வீரர்களின் தியாகம் நமக்கு உத்வேகத்தை அளிக்கின்றது: கார்கிலில் உயிர் நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
கார்கில் போரின் 17-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
புது தில்லி: கார்கில் போரின் 17-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான 1999-ம் ஆண்டு கார்கில் போரில், இந்தியா வெற்றி பெற உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 17-வது ஆண்டு நினைவுதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டரில் கூறியதாவது:
Advertisement
கார்கில் போரின் 17-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. தாய்நாட்டின் மீது கொண்டிருந்த நேசத்திற்காக, உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கார்கில் தியாகிகள் நினைவு தினம் நமது தேசத்தின் ராணுவ வீரர்களின் துணிச்சல், பலம் மற்றும் தியாகங்களை நமக்கு நினைவுப்படுத்துகிறது. அதோடு வீரர்களின் தியாகம் நமக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.