இந்தியா

ரயில்களில் பெண்கள் பயணிக்கலாமா? கேள்விக்குறியாகும் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

DIN


புது தில்லி: கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்கள் பெரிய அளவில் அதிகரித்திருப்பது கவலை அடையச் செய்துள்ளது.

ரயில் பயணத்தின் போது ஒரு நாளைக்கு 50 திருட்டுச் சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறைந்தது 2 என்ற அளவில் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் புள்ளி விவரங்களை தொகுத்ததில், சென்னை சென்ட்ரல், வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், ரயில் பயணத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடாகவும், உதவித் தொகையாகவும் ரூ.8.17 லட்சம் அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் இருந்தே குற்றச்செயல்கள் எவ்வளவு நடந்திருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

2016ம் ஆண்டில் ரயில்வேயில் நடந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 17,925 புகார்களும், 2015ம் ஆண்டில் 16,180 வழக்குகளும், 2014ம் ஆண்டில் 12,161 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிராக குற்றச்சம்பவங்களை எடுத்துக் கொண்டால் 2014ம் ஆண்டில் 454 வழக்குகள் பதிவான நிலையில், 2015ல் இது 553 ஆக உயர்ந்தது. மேலும், 2016ம் ஆண்டில் 606 ஆகவும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் அச்சமூட்டுகிறது.

ரயில் நிலையம் மற்றும் ரயிலில் பெண்களுக்கெதிரான குற்றங்கள், திருட்டு போன்ற சம்பவங்களை தடுப்பதில் இரண்டு வெவ்வேறு பாதுகாப்புப் படைகள் கையாள்கின்றன. ஆனால், ஒரே ஒரு அமைப்பு இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் வலியுறுத்துகிறது.

அதே சமயம், ரயில்வேயின் பாதுகாப்பு என்பது மாநிலங்களின் பொறுப்பு. குற்றங்களை தடுப்பது, வழக்குகளைப் பதிவு செய்தல், விசாரணை நடத்துதல், சட்டம் ஒழுங்கை பராமரிப்பது போன்ற சம்பவங்களை மாநில அரசுகள்தான் கையாளும். இதற்காக, ரயில்நிலையங்களில் மாநில அரசின் ரயில்வே காவல்துறையை பணியமர்த்தி, அவர்கள் குற்றச் செயல்களுக்கு எதிராக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பர்.

அதே சமயம், அரசின் ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி)யின் பணிக்கு ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) உறுதுணையாக இருக்கும். அதாவது, பயணிகள் மற்றும் பயணிகள் இருக்கும் இடங்களுக்கு பாதுகாப்பு அளித்தல், ரயில்வே சொத்துக்களை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, குற்றச் செயல்களுக்கு எதிராக இந்திய ரயில்வே சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும்.

சராசரியாக 2500 ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தினமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக 2200 ரயில்களில் மாநில அரசின் ரயில்வே காவல்துறையினர் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 344 முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பயணிகள் காண்காணிக்கப்படுகின்றனர். பயணிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் போது 182 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவுக்குப் பிறகும், பெண் பயணிகளுக்கு எதிராக குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பது அதிகரிக்கிறது என்றால்....

அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவதும், மகளிர் ரயில் பெட்டிகளில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வீரர்களை பணிக்கு அமர்த்துவதையும் மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.

சென்னையில் ஏராளமான பயணிகள் நின்றிருந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பிறகு தான், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா அதுவும் ஓராண்டுக்குப் பிறகு பொறுத்தப்பட்டது.  நுங்கம்பாக்கத்தில் பொறுத்திவிட்டால், மாம்பலம், கோடம்பாக்கம் என அடுத்தடுத்த ரயில் நிலையங்களின் பாதுகாப்பு நிலை என்ன?

இப்படி ஒரு ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டுமானால் கூட, ஒரு பெண் படுகொலை செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படை நிபந்தனையை வைத்திருக்கும் ரயில்வேயின் அலட்சியமே இப்படி குற்றச் செயல்கள் அதிகரிக்கக் காரணம் என்று சொல்கிறார்கள் பொதுமக்கள்.

பொதுமக்கள் ரயில் பயணங்களை பெரிதும் விரும்ப முக்கியக் காரணமே பாதுகாப்புதான். அதுவே இங்கு கேள்விக்குறியாகும் நிலையை மேலும் ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கலாமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT