பெண்களுக்கு வேலைகளுக்கு குறைவா என்ன? எவ்வளவு நேரம் உள்ளதோ அதற்கு மேலாக வேலைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். வீட்டு வேலை, அலுவலக வேலை, குடும்ப நிர்வாகம், வெளி வேலைகள், குழந்தைகள் படிப்பு என நேரம் றெக்கை கட்டிக் கொண்டு தான் பெண்களுக்கு பறக்கிறது. ஆனால் இப்படி ஓய்வு ஒழிச்சலின்றி மணிக்கணக்காக வேலை செய்யும் பெண்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படலாம். தீராத வேலைகளைச் செய்து முடிக்க பெண்கள் பல சமயங்களில் தசாவதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது.
அதிலும் குறிப்பாக வாரத்தில் 45 மணி நேரத்துக்கும் மேலாக வேலை செய்யும் பெண்களுக்கு சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் 70 சதவிகிதம் உள்ளது என்கிறது ஒரு புதிய ஆய்வு. இதே கால அளவில் வேலை செய்யும் ஆண்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் கூறுகிறது இதே ஆய்வு. போலவே, பெண்கள் 30 அல்லது 40 மணி நேரம் வேலை செய்தாலும் இந்தப் பிரச்னை இல்லையாம்.
பெண்கள் நீண்ட நேரம் வேலை செய்யும் போது ஏற்படும் கடுமையான மன அழுத்தம் அவர்களுடைய உடலையும் சேர்த்து பாதிக்கிறது. இதனால் ஹார்மோன்களின் சமன் நிலை பாதிப்படைந்து இன்சுலின் சுரப்பு குறைந்து சர்க்கரை வியாதிக்கு வித்திடுகிறது.
மேற்சொன்ன ஆய்வறிக்கை BMJ Open Diabetes Research and Care என்ற பத்திரிகையில் அண்மையில் வெளியானது. ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொள்ள 35 லிருந்து 74 வயதுள்ள 7065 பணியாளர்களை தேர்ந்தெடுத்து 12 வருட காலம் ஆய்வுக்கு உட்படுத்தினர். இவர்களை நான்கு பிரிவினுள் அடக்கினார்கள். அதில் 15-34 மணி நேரம் வேலை செய்தவர்கள், 35-40 மணி நேரம் வேலை செய்தவர்கள்; 41-44 மணி நேரம் பணி புரிந்தவர்கள் மற்றும் 45 மணி நேரம் வேலை செய்தவர்கள் எனப் பகுத்தனர்.
ஆய்வின் முடிவில் அதிக நேரம் செய்த பெண்களில் 63 சதவிகிதத்தினருக்கு சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகமிருப்பதாக கண்டறியப்பட்டது. இது ஆண்களில் வயதானோருக்கும், உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கும் தான் ஏற்படுமாம். மேலும் 2030-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 439 மில்லியன் நபர்களுக்கு சர்க்கை வியாதி வரும் என கணிக்கப்பட்டுள்ளது இந்த எண்ணிக்கை 2010-ம் ஆண்டில் இந்நோய் வந்தவர்களை விட 50 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டு சர்வதேச அளவில் சர்க்கரை வியாதிக்கென செலவிடப்பட்ட பணம் 1.31 ட்ரில்லியன் டாலர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.