முகப்பு
இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விலையை மாதந்தோறும் உயர்த்தும் முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு

எல்பிஜி சிலிண்டர் விலையை மாதந்தோறும் உயர்த்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. மத்திய அரசின் ஏழைகளுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர் இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு முரணாக விலை

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

எல்பிஜி சிலிண்டர் விலையை மாதந்தோறும் உயர்த்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. மத்திய அரசின் ஏழைகளுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர் இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு முரணாக விலை உயர்த்தும் நடவடிக்கை இருந்ததால் அந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சிலிண்டர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கில், கடந்த ஜூன் மாதம் முதல் சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூ.4 உயர்த்திக்கொள்ளக் கோரி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடந்த மே 30-ஆம் தேதி உத்தரவிட்டது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை விலை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் இலவச எல்பிஜி சிலிண்டர் இணைப்புக்கு முரணாக இந்த நடவடிக்கை இருப்பதாக மக்கள் கருதுவார்கள் என்பதால் கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு தனது உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டது. இருப்பினும், அதன்பிறகு வரிகள் காரணமாக சிலிண்டர் விலை உயர்ந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.2 என்ற வீதத்தில் சிலிண்டர் விலை 10 முறை உயர்த்தப்பட்டது.
தற்போது ஒவ்வோர் இல்லத்துக்கும் ஆண்டுதோறும் 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் கிடைக்கின்றன. கூடுதலாக வாங்கும் சிலிண்டர்கள் சந்தை விலையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 17 மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலையில் ரூ.76.5 உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 18.11 கோடி வாடிக்கையாளர்களுக்கு மானியமாக அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 3 கோடிக்கும் அதிகமான ஏழைப் பெண்கள் மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தின்கீழ் எல்பிஜி சிலிண்டர் இணைப்பு பெற்றவர்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று எல்பிஜி மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் உள்பட மொத்தம் 2.66 கோடி வாடிக்கையாளர்கள் மானியம் பெறவில்லை.
 

முழு கட்டுரையைப் படிக்க →