மகளிர் நலம்

கோடையில் பெண்களின் உடல்நல பராமரிப்பிற்கான சில ஆலோசனைகள்

தினமணி

ஒரு பெண்ணாக இருப்பது எளிதானதல்ல. எந்தவொரு குடும்பத்திலும் குழந்தைகளை வளர்த்தெடுப்பவர்களாகவும் மற்றும் முதன்மையான, பிரதான பணிகளை ஆற்றி சேவை வழங்குபவர்களாகவுமே பெண்கள் இன்னும் இருக்கின்றனர். வீடுகளுக்கு வெளியே சென்று பணியாற்றும் பெண்கள் தங்களது தொழில்ரீதியான வீட்டுப்பொறுப்புகளையும் மாறிமாறி எதிர்கொள்ளவேண்டிய கூடுதல் சவாலையும் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், தங்களது மாறுபட்ட பணிகளையும், பொறுப்புகளையும் சிரமமின்றி பெண்கள் மேற்கொள்கின்றனர் என்ற போதிலும் பெரும்பாலானோர் அவர்களது சொந்த உடல்நலத்தை முறையாக கவனிக்காமல் உதாசீனம் செய்துவிடுகின்றனர். அதுவும் கோடை காலங்களில் அதிக அக்கறை தேவைப்படும் சமயங்களிலும் கூட அவர்கள் தங்களைப் பாதுகாக்கத் தவறி விடுகின்றனர். பெண்கள் நிச்சயம் கவனம் கொள்ள வேண்டிய விஷயங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

உடை

உடலை இறுக்கி பிடிக்கிற ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். ஏனெனில், காற்றோட்டத்தை அவை தடைசெய்கின்றன. 
கோடையில் பெண்கள் அணிய சிறந்த துணி வகையாக காதி விளங்குகிறது. சூழலின் தட்ப வெப்பநிலைக்கு ஏற்றபடி சற்று லூசான ஆடைகளையே அணிய வேண்டும். உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளான லெக்கின்ஸ், ஜெக்கின்ஸ் மற்றும் ஜீன்ஸ் போன்ற ஆடைகளைத் தற்காலிகமாகத் தவிர்க்கலாம். 

பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை லூசான சல்வார் கமீஸ். இது கோடைக்காலத்திற்கு சிறந்த உடை. சேலை விரும்பிகளுக்கு காட்டன் சேலை அணியலாம். டீன் ஏஜ் பெண்கள் நீளமான பருத்திப் பாவாடைகள் அணியலாம், அது கால் பகுதிகளை மறைத்து அதே சமயம் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும்.  

பெண்கள் இந்த கடும் கோடையில் பருத்தியிலான உள்ளாடைகளை அணிவது நலம். பருத்தி ஆடையே மிக மென்மையானது மற்றும் தோலுக்கு எரிச்சலூட்டாத, அணிவதற்கு ஏற்ற ஆடையாகும். இது காற்றோட்டத்தை அனுமதிக்கிறது மற்றும் ஈரப்பதத்தை விரைவாக உறிஞ்சிக்கொள்கிறது. சில்க் மற்றும் சாட்டின் துணிகளிலான உள்ளாடைகளை ஏதாவது சிறப்பு நிகழ்ச்சிகளின்போது, அணிந்துகொள்ளலாம். தினசரி அடிப்படையில் பருத்தியிலான உள்ளாடைகளை அணிவதே நல்லது.


பழச்சாறுகள்

கோடையில் உடலின் நீர்ச் சத்து அதிகம் இழக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், உடல்வெப்பநிலையை சமமாக வைத்துக்கொள்வதில் கவனம் வேண்டும். தவிர வெயில் காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும். அதிகமான நீர்போக்கினால் உடல் சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், அஜீரணம், மற்றும் சரும பிரச்சனைகள் வரக்கூடும். இதைத் தடுக்க நீர் மற்றும் சரியான உணவுகள் அருந்துவது அவசியம். டீ, காபி, மது ஆகியவற்றை தவிர்த்து விட வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

எங்கு சென்றாலும் கையில் தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ளவும். இளநீர், மோர் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை, சாத்துக்குடி, லஸ்சி, மாதுளை, தர்ப்பூசணி, ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் சாப்பிடலாம். காரணம் இந்த பானங்களில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் பாதை நோய் (Urinary tract infection) ஏற்படாமல் தடுக்கும்.  இயற்கையாக தயாரிக்கப்பட்ட  பழச்சாறுகளை மட்டுமே அருந்த வேண்டும். குளிர்பானங்கள் வாங்கிக் குடிப்பது உடல்நலத்திற்கு கெடுதல் விளைவிக்கும்.  


உடல் ஆரோக்கியத்தை பல விதங்களில் மேம்படுத்துவதில் தேனுக்கு முக்கிய பங்கு உண்டு. மூளையில் ஏற்படும் அழற்சியை குறைக்கவும் உதவுகிறது. அதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதை தடுத்து மூளையையும், மனநலனையும் ஆரோக்கியமாக வைத்திருக்க துணைபுரியும். எனவே கோடையில் தேனை மறக்காமல் உட்கொள்ள வேண்டும்.

உணவு 

சுட்டெரிக்கும் வெயிலில் உடலைச் சீராக வைத்துக்கொள்ள, பெண்கள் அதற்குத் தகுந்த உணவுமுறையில் கட்டுப்பாட்டை கொண்டு வருவது அவசியம். எளிதில் செரிக்கும்படியான உணவுப் பழக்கத்தை இக்கோடை காலத்தில் கடைபிடிப்பது நல்லது. சத்தான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உண்பதில் கவனம் செலுத்துங்கள். அரிசி, சப்பாத்தி போன்றவற்றை எப்போதும் போல் சாப்பிடலாம். சற்று அதிகமாக உணவில் மோர் அல்லது தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது. நீர் மோராக சாப்பிடுவது மிகவும் நல்லது. நார்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.  கேழ்வரகு உடல் வெப்பத்தை அதிகரிப்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது. மேலும் கோழி இறைச்சி, முழு பருப்பு வகைகள் மற்றும் எண்ணைப் பலகாரங்களையும் கோடையில் தவிர்ப்பது நலம்.

பயணம்

தினமும் அலுவலம் போக வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள் அதிகப்படியான வெயிலுக்கு முன்னால் ஆபிஸ் போய்விடுவது நல்லது. தவிர்க்க முடியாமல் வெயிலில் வெளியே செல்லும்போது கண்ணாடி அணியவும். குடை அல்லது கேப் உபயோகிக்கவும். சரும பாதுகாப்புக்கு நல்ல தரமான சன் ஸ்க்ரீன் க்ரீம்களை பயன்படுத்தி சூரிய கதிர் பாதிப்புக்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ரயில் அல்லது பேருந்தில் நீண்ட தூரம் பயணம் செய்ய நேரிடும் போது, எப்போதும் தண்ணீர் பாட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளரி, உலர் திராட்சை போன்றவற்றையும் வைத்திருப்பது நல்லது. இவை சோர்வாக இருக்கும் போது உடனடி புத்துணர்ச்சியை தரும்.

தினமும் இரண்டு தடவையாவது குளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT