இந்தியா

வெற்றிகரமாக அமைந்த பட்ஜெட் கூட்டத்தொடர்: பிரதமர் மோடி பெருமிதம்

DIN

ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடிந்ததால், நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாகவும், ஆளும் தரப்புக்கு வெற்றிகரமாகவும் அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், புதன்கிழமையுடன் (ஏப். 12) நிறைவடைகிறது. இதனையொட்டி, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டம் தொடர்பாக பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான அனந்த்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மக்களவையில் 21 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மோடி, இது ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் என்று தெரிவித்தார். சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான மசோதாக்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மசோதா ஆகிய முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதால் ஆளும் தரப்புக்கு இத்தொடர் வெற்றிகரமானதாக அமைந்துள்ளதாகவும் மோடி கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக-வுக்கு அமோக வெற்றி கிடைத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டில் தமது அரசின் மீது மக்கள் வைக்கத் தொடங்கிய நம்பிக்கை, தற்போது திடநம்பிக்கையாக மாறியிருப்பதை இது உணர்த்துவதாகத் தெரிவித்தார்.
"மத்தியில் பாஜக அரசு அமைந்து மூன்றாண்டுகள் முடிவடையவுள்ள தருவாயில், ஆளும் கட்சிக்கு ஆதரவான மனநிலை மக்களிடையே காணப்படுகிறது. ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கை நிலையை உயர்த்திட நமக்கு (ஆளும் கட்சிக்கு) இதுவே பொன்னான வாய்ப்பாகும். ஆகையால், அதனைக் கருத்தில்கொண்டு மேலும் பல வளர்ச்சித் திட்டங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்த வேண்டியுள்ளது' என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார் என்றார் அனந்த்குமார்.
இக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, அடுத்த மாதம் (மே) 25-ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலத்துக்கு, பாஜக அரசின் மூன்றாமாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் என்றார். "அதன் ஒரு பகுதியாக அமைச்சர்களும் எம்.பி.க்களும் ஏழை மக்களின் நலவாழ்வுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேற்கொண்டு வரும் 83 திட்டங்கள் குறித்தும், ஏழைகளின் மேம்பாட்டுக்காக மோடி அரசு உறுதிபூண்டுள்ளது குறித்தும் மக்களிடம் விரிவாக எடுத்துக் கூற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது' என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT