வீடு மற்றும் மனைகள் விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக இயற்றப்பட்ட மனை வணிகச் சட்டம், திங்கள்கிழமை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது.
எனினும், இந்தச் சட்டத்தை ஏற்று இதுவரை 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே அறிவிக்கை வெளியிட்டுள்தால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.
மனை வணிகச் சட்ட அமலாக்கம் குறித்து மத்திய வீட்டுவசதி - நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
ஒன்பது ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, மனை வணிக ஒழுங்குமுறைச் சட்டம் திங்கள்கிழமை அமலுக்கு வருகிறது.
இதன் மூலம், வீட்டு மனை விற்பனைத் துறையில் "வாடிக்கையாளரே அரசர்' என்ற நிலையை ஏற்படுத்தும் ஒரு புதிய சகாப்தம் பிறக்கிறது.
வீடு மனை வாங்குவதில் வாடிக்கையாளரின் தன்னம்பிக்கை அதிகரித்து, தேவையும் அதிகரிக்கும் என்பதால், இந்தச் சட்ட அமலாக்கத்தின் மூலம் விற்பனையாளர்களும் பலனடைவர் என்றார் அவர்.
இந்தச் சட்டம் அமலாவதைத் தொடர்ந்து, தற்போது கட்டுமான நிலையில் இருக்கும் வீட்டு மனைத் திட்டங்களை 3 மாதங்களுக்குள் மனை வணிக ஒழுங்காற்று அதிகாரிகளிடம் விற்பனையாளர்கள் பதிவு செய்ய வேண்டும்.
எனினும், தற்போது உத்தரப் பிரதேசம், குஜராத், ஒடிஸா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களும், அந்தமான்-நிக்கோபார், சண்டீகர், தாத்ரா-நாகர் ஹவேலி, டாமன்-டையூ, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களும் மட்டுமே மனை வணிகச் சட்டத்தை ஏற்று அறிவிக்கை வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய வீட்டுவசதி - நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பொதுமக்களின் நிர்பந்தம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக ஏனைய மாநிலங்களும் விரைவில் மனை வணிகச் சட்டத்தை அமல்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த புதிய சட்டத்தின்படி, மனை-வணிக விற்பனையில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு கட்டுமானத் திட்டத்தையும் ஒழுங்காற்று அமைப்பிடம் பதிவு செய்வதுடன், திட்டத்தின் நிலை குறித்து ஒழுங்காற்று அமைப்பின் வலைதளத்தில் அவ்வப்போது பதிவு செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்கள் வீடு வாங்கும் விஷயத்தில், கட்டுமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை மீறி தாமதப்படுத்தும் காலத்துக்கு ஏற்றவாறு 12 சதவீத வட்டியை வாடிக்கையாளர்களுக்கும் தரவேண்டும். அதுபோல், வீடு வாங்குவதற்கு விற்பனையாளர்களிடம் 30 சதவீத தொகையை தவிர, மீதமுள்ள 70 சதவிகிதத்தை தனி வங்கிக் கணக்கில் பராமரிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், விற்பனையாளரிடம் பணம் பெற்று வேறு கட்டுமான திட்டத்தில் அதை செலவிடுவது தடுக்கப்படும் வகையில் இந்த சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், விதிமீறலில் ஈடுபடும் கட்டுமான உரிமையாளர்கள், முகவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம். இந்தச் சட்டம் அமலாக்கத்தை வரவேற்றுள்ள விற்பனையாளர்கள், வீடு மனைகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.