இந்தியா

ஆதார் இணைப்புக்கு மார்ச் 31 வரை அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

DIN

வங்கிக் கணக்கு, பான் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018 மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் செல்லிடப்பேசி எண்ணுடன் (சிம் கார்டு) ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை (2018 பிப்ரவரி 6) நீட்டிக்க முடியாது. ஏனெனில், தடையில்லாத செல்லிடப்பேசி சேவை கிடைக்க ஆதாரை செல்லிடப்பேசி எண்ணுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது என்று மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆதாருக்கு எதிரான வாதம்: ஆதார் திட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்துள்ள மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷியாம் திவான், "அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கும், வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதற்கும் ஆதாரை இணைக்க வேண்டுமென்று மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதாரை இணைக்காதவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' என்று வலியுறுத்தினார்.
கூடுதல் அவகாசம் தர தயார்: இதையடுத்து, அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஆதாரை திடீரென நிறுத்தவோ, தடை செய்யவோ முடியாது. வங்கிக் கணக்கு, பான் கார்டு ஆகியவற்றுக்கும், பல்வேறு நலத் திட்ட உதவிகளுக்கும் ஆதாரை இணைப்பதற்கான இப்போதுள்ள காலக்கெடுவை (டிசம்பர் 31) மேலும் நீட்டித்து 2018 மார்ச் 31-வரை அவகாசம் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. அதே நேரத்தில் செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை இணைக்க வழங்கப்பட்டுள்ள 2018 பிப்ரவரி 6-ஆம் தேதி என்ற கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டிக்காது. ஏனெனில், செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது என்றார் வேணுகோபால்.
அரசியல்சாசன அமர்வு முடிவெடுக்கும்: ஆதாருக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவது உள்பட இது தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் அரசியல்சாசன அமர்வு விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 
ஆதார் அட்டை விவகாரம் தொடர்பாக விசாரிக்க 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் விரைவில் அமைக்க இருக்கிறது. அப்போது, ஆதார் இணைப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்.
உறுதிப்படுத்திய மத்திய அரசு: முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் இதே விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில், அரசின் பல்வேறு நலத் திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக் கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கத் தயாராக உள்ளதாகவும், இதுவரை ஆதார் எண் பெறாதவர்களுக்கே இந்த முடிவு பொருந்தும் என்று கூறியிருந்தது. அதன் பிறகு கடந்த மாதம், வங்கிக் கணக்கு, பான் கார்டு ஆகியவற்றுடன் ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கத் தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இப்போது, அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆதாரின்அவசியம்

உதவித் தொகை, மானிய விலை சமையல் எரிவாயு, விவசாயக் கடன்கள், ஓய்வூதியத் திட்டங்கள் என அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு, ஆதார் எண் இணைப்பதை கட்டாயமாக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இது தவிர வங்கிக் கணக்கு, செல்லிடப் பேசி எண் ஆகியவற்றுடனும் ஆதாரை இணைப்பது கட்டாயமாகியுள்ளது. ஆனால், ஆதார் அட்டை வழங்குவதற்காக கை விரல் ரேகை, கண் கருவிழிப்படலம் ஆகியவை பதிவு செய்யப்படுகின்றன. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள தனிநபர் உரிமைக்கு எதிரானது என்பதும், ஆதாரை இணைக்குமாறு கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பதும் ஆதார் எதிர்ப்பு மனுதாரர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT