என மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவமனைகளில் அதிகம் காணப்படுகின்றனர்.
அழகியல் அறுவை சிகிச்சைகள் மூலம் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கான தேவையையும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார் டாக்டர் வெங்கடசாமி.
நிகழ்ச்சியில், ரைட்டர்ஸ் கஃபே என்ற நிறுவனத்தில் அமிலம் மற்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு பணியாற்றும் 8 பெண்களுக்கு பீனிக்ஸ் என்ற பெயரில் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சென்னை பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மையத்தின் நிபுணர் கார்த்திக் ராம், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT