இந்தியா

ஜேடியு உள்கட்சி பூசல்: சின்னத்துக்கு உரிமை கோருகிறது சரத் யாதவ் அணி

DIN

பிகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், கட்சியின் சின்னத்துக்கு (வில்) உரிமை கோரி சரத் யாதவ் அணியினர் விரைவில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
கட்சியைத் தோற்றுவித்தது சரத் யாதவ்தானே ஒழிய, முதல்வர் நிதீஷ் குமார்அல்ல என்று தெரிவித்துள்ள அவர்கள், தொண்டர்களின் ஆதரவு தங்களுக்கு மட்டுமே உள்ளதாகக் கூறியுள்ளனர்.
ஜேடியு கட்சிக்குள் நிலவி வரும் இத்தகைய உச்சகட்ட மோதலால் பிகார் அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.
லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருந்த ஜேடியு தலைவர் நிதீஷ் குமார், தனது முதல்வர் பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தார். கூட்டணிக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த முடிவை எடுத்த அவர், பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்தார்.
நிதீஷின் இந்த நடவடிக்கைகளுக்கு ஜேடியு மூத்த தலைவர் சரத் யாதவ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து, சரத் யாதவிடம் இருந்த ஜேடியு மாநிலங்களவை தலைவர் பதவியையும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் நிதீஷ் பறித்தார். இந்த சூழலில் நிதீஷுக்கு எதிராக அணி திரட்டும் நடவடிக்கைகளில் சரத் யாதவ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக பாஜகவை எதிர்க்கும் அனைத்து கட்சித் தலைவர்களையும் தனது பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க வைத்தார்.
தில்லியில் அண்மையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்பட 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக தனது ஆதரவாளர்கள் மாநாட்டையும் பாட்னாவில் சரத் யாதவ் சனிக்கிழமை நடத்தினார்.
இந்நிலையில், கட்சியின் சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிடப் போவதாக சரத் யாதவ் அணியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது ஆதரவாளரும், கட்சியின் மூத்த தலைவருமான அருண் ஸ்ரீவஸ்தவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜேடியு கட்சியைத் தோற்றுவித்தவர் சரத் யாதவ். இதில் முதல்வர் நீதிஷ் குமாருக்கு எந்தப் பங்கும் கிடையாது. எனவே, கட்சிக்கும், சின்னத்துக்கும் அவர் உரிமை கொண்டாட முடியாது. சின்னத்தை எங்களுக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் விரைவில் முறையிட உள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT