கர்நாடக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்போம்
கர்நாடக பாஜக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்தால், அதை மஜத ஆதரிக்கும் என்று அந்தக் கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கெளடா தெரிவித்தார்.
கர்நாடக பாஜக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்தால், அதை மஜத ஆதரிக்கும் என்று அந்தக் கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கெளடா தெரிவித்தார்.
இதுகுறித்து பிஜாப்பூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பாஜகவில் உள்கட்சிப் பூசல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் சில எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறி வருகிறார். ஆனால், சட்டப்பேரவையில் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், அதை மஜத ஆதரிக்கும்.
பாஜகவுக்கும், எடியூரப்பாவின் கஜகவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட நாளில் இருந்து இந்தக் கருத்தை மஜத கூறி வருகிறது. ஆனால், எங்கள் ஆதரவை காங்கிரஸ் பொருள்படுத்தவில்லை. எடியூரப்பாவின் முயற்சியால் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை இழந்து, பாஜக அரசு கவிழ்ந்தால், ஆட்சியில் நீடிக்க ஜெகதீஷ் ஷெட்டருக்கு மஜத ஆதரவு அளிக்காது.
கர்நாடக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ், தன் பணியைத் திறம்பட செயல்படுத்தவில்லை. பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது. மாறாக, எடியூரப்பா உள்பட பாஜக அரசின் அமைச்சர்கள் பலரின் ஊழல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது மஜத மாநிலத் தலைவர் குமாரசாமிதான்.
எனது உடல்நிலை ஒத்துழைக்காததால், தேசிய அளவில் 3ஆவது அணிக்கு தலைமை வகிக்கும் நிலையில் நான் இல்லை. 3ஆவது அணி கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்பது வெளிப்படையான உண்மையாகும்.
தில்லி மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்தை அரசியல் கட்சிகள், சுயநலத்திற்காக அரசியலாக்கக் கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழ்வதைத் தடுக்கும் நோக்கில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யும் கடுமையான சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசிக்கலாம் என்றார் தேவ கெளடா.