இந்தியா

சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வந்த பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில்,

தினமணி

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வந்த பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில், அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 இதுதொடர்பாக இந்திய இளம் வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கோபால கௌடா, குரியன் ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
 சபரிமலை ஐயப்பன் கோயில் பொதுச் சொத்தாகும். அங்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அப்படியிருக்கும்போது, சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகப் பகுதிக்கு வந்து, கடவுளை பெண்கள் வழிபடுவதற்கு தடை விதிக்க கோயில் நிர்வாகத்துக்கு என்ன அதிகாரம் உள்ளது?
 பாலின சமத்துவத்துக்கு அச்சுறுத்தல்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதன் மூலம், பாலின சமத்துவம் சார்ந்த நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
 கடவுளை வழிபடுவதற்கு ஆண்களுக்கு மட்டும்தான் உரிமை உள்ளதா? பெண்களுக்கு கடவுளை வழிபடும் தகுதி இல்லையா? சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 1,500 ஆண்டுகளில் பெண்கள் யாரும் வழிபடவில்லை என்று உறுதியாக உங்களால் தெரிவிக்க முடியுமா?
 இந்தியாவில் தந்தையை விட தாயே உயர்வானவராக கருதப்படுகிறார். அவரையே நாம் முதன்மையானவராக வணங்குகிறோம். அத்தகைய பெண்களுக்கு, கோயில்களில் தடை விதிக்கக் கூடாது.
 சட்டத்தின்படியே முடிவு: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா? இந்த விவகாரத்தில் அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும். வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி உச்ச நீதிமன்றம் முடிவெடுக்காது. உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள் குறித்து 6 வாரங்களுக்குள் சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர் நீதிபதிகள். இதையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயில் சார்பில் மூத்த வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி வாதாடுகையில், "சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல நூற்றாண்டுகளாகவே பெண்களுக்கு தடை விதிக்கும் வழக்கம் தொடர்கிறது; அதை மனதில் கொண்டு, இந்த வழக்கு மீது உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
 சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியிருப்பது இது முதல்முறை அல்ல.
 இதற்கு முன்பு, கடந்த ஜனவரி மாதமும் இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT