காங்கிரஸ் நிர்வாகிகள் பதவி பறிப்பு
கட்சி விரோத நடவடிக்களையில் ஈடுபட்டதாக 2 முக்கிய நிர்வாகிகளின் பதவிகளை மாநில காங்கிரஸ் தலைவர் ஏவி.சுப்பிரமணியன் அதிரடியாக பறித்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்களையில் ஈடுபட்டதாக 2 முக்கிய நிர்வாகிகளின் பதவிகளை மாநில காங்கிரஸ் தலைவர் ஏவி.சுப்பிரமணியன் அதிரடியாக பறித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணைத்தலைவரும், செய்தி தொடர்பாளருமான ஜனார்த்தனன் கட்சிக்கு விரோதமான கருத்தை தெரிவித்துள்ளார். இதேபோல இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணைத்தலைவரும், சமூக வலைத்தள பிரிவின் பொறுப்பாளருமான எரமுடி சமூக வலைதளங்களில் கட்சிக்கு விரோதமான கருத்துகளை பரப்பினார். இவர்கள் 2 பேரும் கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ரொட்டி, பால் திட்டத்தை புதுவை அரசு நிறுத்தியிருப்பது கொடூரமானது. மதிய உணவின்றி மாணவர்கள் பள்ளிக்கு வருதை அறிந்து காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டுவந்தார். இதேபோல வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் பலர் காலையிலும் உணவு இல்லாமல் பள்ளிக்கு வருவதை அறிந்து சோனியா காந்தி ரொட்டி, பால் திட்டத்தை கொண்டுவந்தார்.
சோனியாகாந்தியின் கரங்களால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை சோனியாகாந்தியின் உருவப்படத்தை அறையில் வைத்திருக்கும் முதல்வர் ரங்கசாமி நிறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் அரசு கொண்டுவந்த பல திட்டங்களை ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே தடை செய்கின்றனர். ஏழை மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. ஆனால் இத்திட்டத்தை புதுவை அரசு அமல்படுத்தவில்லை.
காங்கிரஸ் கட்சியை எதிர்த்த தமிழக முதல்அமைச்சர்கூட இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். ஆனால் புதுவையில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தியும் இலவச கல்வியை அமல்படுத்தவில்லை. இதற்கு முதல்வர் ரங்கசாமிக்கு எது தடையாக உள்ளது
கடந்த 1992-ம் ஆண்டே ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்கக்கோரி மத்திய அரசிடம் நாங்கள் வற்புறுத்தினோம். ஆனால் இதை ஜிப்மர் ஊழியர்கள் எதிர்த்தனர். இதனால் அப்போது கைவிடப்பட்டது. தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.சில் 200 இடங்களை அதிகரித்துள்ள நிலையில் ஜிப்மரிலும் இடங்களை அதிகரிக்க வேண்டும். என் ஆர்.காங்கிரஸ் அரசுக்கு எதிராக காங்கிரஸ் 3 ஆண்டுகாலமாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தது.
இருப்பினும் புதுவை மக்கள் மீண்டும் என்ஆர்.காங்கிரசுக்கு வாக்களித்தது வருத்தத்தை அளிக்கிறது. அதே போல மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி புதுவை மற்றும் காரைக்காலுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார். ஆனால் மக்கள் அவரை வெற்றி பெறச் செய்யாதது காங்கிரசை திகைப்படைய செய்துள்ளது. இதனால் அரசுக்கு எதிரான போராட்டங்களை எடுத்துச்செல்ல காலதாமதமாகும் என்றார் சுப்பிரமணியன்.