இந்தியா

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இணைப்பா? மத்திய அரசு பதில்

DIN

""திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துடன், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைப்பது குறித்து பரிசீலனை நடத்தப்பட்டது; ஆனால் அதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படவில்லை'' என்று மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் அமைப்பான "நீதி ஆயோக்' (மத்திய கொள்கைக் குழு) தெரிவித்துள்ளது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை (சிஐசிடி) திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துடன் ஒன்றாக இணைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.
இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, தமிழக அரசு தீவிர எதிர்ப்பைத் தெரிவித்தது.
எனினும், இந்தத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மறுத்தார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று அவர் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் அமைப்பாகத் திகழும் நீதி ஆயோக்கிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நீதி ஆயோக் அமைப்பின் நிர்வாகக் குழு அளித்திருக்கும் பதிலில், "இரு நிறுவனங்களையும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது; ஆனால் இறுதி முடிவெடுக்கப்படவில்லை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நிறுவனங்களையும் இணைக்க வேண்டிய காரணம் என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சுயாட்சி அதிகாரத்துடன் செயல்படும் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட துறைகளுடனும், அமைச்சகங்களுடனும் கலந்தாலோசனை நடத்துவது குறித்து நீதி ஆயோக் பரிசீலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதன்மீது இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசு உத்தரவையும் நீதி ஆயோக் அமைப்பு பகிர்ந்து கொண்டுள்ளது. அந்த உத்தரவில், செலவின மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைகளின் பேரில், மத்திய நிதியமைச்சகம் நீதி ஆயோக் அமைப்பை அணுகி, சுயாட்சி அதிகாரத்துடன் செயல்படும் நிறுவனங்களின் செயல்பாடுகளை தீவிரமாக ஆய்வு செய்து, அதை ஒன்றாக இணைப்பது குறித்த பரிந்துரையை அளிக்கும்படி கேட்டுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சுயாட்சி அதிகாரம் அளிக்கப்படுவதன் நோக்கம், எந்தத் தடையும் இன்றி தனது பணிகளில் அந்நிறுவனம் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ் பல்வேறு சுயாட்சி அதிகாரத்தைக் கொண்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன.
அந்த நிறுவனங்கள் இடையே ஒத்துழைப்பு இல்லாததுடன், அவை அனைத்தும் ஒரே பணியைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.
அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய அரசு ஆய்வு செய்வதற்கு இதுவே காரணமாகும். ஆனால், மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவன விவகாரம், இதிலிருந்து முழுவதும் வேறுபட்டது; அந்த நிறுவனத்தின் செயல்பாடுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட மாட்டாது' என்றார்.
தமிழ் மொழிக்கு கடந்த 2004-ஆம் ஆண்டில் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது. அதுதொடர்பான நிறுவனம், கடந்த 2006-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
அந்த நிறுவனம், கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து செயல்பட்டது. 2008-ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட தீவிர முயற்சியினால், அந்நிறுவனம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதன்பெயரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்று மாற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT