கடந்த 2002 ஆம் ஆண்டில் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு மும்பையின் பாந்த்ரா பகுதியில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தியதாக சல்மான் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மும்பை அமர்வு நீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சல்மான் கான், மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் போதிய ஆதாரங்களை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி, அவரை விடுவித்து டிசம்பர் 10 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், குடிபோதையில் வாகனத்தை இயக்குவோரால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சல்மான் கான் வழக்கில், அவரது விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.