செய்திகள்

உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உள்ளதா? எச்சரிக்கை, அது மனநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்!

தினமணி

பள்ளியில் நாம் படித்த காலத்திலேயே நல்ல பழக்கம் எவை, தீய பழக்கம் எவை என்று ஒரு கேள்வி வரும். அதில் அனைவரும் நல்ல பழக்கத்தில் இரு வேளை பல் தேய்ப்பது, சாப்பிடுவதற்கு முன்பு கை கழுவுவது என்று எழுதுவதைப்போல தீய பழக்கத்தில் முதலில் எழுதுவது ‘நகம் கடிப்பது’தான். என்னதான் இது தீய பழக்கம் என்று நமக்குத் தெரிந்தாலும், பல பதட்டமான நேரங்களில் நம்மையே அறியாமல் நகத்தை கடித்துக்கொண்டிருப்போம்.

ஏன் இதைத் தீய பழக்கம் என்கிறார்கள்? ஆரோக்கியத்திற்கு இதனால் என்ன ஆபத்து வரும்? உண்மையில் இது ஒரு மன நோயா? இந்தக் கேள்விகளை எல்லாம் யோசிக்கும்போதே, நகத்தை வாயில் போட்டு மென்றுகொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய பிரச்னை சற்று தீவிரம்தான்.

சமீபத்தில் நடத்தப்பட்ட பல ஆய்வு முடிவுகளில் இந்தப் பழக்கம் மன நோய் இருப்பதற்கான ஒரு அறிகுறி என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, இந்தப் பழக்கம் தேவையற்ற சிந்தனைகள் அல்லது அதீத பயம் உள்ளவர்களிடம் இருப்பதாகவும், இந்த இரண்டு பிரச்னைகள் மன நோய்க்கான ஒரு முக்கியக் காரணம் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மன நோய் உள்ளவர்கள் தங்களது முடியைப் பிடித்து தாங்களே இழுப்பது, உடல் எங்கும் நகத்தை வைத்துக் கிள்ளி காயங்களை ஏற்படுத்துவது போன்ற தன்னைத் தானே வருத்தும் செயல்களில் ஈடுபடுவார்கள். அதேபோல், இந்த நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களும் முதலில் நகத்தைக் கடிக்க தொடங்கி நாளடைவில் நகக் கண் எனப்படும் நகத்தைச் சுற்றி இருக்கும் சதையை மெல்லக் கடித்து இறுதியாக ரத்தம் வரும் அளவிற்குக் கடித்து அந்த ரத்தத்தையும் சப்பி விழுங்கிவிடுவார்கள். இதன் அடிப்படையிலேயே மருத்துவர்கள் இதை மன நோய் வருவதற்கான ஒரு அறிகுறி என்று பார்க்கிறார்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கு இந்தப் பழக்கம் எப்படி கேடு விளைவிக்கிறது என்றால், கை நகங்களில் இருக்கும் கிருமிகள் நகத்தைக் கடித்து துப்பினால்கூட சரி, அதன் வழியாக நம் வாயினுள் நுழைந்துவிடுகின்றன. இதனால் ஒவ்வாமை, வயிற்றுக் கோளாறு, செரிமான பிரச்னை போன்றவை ஏற்படுகின்றன. இதனால் உடலின் எதிர்ப்பு சக்தியும் குறையும் அபாயமும் உள்ளது. 

எப்படித் தடுப்பது?

  1. உங்களுக்குப் பிடிக்காத சுவை, உதாரணத்திற்கு கசப்பு, துவர்ப்பு போன்ற சுவை உள்ள சாறுகளை விரல்களில் பூசி நகம் கடிப்பதைத் தடுக்கலாம்.
  2. நகத்தில் நெயில் பாலிஷ் வையுங்கள்.
  3. நகத்தில் பேண்டெய்ட் போன்றவற்றை ஒட்டி நகத்தைக் கடிக்க முடியாதபடி செய்யுங்கள்.
  4. நகத்தைக் கடிக்கும் அளவிற்குப் பெரிதாக வளரவிடாமல் தொடர்ச்சியாக வெட்டி அழகாக வைத்திருங்கள்.
  5. நகத்தைக் கடிக்கத் தோணும்போது நன்கு கடித்து சாப்பிடக்கூடிய உணவுப் பொருள் எதையாவது சாப்பிடுங்கள்.
  6. லாலி பாப் போன்ற எதையாவது வாயில் வைத்துக்கொண்டே இருங்கள்.
  7. மன அழுத்தத்தைக் குறைக்கும் ஸ்மைலி பால், ஃபிட்ஜட் ஸ்பின்னர், ஸ்லைம் போன்றவற்றைக் கையில் வைத்து உங்கள் கைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள்.

எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு. நான் எவ்வளவோ முயற்சி செய்தேன் என்னால் முடியவில்லை என்று விட்டுவிடாமல், சரியான  வழிமுறைகளின் மூலம் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT