இந்தியா

நிறைவடைந்தது குளிர்காலக் கூட்டத்தொடர்; 47 மணி நேரம் செயல்படாத மாநிலங்களவை

இன்று நிறைவடைந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், மாநிலங்களவையின் 47 மணி நேரம் வீணானது.

PTI

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரின் போது கூச்சல் குழப்பத்தால் மாநிலங்களவையின் 47 மணி நேரம் வீணானது.

கூட்டத்தொடரின் இறுதி நாளன்று பேசிய மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஹமித் அன்சாரி, மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களின் செயல்பாடுகள் குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தொடரின் போது, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பான மசோதா, தேசிய நீர்வழித் தடங்கள் மசோதா உள்ளிட்ட 13 மசோதாக்கள் மக்களவையிலும், வணிகம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை ஏற்படுத்துவது தொடர்பான மசோதா, போனஸ் திருத்தச் சட்ட மசோதா, சிறார் நீதி சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன.

எனினும், ஆளும் பாஜக அரசு மிகவும் முக்கியமாகக் கருதிய சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா, இந்தக் கூட்டத்தொடரிலும் நிறைவேற்றப்படவில்லை.

கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில், லலித் மோடி விவகாரம், வியாபம் முறைகேடு ஆகிய விவகாரங்களை எழுப்பி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அந்தக் கூட்டத்தொடர் முழுவதும் நாடாளுமன்ற அலுவல்கள் முற்றிலும் முடங்கின.

"நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை வழக்கு விவகாரம், தில்லி கிரிக்கெட் சங்க விவகாரம் ஆகியவற்றை முன்னிறுத்தி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இந்தக் கூட்டத்தொடரிலும் நாடாளுமன்ற அலுவல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, மாநிலங்களவையில் மொத்தம் 47 மணிநேரம் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று மக்களையில் பேசிய, அதன் தலைவர் சுமித்ரா மகாஜன், "மலரவிருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நம் அனைவருக்கும் புதிய நம்பிக்கையும், புதிய ஆற்றலையும் அளிக்கும் என்று நம்புகிறேன். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்து வழிமுறைகளையும் நாம் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம், நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து கருத்தொற்றுமை ஏற்படுத்தலாம். நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், இயன்றவரை அதனை ஆக்கப்பூர்வமாக நடத்த முயல்வோம்' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT