காவிரி: கர்நாடகத்துக்கு சாதகமாக செயல்படுகிறது மத்திய அரசு
""மூன்று பேர் அடங்கிய காவிரி நடுவர் மன்றம் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள அளவை விட கர்நாடகம் அதிகமான நீரை பயன்படுத்தியுள்ளது. அதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது'' என்று தமிழகம் குற்றம்சாட்டியுள்ளது.
""மூன்று பேர் அடங்கிய காவிரி நடுவர் மன்றம் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள அளவை விட கர்நாடகம் அதிகமான நீரை பயன்படுத்தியுள்ளது. அதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது'' என்று தமிழகம் குற்றம்சாட்டியுள்ளது.
""அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் முப்போகம் பயிரிட்டு கூடுதல் நீரை பயன்படுத்திய பிறகு தமிழகத்துக்குத் தண்ணீர் இல்லை என்று கர்நாடகம் கூறுவது சட்டவிரோதமானது;
சம்பா பாசனத்தின் இடர்பாடு காலத்தில் தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் நாட்டின் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்'' என்று காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கில் கர்நாடகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அனில் திவான் ""காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட 4 மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன. அந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளபோது தண்ணீர் கோரி தமிழகம் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிப்பது சட்டப்படி உகந்தது அல்ல'' என்று வாதிட்டார்.
செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு தொடங்கிய விசாரணை 4 மணி ஆகியும் எந்த ஒரு முடிவும் எட்டப்படாத காரணத்தால், வழக்கு விசாரணையை புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தமிழகத்துக்கு தண்ணீர் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் டி.கே. ஜெயின், மதன் பி. லோகுர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தபோது தமிழகம் சார்பில் சி.எஸ். வைத்தியநாதன் முன்வைத்த வாதம்:
தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்க வேண்டிய நான்கு நீர்த் தேக்கங்களில் இருந்து கோடை கால பயிர்களுக்கான நீரை கர்நாடகம் முழுவதுமாக பயன்படுத்தியது. பின்னர் அடுத்த சாகுபடிக்குப் போதிய தண்ணீர் இல்லை என்று அந்த மாநில அரசு கூறி வருகிறது.
மேட்டூர் அணைக்கு வந்து சேர வேண்டிய நீரின் அளவுப்படி, தமிழகத்துக்கு 53 டிஎம்சி நீர் வர வேண்டும். ஆனால், பில்லிகுண்டுலுவை கணக்கிட்டு நிலுவையில் உள்ள 37 டிஎம்சியில் குறைந்தபட்சம் 30 டிஎம்சி நீர் வேண்டும் என்று தமிழகம் கேட்கிறது.
அதிக ஏக்கரில் சாகுபடி : கர்நாடகம் வழங்கும் நீரில் இருந்துதான் புதுச்சேரிக்கும் தமிழகம் நீர் வழங்கி வருகிறது.
கர்நாடகத்தில் நீர் நிலைகளை ஆய்வு செய்த மத்திய குழு அங்கு 9 லட்சம் ஏக்கரில் பாசனம் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. ஆனால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் 65 சதவீத நிலப்பரப்பில் அதாவது சுமார் 5 லட்சம் ஏக்கரில் கர்நாடகம் பாசனம் செய்துள்ளது என்று அந்த மாநில அரசு கடந்த அக்டோபரில் உச்ச நீதிமன்றத்தில் கூறியது. இதன் மூலம் தவறான தகவலை நீதிமன்றத்தில் கர்நாடகம் அளித்துள்ளது.
ஆனால், காவிரி கண்காணிப்புக் குழுவோ ரபி பயிர் வகைகளைத் தவிர்த்து கர்நாடகம் 11.6 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பாசனம் செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. இது மூன்று பேர் அடங்கிய காவிரி நடுவர் மன்றம் விசாரித்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், கர்நாடக அரசுக்கு சாதகமாகவும் அமைந்தது.
நெல் உற்பத்தியில் பற்றாக்குறை: கர்நாடகத்தில் வறட்சி இல்லை. அந்த மாநிலத்தில் தேவையான தண்ணீர் உள்ளது. தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால் தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள 15 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கப்படும். அதனால் நாட்டின் நெல் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும். எனவே காவிரியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வைத்தியநாதன் கேட்டுக் கொண்டார்.
"உயர் தொழில்நுட்ப' வாதம்
தமிழகம் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள உகந்ததல்ல என்று கர்நாடக வழக்குரைஞர் அனில் திவான் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி டி.கே. ஜெயின் ""தமிழக மனுவுக்கு நீங்களும் பதில் மனு தாக்கல் செய்துள்ளீர்கள். எந்த அடிப்படையில் இதைக் கூறுகிறீர்கள்?'' என்றார். அதற்கு பதில் அளித்த திவான் ""தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை'' என்று கூறினார். அது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி ஜெயின் ""உங்களின் வாதம் உயர் தொழில்நுட்ப ரீதியாக உள்ளது. முதலில் தமிழகத்தின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறும் உங்களின் வாதத்தை முன்வையுங்கள்; மற்ற விவகாரத்தை பின்னர் விசாரிக்கிறோம்'' என்றார்.
மேலும் ""தண்ணீர் இல்லை என்றால் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்'' என்று திவான் வாதிட்டார். அதற்கு நீதிபதி ஜெயின் ""இரு தரப்பும்தான் பாதிக்கப்பட்டுள்ளன. அதை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்றார்.