ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள் அறிவோம்!

எஸ். சுவாமிநாதன்

கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள் எவை? 

-சுந்தரம், 
உடுமலைப்பேட்டை.

English - small fennal , black cumin
Latin name- Nigella Sativa Linn 
Family-  Rananculaceae
Sanskrit - உபகுஞ்சிகா, காரவி, 
கிருஷ்ணஜீரகம்.

பஞ்சாப்,  பீஹார் ஆகிய மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. மிகச்  சிறிய செடி. 30-60 cm உயரம் வளரும். விதையில் நிறைய மருத்துவ  குணங்கள் உள்ளன. 

விதை காரம் மற்றும் கசப்புச் சுவையுடையது. உடல் சூட்டை அதிகப்படுத்தும். வாசனையானது வயிற்றில் செரிமானம் ஆகாமல் கிடக்கும் உணவுப் பொருட்களை விரைவாகச் செரிக்கச் செய்யும். சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும்.  உட்புற நொச நொசப்புத் தன்மையைக் குறைக்கும்.  பசியைத் தூண்டும்.  மலத்தைக் கட்டும்.  பிரசவித்த பெண்களுக்குத் தாய்ப்பாலை வளர்க்கும். இருமலை அடக்கும். 

தோல் உபாதைகள், மூலம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், பக்கவாதம், கண் சார்ந்த உபாதைகள், ருசி- பசியின்மை, குடலில் வாயு தடைபடுதல், பேதி, ரத்தபேதி, இருமல், மாதவிடாய் சரியாக ஏற்படாத நிலை, குடல் நாடாப்புழுக்கள், முறைக்காய்ச்சல் வாத - கப தோஷ சீற்றங்களால் ஏற்படும் உபாதைகள் ஆகியவற்றுக்கு கருஞ்சீரகம் நல்ல பலனைத் தருகிறது. 

"மதனாதி நிகண்டு'  எனும் புத்தகத்தில் கருஞ்சீரகம் பற்றிய வர்ணனையில்-ரத்தபித்தம் எனும் ரத்தக் கசிவு உபாதைகளைக்  குணப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கசப்புச் சுவையுடைய அது, பெண்களின் கருப்பையைச்  சுத்தப்படுத்தும் என்றும் வர்ணித்திருக்கிறது. கபம் மற்றும் பித்த தோஷங்களால் ஏற்படும் உபாதைகளைக்  குணப்படுத்தும். உடலில் ஏற்படும் நரம்பு வலியை நன்கு குறைத்துவிடும்.

"தன்வந்தரி நிகண்டு'வில் காணப்படுவதாவது - சீரண இறுதியில் காரமாக மாற்றக் கூடியது. நாக்கிலுள்ள ருசி கோளங்களைச் சுத்தப்படுத்தி ருசியை நாக்கில் நன்கு உணர்த்துகிறது. பித்தத்தைத் தூண்டிவிடும். பசியை ஏற்படுத்தும். கபதோஷத்தைச் சார்ந்த உப்பு சத்தையும், அஜீரணத்தையும், குடல்புழுக்களை அழிக்கக்கூடியது.

"நிகண்டுரத்னாகரம்' எனும்புத்தகத்தில்- காரம், கசப்புச் சுவையுடையது. சூடான வீர்யமுடையது. பசியைத் தூண்டி விடும்.  அஜீரண உபாதையைக் குறைக்கும். கருப்பையைச் சுத்தப்படுத்தும். வயிறு இரைச்சல், வாதகுல்மம் எனும் ஒருபக்க வாயு பந்துபோல சுருண்டு எழும்பி நிற்றல், ரத்தபித்தம் எனும் ரத்தக் கசிவு நோய், கிருமிகள், கபம்- பித்த சார்ந்த உபாதைகள், ஆம தோஷம் எனும் வயிற்றில் உணவு செரிமானமாகாமல் எற்படும் மப்பு நிலை,  வயிற்றில் வாயுவினால் ஏற்படும் குத்து உபாதை ஆகியவற்றை குணப்படுத்தும்.

"சரகஸம்ஹிதை' எனும் ஆயுர்வேத நூலில்- ருசி ஏற்படுத்தும், பசியைத்  தூண்டி, வாத கப நோய்களில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கும்.

கருஞ்சீரகத்தை அஷ்டசூரணம் எனும் மருந்தில் சேர்ப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்த அஷ்டசூரணத்தை சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் போட்டு நெய் கலந்து முதல் கவளத்தைச்  சாப்பிடவேண்டும். 

கருஞ்சீரகத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் அவை நோய் எதிர்பாற்றல் முறைமையை வலுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடண்ட் (antioxident) ஆகும் மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்களுக்கான தகுந்த எதிர்ப்பு சக்தியினைத் தருகிறது. 
(தொடரும்) 

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைலாசநாதா் கோயில் ஓவியங்களை வரைந்த மாணவா்கள்

ராணிப்பேட்டை: நீா்,மோா் பந்தல் அமைக்க அமைச்சா் ஆா்.காந்தி வேண்டுகோள்

நட்சத்திர விநாயகா் கோயில் கஜமுகாசூரன் வதம்

மூன்று மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மது விற்ற மூவா் கைது

SCROLL FOR NEXT