நாளை எனக்குப் பரீட்சை: மான் கி பாத் நிகழ்ச்சியில் மோடி தமாஷ்
பொதுத் தேர்வுகள் நெருக்கும் இந்நேரத்தில் மாணவர்கள் கலக்கமின்றி எதிர்கொள்ள வேண்டும் என கூறிய பிரதமர் மோடி, நாளை தமக்கு பரீட்சை இருப்பதாக
பொதுத் தேர்வுகள் நெருக்கும் இந்நேரத்தில் மாணவர்கள் கலக்கமின்றி எதிர்கொள்ள வேண்டும் என கூறிய பிரதமர் மோடி, நாளை தமக்கு பரீட்சை இருப்பதாக பட்ஜெட் குறித்து நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
மான் கி பாத் (மனதிலிருந்து பேசுகிறேன்) என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அதன்படி இன்று பேசிய மோடி, அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அவரது இன்றைய உரை முழுவதும் மாணவர்களுக்காகவே இருந்தது.
Advertisement
''நண்பர்களே. உங்களது பரீட்சைகள் தொடங்குகின்றன. எனக்கும் நாளை பரீட்சை இருக்கிறது. நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் எனது பரீட்சையை எழுதுகின்றனர்'' என நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய நிதிலை அறிக்கை குறித்து நகைச்சுவையாக குறிப்பிட்டார் மோடி.
``பாருங்கள் நான் எவ்வளது ஆரோக்கியமாக உணர்கிறேன். எவ்வளவு நம்பிக்கையாக இருக்கிறேன். நாளை எனக்குப் பரீட்சை. நாளை மறுநாள் உங்களுக்கு. நாம் அனைவரும் வெற்றி பெறுவோம். அதன் மூலம் தேசமும் வெற்றி பெறும்.'' என்றார்.
வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் எவ்வித பதற்றமுமின்றி, எந்த மன சஞ்சலமும் இல்லாமல் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்றார் மோடி.
மாணவர்களுக்கு நேர்மறை சிந்தனைகளை தூண்டும் வகையில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த், பாரத் ரத்னா விருது பெற்ற அறிவியல் அறிஞர் சி.என்.ஆர். ராவ், ஆன்மிக குரு முராரி பாபு ஆகியோரது உரைகளும் மோடி நிகழ்ச்சியின் போது ஓலிபரப்பட்டன.
அவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.