இந்தியா

ஏ.சி. வகுப்பு பயணிகளுக்கு இனி போர்வை கிடையாது: ரயில்வே முடிவு

DIN

ரயில்களில் ஏ.சி. வகுப்பு பயணிகளுக்கு போர்வைகள் வழங்கப்படுவதை நிறுத்த, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ரயில்வே அமைச்சக உயரதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ரயில்களில் ஏ.சி. வகுப்புகளில் பயணிப்பவர்களுக்கு விநியோகிக்கப்படும் போர்வைகளும், படுக்கை விரிப்புகளும் மிகவும் அசுத்தமாக இருப்பதாக மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை (சி.ஏ.ஜி.) அலுவலகம் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது, ரயில்வே துறைக்கு எதிராக நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுவதற்கு வித்திட்டது.
இதனைத் தொடர்ந்து, ரயில்களில் ஏ.சி. வகுப்புப் பயணிகளுக்கு போர்வைகள் வழங்கப்பட்டு வருவதை நிறுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, 'ஜம்மு மெயில்' அதிவிரைவு ரயிலின் ஏ.சி. வகுப்புகளில் போர்வைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏ.சி. வகுப்புகளில் முன்பதிவு செய்யும் பயணிகளிடம் அவர்களுக்கு போர்வை தேவையா, இல்லையா என்ற விவரத்தைக் கேட்டறிய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களைப் பொருத்து, மற்ற ரயில்களுக்கும் இத்தகைய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ரயில்வே அமைச்சகம் முடிவெடுக்கும்.
ஏ.சி. வகுப்புகளுக்கு போர்வை விநியோகம் நிறுத்தப்படும் அதே நேரத்தில், அந்தப் பெட்டிகளில் சீரான அளவு வெப்பநிலை நிலவுவது உறுதி செய்யப்படும். இதனால், பயணிகளுக்கு போர்வையை உபயோகிக்கும் தேவை ஏற்படாது என அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT