இந்தியா

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்கு பிரிட்டன் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்: லண்டன் நகர மேயர்

DIN

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்காக பிரிட்டன் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று லண்டன் நகர மேயர் சாதீக் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸுக்கு புதன்கிழமை வந்த அவர், ஜாலியன் வாலாபாக்கில் கடந்த 1919-ஆம் ஆண்டில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஜாலியன் வாலாபாக்கில் வைசாகி தினத்தில் கடந்த 1919ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட படுகொலையின் துயரம் எப்போதும் நமது நினைவை விட்டு நீங்காது. அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோருடன் எப்போதும் நமது சிந்தனைகள் இருக்கும். இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்புக் கேட்க வேண்டிய தருணம், பிரிட்டன் அரசுக்கு தற்போது வந்துள்ளது என்றார் சாதீக் கான்.
இதே கருத்தை, அங்குள்ள வருகை பதிவேட்டிலும் அவர் பதிவு செய்தார்.
இதேபோல், அமிருதசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற் கோயிலுக்கும் சாதீக் கான் புதன்கிழமை சென்றார். அங்கு அவர், உணவு உற்பத்தி செய்யும் இடத்துக்குச் சென்று, பக்தர்களுக்கு உணவு தயாரிக்கப்படும் விதத்தை வியப்புடன் பார்த்தார். அங்கு சாதீக் கானுக்கு ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக கமிட்டி சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'லண்டனில் வசிக்கும் நூற்றுக்கணக்கான சீக்கிய குடும்பங்களின் புன்னிய தலமாக பொற் கோயில் திகழ்கிறது. உலகம் முழுவதும் வாழும் லட்சக்கணக்கான சீக்கியர்கள், இங்கு வந்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்' என்றார்.
முன்னதாக, கடந்த 1919-ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சமடைந்திருந்த வேளையில், ஜாலியன் வாலாபாக் பகுதியில் கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்படி பிரிட்டன் படையினருக்கு பிரிகேடியர் ஜெனரல் டையர் உத்தரவிட்டார். அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஏராளமானோர் பலியாகினர்.
இந்தச் சம்பவத்துக்காக பிரிட்டன் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக விடுக்கப்பட்டு வருகிறது. பிரிட்டன் பிரதமராக டேவிட் கேமரூன் இருந்தபோது, ஜாலியன் வாலாபாக்குக்கு கடந்த 2013-ஆம் ஆண்டில் வந்தார். அப்போது அவர், அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பிரிட்டன் வரலாற்றில் மிகவும் வெட்கப்பட வேண்டிய சம்பவம் எனவும் குறிப்பிட்டிருந்தார். எனினும், அந்தச் சம்பவத்துக்காக அவர் மன்னிப்புக் கேட்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT