புது தில்லி, ஜூன் 4: பணம் சம்பாதிப்பதே நோக்கமாக இருப்பதால், இன்றைக்கு கேடு மலிந்துவிட்டது. திசை மாறிவிட்டது. இதை மாற்றவேண்டும். இந்த சூழலில் ஊடகங்களின் போக்கு மாற்றப்படவேண்டும் என்று பேராசிரியர் சாலமன் பாப்பையா வலியுறுத்தினார்.
தினமணியின் தில்லி பதிப்பு தொடக்கவிழாவை ஒட்டி இன்றைய ஊடகங்களின் போக்கு போற்றத்தக்கதா, மாற்றத்தக்கதா என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதற்கு நடுவராக இருந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா அளித்த தீர்ப்பு விவரம்:
ஊடகங்கள் அரசு செய்திகளை அதிகாரபூர்வ செய்திகளை அளிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் அச்செய்திகள் முறையான அனுமதி பெற்று மக்களுக்குப் போய்ச்சேர வேண்டும் என்றால் சிறிது காலம் ஆகும். ஆனால், செய்திகளை உடனே கொடு என்று மக்கள் கோரினால், போட்டிதான் ஏற்படும். இப்போது எல்லா துறைகளிலும் போட்டி வந்துவிட்டது. ஒரு பத்திரிகையில் வெளியாகும் செய்தியை விட ஏதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கும் முறை வந்துவிட்டது.
மக்கள் பரபரப்பை விரும்புகிறார்கள். வெளிநாட்டு ஊடகங்களும் இன்று அதிகரித்துவிட்டன. உள்ளூர் ஊடகங்கள் அவற்றுக்குப் போட்டியாகச் செயல்படுகின்றன. இது வியாபாரம் ஆகிவிட்டது. ஊடகங்களில் பணியாற்றுவோருக்கு சம்பளம் தர வேண்டுமே.
அரசு ஊடகங்களில் கூட பட்டிமன்றம் நடத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன. பாரதியார் பாடலில் கூட சிலவற்றை முழுமையாகச் சொல்லக்கூடாது என்ற நிலை உள்ளது. சில ஜாதிகளைப் பற்றிய பாடலுக்காக தடை உத்தரவு பெற்றுள்ளனர். ஆனால், இத்தகைய கட்டுப்பாடுகள் தனியாருக்கு இல்லை. தனியார் ஊடகங்கள் தங்களுக்குள் போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவதால் பரபரப்பான செய்திகளையே வெளியிடுகின்றன.
ஒரு காலத்தில் ஏ.வி.எம். திரைப்பட நிறுவனத்தின் படத்தில் நடிக்க வந்த ஒரு நடிகை அணிந்திருந்த ஆடையைப் பார்த்த பின் இதை மக்கள் விரும்பமாட்டார்கள் என்று கூறி அந்த நடிகையை நடிக்க அனுமதி மறுத்தனர். ஆனால் இன்றைய நிலை தலைகீழாக மாறிவிட்டது. காரணம் மக்கள் மனம் மாறிவிட்டது. நோய்வாய்ப்பட்டு விட்டது. மக்களை ஏதோ சில சக்திகள் ஆட்டிப் படைக்கின்றன.
மக்கள் மனத்தை ஊடகங்கள்தான் மாற்ற வேண்டும். எதை கொடுத்தால் நாடு தழைக்குமோ அதை கொடுக்க வேண்டும். இன்றைய ஊடகங்களில் நல்லது 25 சதவீதமும் தீயது 75 சதவீதமும் என்று ஆகிவிட்டது. அதற்காக நல்ல பத்திரிகைகள் இல்லை என்று சொல்லவில்லை.
சில பத்திரிகைகளை நல்ல கதைகளுக்காக தேடித் பிடித்துப் படித்தோம், ஆனால் இன்று அவற்றில் சதைக் காட்சிகளே மலிந்துவிட்டன. அவை இந்த நாட்டுப் பிள்ளைகளைக் கெட்டுப் போகச் செய்கின்றன. இப்படிச் செய்து பிழைப்பு நடத்துவது விபசாரம் போல்தான். திரைப்படத்திலும் சில காட்சிகள் இப்படி ஆகிவிட்டன.
ஒட்டகத்துக்கு ஒரு பக்கம் கோணல் என்றால், சமுதாயத்தின் எல்லாப் பக்கங்களும் கோணல் ஆக உள்ளது. பல முனைகளில் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம். சில ஊடகங்கள் மக்களை கூறுபோட்டுக் கொண்டிருக்கின்றன.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளும் கூட மோசமான நிலைக்கு ஆளாகிவிட்டன. கேடு மலிந்துவிட்டது. இன்றைய நிலையில் மாற்றம் தேவைப்படுகிறது.
தினமணிக்குப் பாராட்டு: தினமணி தில்லி பதிப்பு இதழின் ஆண்டுச் சந்தா ரூ. 400 என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் எல்லா திசைகளில் இருந்தும் வரும் செய்திகளை தினமணி சுமார் ஒரு ரூபாய்க்கு தினமும் வழங்குகிறது. இது தமிழுக்கான தர்மம் என்று சாலமன் பாப்பையா கூறினார்.
"போற்றத்தக்கதே'
பேராசிரியர் டி.ராஜாராம்: மின்னணு ஊடகங்களில் தேவையில்லாத நிகழ்ச்சிகள் அதிக நேரம் காட்டப்படுவதாக கூறப்படுவது தவறு. குறைந்தநேரம் காட்டக்கூடிய நல்ல பல விஷயங்கள் இருந்தும் அதைப் பார்ப்பதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஊடகங்களில் ஒருவகை ஊடகம் அறிவு ஊடகமாகவும், மற்றொன்று பொழுதுபோக்கு ஊடகமாகவும் உள்ளது. நல்லவற்றை நாம்தான் தேடிச் செல்ல வேண்டும்.
தினமணியில் எழுதப்படும் தலையங்கம் சமூகக் கண்ணோட்டத்துடன் அதை எழுதும் ஆசிரியர் வைத்தியநாதனின் துணிச்சலை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதேபோன்று தினமணியில் வெளிவரும் மதி கார்ட்டூன் சமுதாய அவலங்களை எடுத்துக்காட்டும் கண்ணாடியாகவும் திகழ்கிறது.
ஊடகங்கள்தான் நல்ல பல கவிதைகளையும், கட்டுரையையும் வெளியிட்டு எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் வெளி உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்தியாவின் கடைக்கோடி மனிதனையும் சென்றடைந்ததற்கு ஊடகம்தான் காரணம்.
ஆகவே, பத்திரிகைகளின் பணியை எளிதாக எடைபோட்டு விடக்கூடாது. எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறுவது போல் "இந்திய அரசியல் உலகம் நாறிப்போய்க் கிடக்கிறது. அதை மாற்றும் கடமை படைப்பாளிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் உள்ளது' என்பது உண்மைதான். அந்த விஷயங்களையும் பத்திரிகைகள்தான் முன்னுரிமை கொடுத்து பிரசுரிக்கின்றன. ஆகவே, ஊடகங்களின் போக்கு பாராட்டுக்குரியதே என்றார்.
முனைவர் உமா தேவி: செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் பார்க்கும் விஷயத்தில் எந்த ஊடகத்தைப் பார்க்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒட்டுமொத்தமாக ஊடகங்களைக் குறை கூறுவது தவறு. நல்ல விஷயங்கள் இருக்கும்போது ஏன் தீயவற்றைப் பார்க்க வேண்டும்.
வீட்டில் உள்ள பெண்களுக்கு அழகுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் ஆகியவற்றை ஊடகங்கள் தருகின்றன. குழந்தைகளுக்கான கார்ட்டூன் நிகழ்ச்சிகளும் காட்டப்படுகின்றன. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களிடம் உள்ள அறியாமையை அகற்றுகின்றன.
மெகா ஊழல் பற்றிய விஷயமெல்லாம் இளைஞர்கள் பலரும் பரிமாறிக் கொள்வதற்கு இணையம் எனும் ஊடகம் மிகவும் பங்களிப்புச் செய்தது.
மண்ணின் பெருமை, பண்பாடு, கலாசாரம் ஆகியவை தொடர்பான பல விஷயங்களை ஊடகங்கள்தான் மக்களுக்குத் தெரியப்படுத்தி வருகின்றன. ஆகவே, சமுதாயத்தில் ஊடகங்களின் போக்கு போற்றத்தக்கவையாகும் என்றார் அவர்.
எஸ்.ராஜா: தேர்தலின்போது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது ஊடகங்கள்தான். பேச்சாளர்களை எழுத்தாளனாக மாற்றிடச் செய்ததும் பத்திரிகைகள்தான். பத்திரிகைகள் வணிக ரீதியாக நடத்தப்படுவதாக கூறப்படுவது சரியல்ல. பத்திரிகை நடத்துவதற்கு விளம்பரமும் அவசியமாகிறது.
சமூக அவலங்களையும், பிரச்னைகளையும் எடுத்துரைக்கும் கண்ணாடியாக பத்திரிகைகள் விளங்குகின்றன. சமுதாயத்தைப் பற்றியும், அடுத்த தலைமுறை பற்றியும் சிந்திப்பது ஊடகங்கள்தான். ஊடகங்களால் எதையும் மாற்ற முடியும். மோசமானவர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுவார்கள். வாய்ப்பு வரும்போது மாற்றுவதற்கான அடிப்படை வேலைகளைச் செய்வார்கள். ஊடகங்களில் 75 சதவீதம் நல்ல விஷயங்களும், 25 சதவீதம் மோசமான செய்திகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் எதை எடுத்துக் கொள்வது என்பது மக்களின் மனநிலையைப் பொருத்தது என்றார் அவர்.
"மாற்றத்தக்கதே'
பேராசிரியர் ராமச்சந்திரன்: இன்று ஊடகங்களில் குப்பைகள் மலிந்துவிட்டன. தொலைக்காட்சிகளில் பெரும்பாலும் குடும்பத்துடன் பார்க்கக் கூடாதவையே காட்டப்படுகின்றன. காந்தி ஜெயந்தி நாளில் திரைப்பட நடிகையின் பேட்டியை எதற்கு ஒளிபரப்புகிறார்கள் சில நாள்களில் காலையில் நல்ல நாகஸ்வர இசை சிறிது நேரம், பின்னர் பேராசிரியர் போன்ற அறிஞர்களின் நல்ல பேச்சு, பின்னர் ஆன்மிகம் என இரண்டரை மணி நேரம் மட்டும் நல்ல நிகழ்ச்சி காட்டுகிறார்கள். மீதி பதினைந்து மணி நேரமும் சினிமா தான். ஓர் திரைப்படத்துக்கு நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரம் எதற்காக காட்டுகிறார்கள். அதில் வரும் வசனங்கள் விபரீத எண்ணத்தை இளைய சமுதாயத்தின் மனதில் ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
நல்ல சிந்தனையாளர்களின் நிகழ்ச்சிகள் ஏன் அதிகம் ஒளிபரப்பப்படுவதில்லை சிந்தனையாளர்கள் இல்லையா சில நிகழ்சிகள் மக்களின் மனத்தில் தோல்வி மனப்பான்மையை தூண்டுகின்றன. இரவு நேரத்திலும் பயங்கர நிகழ்வுகளைக் காட்டுகிறார்கள். பத்திரிகைகளிலோ எல்லா பக்கங்களும் சினிமா செய்திகளே நிரம்பியுள்ளன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
கே.வி.கே. பெருமாள்: சமூக நலத்துக்கு எதிராக செயல்படும் ஊடகங்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடரவேண்டும். அது போன்ற ஊடகங்களுக்கு ஆதரவாக இருப்போர் மீதும் வழக்கு போட வேண்டும்.
இன்றைய ஊடகங்களின் அடிப்படை நோக்கமே வணிகமாக உள்ளது. சில ஊடகங்கள் சமூகப் பொறுப்பு இல்லாமல் பரபரப்பை மட்டுமே அலைவரிசையில் காட்டுகின்றன. கிழக்கு தில்லியில் நடந்த ஒரு தீ விபத்துக்கு தீயணைப்புப் படையினர் செல்வதற்கு முன் தொலைக்காட்சி காமிராக்கள் சென்று, தீப்பிடித்த பகுதிகளை படம் பிடித்தன. தீயணைப்புப் படை தன் பணியைக்கூட செய்ய முடியாமல் போகிறது.
ஒரு துறவியின் தனிப்பட்ட வாழ்க்கையை பூந்தொட்டியில் காமிராவை மறைத்து பதிவு செய்ததை தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். திரும்பத் திரும்பக் காட்டும் இந்நிகழ்ச்சியை சிறுவர்கள் காண்கிறார்கள்.
இன்று எந்த அலைவரிசை பெண்ணைப் பெருமைப்படுத்துகிறது? தீயவற்றைத்தான் காட்டுகிறது. இந்த போக்கு மாறவேண்டும்.
பாரதி பாஸ்கர்: கத்தியால் ஆப்பிளையும் நறுக்கலாம், ஆளையும் வெட்டலாம். ஆனால் இன்று கத்தியை ஆளை வெட்டவே பயன்படுத்துகிறார்கள். அதாவது ஊடகங்கள் தவறான விஷயங்களுக்கே பயன்படுத்துகின்றன.
நல்ல விஷயம் என்பது இன்றைய ஊடகங்களில் அரிதாக உள்ளது. கள்ளிக் காட்டில் ஒற்றை மல்லிகையை போல் உள்ளது. கள்ளிச்செடி அதிகம் ஆகிவிட்டதே என்ற ஆதங்கம் தான் எங்களுக்கு உள்ளது.
மும்பை பயங்கரவாத சம்பவம் நடந்தபோது தொலைக்காட்சி அலைவரிசைகள் நடந்து கொண்ட விதம் விமர்சனத்துக்கு ஆளானது. உலக வர்த்தக கட்டடம் தகர்க்கப்பட்டபோது ஒரு சொட்டு ரத்தம் கூட காட்டப்படவில்லை. ஆனால் இங்குள்ள அலைவரிசைகள் கோரமான காட்சியைக் காட்டுகின்றன.
தில்லியில் ஒரு ஆசிரியை மீது மானக் குறைவான புகார் எழுந்ததும், வெட்கத்துடன் முகத்தை மூடிய அவரை படம் எடுத்தன அலைவரிசைகள். அதனால் அவரது மானம் பாதிக்கப்பட்டது. அதே நபர் மீதான புகார் பொய் என்று நிரூபிக்கப்பட்ட பின் அந்தப் பழியைத் துடைத்தனவா. பெண்ணைப் பற்றி காட்டும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து இடம்பெறும் விளம்பரத்தில் பெண் தரக்குறைவாகக் காட்டப்படுகிறாள். இது எவ்வளவு மோசமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.