இந்தியா

எம்.பி. பதவி தகுதி நீக்கத்துக்கு எதிரான சரத் யாதவின் மனு மீது இன்று விசாரணை

DIN

மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக ஐக்கிய ஜனதா தள முன்னாள் தலைவர் சரத் யாதவ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, தில்லி உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.14) நடைபெறவிருக்கிறது.
பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸýடனான மகா கூட்டணியில் இருந்து கடந்த ஜூலை மாதம் விலகினார். பின்னர், பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தார். இதனை, அக்கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் விரும்பவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் அதிருப்தி அணி உருவானது.
இதனிடையே, பிகாரில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில், கட்சி உத்தரவையும் மீறி சரத் யாதவ், அவரது ஆதரவாளர் அலி அன்வர் ஆகியோர் பங்கேற்றதையடுத்து, இருவரது மாநிலங்களவை எம்.பி. பதவிகளையும் பறிக்க ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்தது. இதுதொடர்பாக, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் மாநிலங்களவை ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் ராமச் சந்திர பிரசாத் சிங் கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில், மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து சரத் யாதவ் மற்றும் அலி அன்வரை தகுதி நீக்கம் செய்து, வெங்கய்ய நாயுடு கடந்த 4-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தில் சரத் யாதவ் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். அதில், தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ளும் முன், தனது தரப்பு விளக்கத்தை முன்வைக்க மாநிலங்களவைத் தலைவர் வாய்ப்பு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதி விபு பக்ரூ முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சரத் யாதவ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை (டிச.15) தொடங்கவிருப்பதால், மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால், சரத் யாதவ் தகுதி நீக்கம் தொடர்பான மாநிலங்களவைத் தலைவரின் உத்தரவை முழுமையாக ஆராய விரும்புதால், மனுவை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். அதனைஏற்றுக் கொண்ட கபில் சிபல், வியாழக்கிழமை தாம் ஆஜராவதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT