இந்தியா

கருப்புப் பணம் தொடர்பான பிரதமரின் தகவல்: விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம்

DIN

வருவாய்த் துறை அளித்த புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே கருப்புப் பணம் தொடர்பான சில தகவல்களை பிரதமர் மோடி சுதந்திர தினத்தின்போது தெரிவித்ததாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
பிரதமரின் பேச்சை முன்னிறுத்தி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இத்தகைய விளக்கத்தை ஜேட்லி அளித்துள்ளார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி கருப்புப் பணம் தொடர்பாக சில புள்ளி விவரங்களைத் தெரிவித்தார். அதாவது, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு ரூ.2 லட்சம் கோடி கருப்புப் பணம் வங்கிக் கணக்குகளுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ.1.75 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தத் தகவல்கள் பல கேள்விகளுக்கு வித்திட்டது. காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் இதுகுறித்து கூறியதாவது:
வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் எவ்வளவு? என்பதை இன்னும் எண்ணிக் கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. அதற்கு பத்தாண்டுகளுக்கு மேல் கூட ஆகலாம். அவ்வளவு துரிதகதியில் இப்பணிகளை ஆர்பிஐ மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கருப்புப் பண டெபாசிட் குறித்து சில தகவல்களை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரது கூற்றும், ஆர்பிஐ-யின் கூற்றும் நேர் எதிராக உள்ளன. இதில் எது உண்மை? எது பொய்? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, இதுதொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் தில்லியில் செய்தியாளர்களிடம் அருண் ஜேட்லி புதன்கிழமை கூறியதாவது:
ரூபாய் நோட்டு வாபஸுக்கு பிந்தைய வங்கி டெபாசிட் விவரங்களை ஆர்பிஐ இன்னும் வெளியிடவில்லை. ஆனால், பிரதமர் அதுதொடர்பாக சில தகவல்களைத் தெரிவித்துவிட்டார் என்று குழம்ப வேண்டியதில்லை.
கருப்புப் பண டெபாசிட் குறித்து வருவாய்த் துறையினர் பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே பிரதமர் அக்கருத்துகளைத் தெரிவித்தார்.
இதில் ஆர்பிஐ தகவல்களின் அடிப்படையில் எதையும் பிரதமர் தனது உரையில் குறிப்பிடவில்லை என்றார் ஜேட்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT