இந்தியா

பழம்பெரும் ஹிந்தி நடிகர் வினோத் கன்னா மறைவு: பிரதமர், திரைத் துறையினர் இரங்கல்

DIN

பிரபல ஹிந்தி நடிகரும், மக்களவை உறுப்பினருமான வினோத் கன்னா (70) உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் வியாழக்கிழமை காலமானார். திரைத் துறையில் மட்டுமன்றி பொது வாழ்க்கையிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய வினோத் கன்னாவின் மறைவு, அவரது ரசிகர்களையும், தொகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைத் துறையினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வயோதிகம் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவனையொன்றில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி வினோத் கன்னா அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை காலை வினோத் கன்னாவின் உயிர் பிரிந்தது. மறைந்த வினோத் கன்னாவுக்கு கவிதா கன்னா என்ற மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர்.
திரைவானில் மிளிர்ந்த நட்சத்திரம்: கடந்த 1946-ஆம் ஆண்டில் அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பெஷாவரில் (தற்போது பாகிஸ்தானுடன் உள்ளது) பிறந்தவர் வினோத் கன்னா. எளிமையான குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்த அவர், திரைத் துறையின் மீதிருந்த தீவிர ஈடுபாட்டின் காரணமாக மும்பைக்கு வந்தார்.
1968-இல் வெளியான 'மன் கா மீத்' என்ற திரைப்படத்தின் வாயிலாக தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய வினோத் கன்னா, ஆரம்ப காலங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார். பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்த அவர் கதாநாயகனாக உருவெடுத்தார்.
'மேரே அப்னே', 'மேரா காவ்ன் மேரா தேஷ்', 'ஹீரா பேரி', 'முக்கந்தர் கா சிக்கந்தர்', 'சத்யமேவ ஜெயதே' உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தன.
அமிதாப் பச்சன், ரிஷி கபூருடன் இணைந்து அவர் நடித்த 'அமர் அக்பர் அந்தோணி' என்ற திரைப்படம் ரசிகர்கள் மனதைக் களவாடியது. வெவ்வேறு உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து வினோத் கன்னா நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது திடீரென துறவறம் பூண்ட வினோத் கன்னா, 5 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் கலைத் துறைக்குத் திரும்பினார். இறுதியாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஷாரூக் கானுடன் இணைந்து 'தில்வாலே' படத்தில் அவர் நடித்தார்.
வினோத் கன்னாவின் கலைச் சேவையைப் போற்றும் வகையில் ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அரசியல் பயணம்: திரைப் பயணத்துக்கு மத்தியில் அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்ட வினோத் கன்னா பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 4 முறை எம்.பி.யாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்தத் தொகுதியில் அதிக பாலங்களை அவர் கட்டியது மக்கள் இடையே அவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தது. இதனால் 'பாலங்களின் நாயகன்' என்று அவரை தொகுதி மக்கள் அன்புடன் அழைப்பதுண்டு.
கடந்த 2002 மற்றும் 2003-இல் முறையே மத்திய சுற்றுலா - கலாசாரத் துறை அமைச்சராகவும், வெளியுறவுத் துறை இணையமைச்சராகவும் வினோத் கன்னா பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல்: வினோத் கன்னாவின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுட்டுரையில் (டுவிட்டர்) பிரதமர் வெளியிட்ட செய்தி:
மனங்கவர்ந்த நடிகராகவும், அர்ப்பணிப்புணர்வு கொண்ட தலைவராகவும், ஆகச் சிறந்த மனிதராகவும் வினோத் கன்னா என்றென்றைக்கும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு மறக்க இயலாத வலியை விட்டுச் சென்றுள்ளது என்று அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பாஜக தலைவர் அமித் ஷா, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வினோத் கன்னாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஜினி இரங்கல்
நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: எனது இனிய நண்பர் வினோத் கன்னா. நீங்கள் இல்லாத வெறுமை எங்களை வாட்டும். தங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். தங்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
வினோத் கன்னாவின் மறைவுக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரையுலகின் நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்கலை சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

கமல் இரங்கல்
நடிகர் கமல்ஹாசன் வியாழக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: புற்றுநோய் பாதிப்புக்கு எதிராக போராடிய வினோத் கன்னாவின் தைரியம், என்றும் நெஞ்சில் நிற்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT