புது தில்லி: இந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனையாகும் பொருட்களில் சீன பொருட்களின் விற்பனை 30% அளவுக்கு சரியும் என்று இந்திய வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு மாநிலங்களின் சந்தைகளில் இருந்து தற்போது கிடைத்திருக்கும் நிலவரப்படி, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் சீன பொருட்களின் விற்பனை 30 சதவீதம் அளவுக்கு சரியும் என்று திட்டவட்டமாக தெரிய வந்துள்ளதாக அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வகையில் சீன பொருட்கள் இந்திய சந்தையில் நுழைந்து, பொருளாதாரம், சுகாதாரம் என பல துறைகளை பாதிக்கச் செய்து வருகிறது. அதே சமயம், உலக அரங்கில், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா குரல் கொடுத்து வருகிறது.
சீனாவின் மிகப்பெரிய வணிக சந்தையாக விளங்கும் இந்தியாவுக்கு எதிராக சீனா கொடி பிடிக்கும் போது, சீனாவுக்கு எதிராக இந்தியர்கள் ஒன்று திரண்டால் என்னவாகும் என்பதை நிரூபிக்க சமூக தளங்களில் சீனாவுக்கு எதிரான குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
இதன் எதிரொலியாக, இந்தியாவில் சீன பொருட்களின் விற்பனை மந்தமாகியுள்ளது என்று ஒரு நல்ல சமிக்ஞையும் கிடைக்கப் பெற்றுள்ளது.
சமூக தளங்களின் மூலமாக சீனாவுக்கு எதிரான விளம்பரம், குடும்பத் தலைவி மற்றும் குழந்தைகளையும் சென்றடைந்திருப்பது வரவேற்கத் தக்கதாகவே உள்ளது. இதில் உங்கள் பங்கும் இருக்க வேண்டும்.
பொது மக்களாகிய நாமும், சீன பொருட்களை தவிர்த்து பட்டாசு முதல் அனைத்தையும் உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களாக வாங்கி தீபாவளியை கொண்டாடுவதோடு, இந்திய பொருளாதாரத்தையும் முன்னேற்றுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.