மனநல மருத்துவம்

தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம் இவர்தான்! உடல் சோதனைகளை மனோ பலத்தால் வென்று வரும் பள்ளி ஆசிரியர்!

அவர் பெயர் புஷ்பராஜ். தற்போது 33 வயது. சில வருடங்களுக்கு முன்னால் உளவியல் மருத்துவரின் சிபாரிசால் அடியேன் எழுதியுள்ள ‘தியானம்'

கே.எஸ். இளமதி

அவர் பெயர் புஷ்பராஜ். தற்போது 33 வயது. சில வருடங்களுக்கு முன்னால் உளவியல் மருத்துவரின் சிபாரிசால் அடியேன் எழுதியுள்ள ‘தியானம்' என்ற நூலை (கிழக்குப் பதிப்பகம்) வாசித்து விட்டுத் தொடர்பு கொண்டார். தியானப் பயிற்சிகளால் நற்பலன்களைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

இவருக்குச் சிறுவயது முதலே கொடிய எலும்புத் துளை நோய் ஏற்பட்டு பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாகியிருக்கிறார். இவருக்கு ஏற்பட்டுள்ள நோயின் பெயர் POLYOSTOTIC FIBROUS DYSPLASIA. இந்நோய் எலும்புகளை எல்லாம் துளையிட்டுக்கொண்டே போகும்! அதனால் எலும்புகள் வலுவிழந்து போய் நைந்துவிடும். சாக்பீஸ் போலத்தான் இவரது எலும்புகள் இருக்குமாம்! இதுவரை 38 எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன! அத்தனை வலிகளையும் சகித்துக் கொண்டு போராடி வந்திருக்கிறார் புஷ்பராஜ். இவரால் நிற்கவோ நடக்கவோ இயலாது. அதுமட்டுமல்லாது, தைராய்டு மற்றும் சர்க்கரை வியாதியோடும் அன்றாடம் போராடி வருகிறார்!

இந்த நோய்க்கு மருந்து இல்லை என்பதுதான் வேதனையளிக்கும் செய்தி!

இவர் தனது தாயாருடன் விழுப்புரம், காணை, காங்கேயநல்லூர் என்ற சின்னஞ்சிறுக் கிராமத்தில் சின்னஞ்சிறு வாடகை வீட்டில் வசித்து வருகிறார், இவரது தகப்பனார் காலமாகிவிட்டார். ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு. அவர்கள் மணமாகித் தனித்தனியே இருக்கிறார்கள்.

இவரை இன்னும் ஒரு குழந்தையாகவேப் பாவித்து, இவரது தாயார்தான் காலைக் கடன்களுக்கு ஒத்தாசை புரிந்து வருகிறார்.

அந்த நிலையிலும் மனம் தளர்ந்துவிடாமல் படித்து பள்ளி இறுதி வகுப்பில் முதல் மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவர். தொடர்ந்து பள்ளி ஆசிரியப் பயிற்சிகளைப் முடித்துவிட்டு, தான் படித்த காங்கேயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலேயே ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகச் சேர்ந்துவிட்டார் புஷ்பராஜ்! சேரும்போது இவருக்கு வயது இருபது!

சக்கர நாற்காலியோடு பள்ளிக்குச் சென்று, பதின்மூன்று ஆண்டுகளாகச் சலியாத மனத்தோடு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் இவர்!

காலையில் பள்ளி மாணவர்களே வந்து இவரைச் சக்கர நாற்காலியில் வைத்து அன்புடன், பள்ளிக்கு அழைத்துச் சென்று மாலையில் வீடு வந்து மரியாதையோடு விட்டுச் செல்கிறார்கள். இவருக்குப் பள்ளி மாணவர்கள் அனைவருமே ஆர்வத்தோடு முன் வந்து பணிவிடைகளைச் செய்து வருகிறார்கள். மாணவச் செல்வங்களின் மட்டற்ற அன்பில் நெக்குருகிப் போயிருப்பதாகச் சொல்லிக் கண் கலங்குகிறார் புஷ்பராஜ்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை வாடகைக் கார் அமர்த்திக் கொண்டு ஒத்துழைப்பு நபர்களுடன் சென்னைக்கு வந்து சிகிச்சை எடுத்துச் செல்வது வழக்கம்.

தான் வாங்கும் சம்பளப் பணம் கார் வாடகை, விடுதி வாடகை, உணவுச் செலவு என்று அதற்கே சரியாகி விடுகிறது என்கிறார்.

ஆனாலும் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ முனைகிறார் புஷ்பராஜ். எவரையும் எதற்கும் இவர் எதிர்பார்ப்பதில்லை!. இறைவனே கதி என்று சரணாகதித் தத்துவத்தில் இருக்கும் புஷ்பராஜ் எப்போதும் தன் கையில் இறை நூல்களை வைத்து வாசித்துக் கொண்டே இருக்கிறார்!

அடியேன் சொல்லித் தந்த சில ஆசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், தியானத்தை இடைவிடாது மேற்கொண்டு தனக்குள்ளே வல்லமைகளை வளர்த்துக் கொண்டு வருகிறார்!

தனக்குப் பிறகு, தன் மகனை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கவலையால் தினந்தோறும் கண்ணீர் வடிக்கிறார் இவரது தாயார்!

‘இறைவன் இருக்கும் போது என்ன கவலை அம்மா‘ என்று அன்னைக்கு ஆறுதல் சொல்லி வருகிறார் பிள்ளை. சோதனைகளைச் சாதனையாக்கிக் கொண்டு ஒரு சித்தருக்கு உரிய மன நிலையில் சத்தமின்றி வசித்து வருகிறார் இந்த நல்லாசிரியர்.

மாணவச் செல்வங்களுக்கு வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் தத்துவங்களையும், உபதேசங்களையும் வகுப்பு நேரங்களில் சொல்லுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார் இவர்.

அண்மையில் திருவண்ணாமலை சென்றுவிட்டு இவர் ஆசிரியராக வேலை பார்க்கும் விழுப்புரம் மாவட்டம், காணை, காங்கேயநல்லூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று வந்தேன்.

‘அன்பே சிவம்‘ என்பதற்கு அடையாளமாகத் திகழும் புஷ்பராஜ் அடியேனைக் கண்டதுமே ஆர்வத்துடன் ஊர்ந்து வந்து வாரியணைத்துக்கொண்டார்!

தன் குறைபாடுகளை மறந்து எப்போதும் எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் பழகும் இயல்புடையவர் புஷ்பராஜ். பெயர் மட்டுமல்ல, இவரது வார்த்தைகளில் ‘பேரன்பூ‘ மணக்கிறது! நோயோடு புண்பட்டாலும் பண்பட்ட மனதோடு புன்னகை மாறாத உதடுகளுக்குச் சொந்தக்காரர்!

சின்னத் தலைவலி வந்தாலே சுக்கு நூறாகிப் போய் சிறப்பு மருத்துவர்கள் காலடியில் போய் மண்டியிடும் கோழைகள் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்!

வாடாத பாரிஜாதப் பூவாகத் திகழ்கிறார். எதற்குமே கலங்காத மதி நுட்பமே இவருக்கு உள்ள ஒரே அடையாளம்!  எதையும் தாங்கும் இதயம் இருந்தாலும், எவருக்குமே இவரைக் கண்டால் மனம் இரங்கும்!

ஆசிரியர்கள், மாணவர்கள், அண்டை அயலார்  என்று அனைவர் மனதிலும்  இடம் பிடித்து மணம் பரப்பும் மனோரஞ்சிதப்பூ இவர்! இந்தப் பூ வாடிவிடாமல் இருக்க, இறைவன் தான் காத்தருள வேண்டும்.

- கே.எஸ்.இளம்மதி, யோகாசிரியர், ‘பிராணாயாமம்‘ இதழ் ஆசிரியர், சென்னை. மின்னஞ்சல்: ksilamathy@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

SCROLL FOR NEXT