இந்தியா

மனநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு மறுவாழ்வு

DIN

மனநோயாளிகள் பூரண குணமடைந்த பிறகு, சமூகத்தில் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையிலான திட்டங்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்வேறு வகையான மனநோய்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவ மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. அங்கு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த நபர்களில் பெரும்பாலானவர்களை, அவர்களது உறவினர்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்வதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனநோயாளிகள் என்ற பெயரால் அவர்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மனநோயாளிகள் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு பூரண குணமடைந்தாலும், அவர்களுக்கு சமூகத்தில் மறுவாழ்வு கிடைப்பதில்லை. இந்த விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது. மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சொந்த உறவுகளாலேயே கைவிடப்படும் அவல நிலை நீடிக்கிறது.
அவர்களுக்கான வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். மனநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களையும், கொள்கைளையும் மத்திய அரசு உடனடியாக வகுக்க வேண்டும்.
அந்தத் திட்டங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்த பிறகு, அவை மாநில அரசுகளில் கருத்தறிவதற்காக அனுப்பப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது வாதிட்ட மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் ரஞ்சித் குமார், "இந்த விவகாரத்தில் சமூக நீதி, சுகாதாரம் ஆகிய இரு மத்திய அமைச்சகங்களின் கருத்தை கேட்டறிவது அவசியம்; எனவே உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்' என்றார்.
இதையடுத்து, எட்டு வாரங்களுக்குள் இதுகுறித்த பதிலை அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT