சேலம், ஏப். 17: உலகப் புகழ் பெற்ற சேலம் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் மாம்பழப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முக்கனிகளில் முதல் கனியான மாம்பழ ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டுக்கு சுமார் 1.10 கோடி டன்கள் மாம்பழம் இந்தியாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம்தான் அதிகளவில் மாங்கனிகளை உற்பத்தி செய்கிறது என்றாலும் தென்னிந்திய அளவில் ருசியும், வாசனையும் மிகுந்த மாம்பழங்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து மட்டுமே உற்பத்தியாகின்றன.
மாவில் 60-க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தபோதிலும் அதிகளவில் விளையும் தோத்தாபுரி எனப்படும் பெங்களூரா (கிளி மூக்கு) மாங்காய்களே அதிகமானவர்களால் அறியப்பட்டுள்ளது. இந்த வகை பழங்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகளவில் விளைகின்றன.
ஆனால் சேலம், சுற்றுப் பகுதிகளான கருமந்துறை, தும்பல், பேளூர், வாழப்பாடி, சன்னியாசிகுண்டு, மல்லூர், பனைமரத்துப்பட்டி, சங்ககிரி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், மேட்டூர், ஓமலூர், ஏற்காடு அடிவாரம், ஆடையூர் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் சேலம் பெங்களூரா, குண்டு (எ) அல்போன்ஸா, மல்கோவா, இமாம்பசந்த், நடுசாளை, செந்தூரா, குதாதத், மல்லிகா ஆகிய வகைப் பழங்கள் மட்டுமே பொதுமக்கள், குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுபவைகளாக உள்ளன.
எந்த பகுதி மாங்கனிக்கும் இல்லாத சிறப்பாக சுவையுடன் கூடிய மணமும் கொண்டிருப்பவை சேலம் மாங்கனிகள் ஆகும். வீட்டுக்குள் மாம்பழம் வைத்திருந்தால் அதன் வாசனை வீதி வரை நுழைந்துவிடும் என்று கூறப்படுவது வழக்கம். சேலத்தில் நிலவும் தட்பவெப்பநிலையும், மண் வளமுமே இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது. இந்த வகை மாம்பழங்கள் சேலத்தில் ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் டன்கள் விளைகின்றன.
ஜூலைக்கு பிறகும் வரத்து இருக்கலாம்... வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு ஒரு மாதம் தாமதமாக சேலத்தில் ஏப்ரல் மாதம் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. இருப்பினும் ருசி மிகுந்த மாம்பழங்கள் சேலம் கடை வீதியில் உள்ள மொத்த விற்பனை நிலையங்கள், மண்டிகளுக்கு வரத் தொடங்கியுள்ளது. அதே சமயம் தருமபுரி, கிருஷ்ணகிரி, வெளி மாநில பழங்களும் வரத் தொடங்கியுள்ளது மாம்பழப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதே நேரம் விலையிலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை என்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. ஒரு மாதம் தாமதமாக சீசன் தொடங்கியுள்ளதால் ஜூலை மாதத்துக்கு பிறகும் மாம்பழ வரத்து இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சேலம் மாம்பழ மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சேலம் மாங்காய், பழ வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.ஜெயபால் கூறியது:
இங்கிலாந்து சென்ற சேலத்து மாம்பழம்: வழக்கமாக மார்ச் மாதத்தில் மாம்பழ சீசன் தொடங்கும். இந்த ஆண்டு தாமதாகத் தொடங்கினாலும் மே மாதத்தில் வரத்து மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் இதனால் விலையிலும் மேலும் சரிவு ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது.
சேலம் அருகேயுள்ள வரகம்பாடியில் விளையும் ருசி மிகுந்த மாம்பழங்கள் பிரிட்டிஷ் காலத்தில் இங்கிலாந்து அரண்மனைக்கு அனுப்பப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. மேலும் மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் விளையும் மாம்பழம் குண்டு (எ) அல்போன்ஸா மாம்பழம்தான். ரத்தினகிரிக்கே மாங்கன்றுகள் சேலத்தில் இருந்துதான் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுச் செல்லப்பட்டன.
பல்வேறு பெருமைகள் கொண்ட சேலம் மாம்பழங்களின் விளைச்சல் கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மாம்பழப் பிரியர்களுக்கு கொண்டாட்டமான ஆண்டாகவே இருக்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.