ஞாபக மறதி  
செய்திகள்

ஞாபக மறதி வராமல் இருக்க ஞாபகமாக செய்ய வேண்டியவை!

ஞாபக மறதி வராமல் இருக்க செய்ய வேண்டியவை சின்ன சின்ன நடைமுறைகள்..

இணையதளச் செய்திப் பிரிவு

நினைவாற்றல் என்பது இப்போதெல்லாம் ஆயக் கலைகளில் ஒன்றாகி பலருக்கும் கிட்டாததாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதனை அப்படியே விட்டுவிட முடியாது. நினைவாற்றலை வளர்க்க ஞாபகமாக சில விஷயங்களை செய்தே ஆக வேண்டும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் அல்ஜீமர் நோய்க்கு நோ என்ட்ரி சொல்லிவிடலாம் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. காரணம் ஒமேகா 3 நினைவாற்றல் செல்களை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்க உதவுகிறது, அதனால் அல்ஜீமர் நோய் பாதிப்புகளிலிருந்து தப்பலாம் என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவு.

அல்ஜீமர் என்றாலே அது கொஞ்சம் கொஞ்சமாக ஞாபக சக்தியை இழக்கச் செய்து ஒரு கட்டத்தில் நாம் யாரென்றே மறக்க செய்துவிடும் அளவுக்கு கொடுமையானது. நினைவாற்றல் மற்றும் மூளைத் திறனை முற்றிலும் பாதிப்படையச் செய்துவிடும் நோய் அது. இந்த நோயைத் தடுக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மத்தி, நெத்திலி, கெளுத்தி மற்றும் சால்மன் வகை மீன்களில் உள்ளது.

சைவத்தில் என்றால், ப்ளக்ஸ் விதை, வால்நட், சோயா பீன்ஸ் மற்றும் புதினா ஆகியவற்றில் காணப்படுகின்றது. மூளையின் ஆரோக்கியத்துக்கு இந்த சத்து மிகவும் அவசியம்.

மருந்து மாத்திரைகள் மூலமாகவும் ஒமேகா 3 பெற முடியும். மீனில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா 3 இருக்கிறது. ஆனால் உணவின் வாயிலாகக் கிடைக்கும் சத்து தான் மிகவும் நல்லது. காரணம் உணவுடன் சேர்ந்து பெறும் போது உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துகளும் கிடைத்துவிடும். கர்ப்பிணிகள் தேவையான அளவு ஒமேகா 3 எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் பிறக்கும் குழந்தைகள் கவனக்குறைபாட்டுப் பிரச்னைக்கு ஆளாகலாம். கர்ப்ப காலத்தில் ஒமேகா 3 உணவுகளை சாப்பிட்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் புத்திக்கூர்மையுடன் இருப்பதும் முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஞாபக மறதி என்பது 55 அல்லது 60 வயதிற்குப் பிறகு சகஜமான ஒன்றுதான். ஆனால், தற்போது வெகு விரைவாகவே ஞாபக மறதி வந்துவிடுகிறது. இது பரம்பரையாக வரக் கூடும் என்றும் அச்சமூட்டுகின்றன செய்திகள்.

ஞாபக மறதி அதிகரிக்க பயம் ஏற்பட்டு, அதனால் பதற்றம் அடைவார்கள். பதற்ற நிலையில் இருந்தால் நிச்சயம் நினைவுத் திறன் குறையும். இது ஒரு வித வட்டம் போலத் தான். எனவே மறதியைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம், தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எளிதாக இதை எதிர்க்கொள்ள முடியும்.

வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் செய்யும் வேலைகளில் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்தால் மறதியை கட்டுக்குள் வைக்கலாம். உதாரணமாக ஒரு வேலையைத் தொடங்கும் முன் அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்து முடித்து விடுவது நல்லது. பொருட்களையும் அதனதன் இடத்தில் வைத்துவிட்டால் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் இட்டு, ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும், அந்த வேலையைச் செய்து முடித்ததும் அதைக் குறித்துக் கொள்ளுங்கள்.

உடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வைக்க வேண்டும். செஸ், கேரம் போர்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுகள் மூளையை கூர்மையாக்கும். நினைவுத் திறன், கவனம், ஒரு செயலின் மீது கருத்தை நிலை நிறுத்துதல் போன்றவற்றை மேம்படுத்தும்.

போதுமான தூக்கத்தை பெறவில்லையெனில் மறதி அதிகரிக்கும். தூக்கத்தில் ஏதேனும் நினைவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் முழுமையான தூக்கத்தை பெற முடியாது.

சத்தான காய்கறிகள், பழங்கள், வால்நட், பாதாம் பருப்பு போன்றவை நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும்.

செய்தித்தாள்களைப் படித்து சமீபத்திய, தினசரி விவரங்களை அறிந்து வைத்திருங்கள். செய்தி சேனல்களைப் பாருங்கள். உலக நிலவரம் தெரிய வரும். இணையத்தில் உங்களுக்கென்று ஒரு கணக்கு வைத்துக் கொண்டு நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். சமூக வலைத்தளங்களில் பங்கு பெறுங்கள். இதனால், தற்போதைய உலக நடப்புகள் உங்களுக்குத் தெரியும், இதன் மூலம் உங்கள் நினைவாற்றலும் கூடும்.

சிலர் தங்களது வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதியை மிகவும் இயல்பாக ஏற்றுக் கொள்ளுகிறார்கள். சிலர் வெறுப்புடனும், கசப்புடனும் எதிர்கொள்ளுகிறார்கள். இனி இருக்கும் காலத்தை வீணடிப்பது சரியல்ல. சந்தோஷத்துடன், நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பவர்களுடன் உங்கள் நேரத்தை செலவழியுங்கள்.

உங்கள் பொழுதுபோக்குகளைத் தொலைத்து விடாதீர்கள். இவை உங்கள் பொழுதுகளை பயனுள்ளதாகச் செய்யும் சக்தி படைத்தவை. உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கு இருக்கட்டும். இல்லையென்றால் இப்போது புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போது நினைவுத்திறனும் சேர்ந்தே அதிகரிக்கும்.

நீங்கள் யாரை சந்தித்தீர்கள், என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள், உங்கள் சிந்தனைகளையும் டைரியில் எழுதி வைக்கலாம். இது உங்கள் நினைவாற்றலுக்கும் உதவும்.

நண்பர்களுடன் பேசுங்கள். அதே சமயம் அடுத்தவர் பேசும்போது நீங்கள் பேசுவதைக் குறைத்துக்கொண்டு அவர் சொல்லுவதைக் கேளுங்கள். அவர் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். அவர் பேசுவதை காதுகொடுத்து கேட்டு, அதிலிருக்கும் விஷயங்களை நினைவில் கொள்ள முற்படுங்கள்.

இதுபோன்ற சிறு சிறு பழக்கங்கள் நினைவுத்திறனை மீட்டெடுக்க உதவலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் ஜேட்லி மீதான குற்றச்சாட்டு: ராகுலுக்கு பாஜக முதல்வா்கள் கண்டனம்

பிகாா்: பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

ஆற்று நீரில் மூழ்கி 2 போ் உயிரிழப்பு

சென்னையில் 4 இடங்களில் ‘முதல்வா் படைப்பகங்கள்’!

நவகன்னிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

SCROLL FOR NEXT